தனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்!

கலைஞரின் மகன், திமுகவின் தென்மண்டல தளபதி, முன்னாள் மத்திய அமைச்சர் என, கட்சியில் இருந்து நீக்கப்படும் வரை, திமுகவின் முக்கிய அதிகார மையங்களில் ஒன்றாக திகழ்ந்தவர் மு.க.அழகிரி.

திமுக தலைவராக கலைஞர் இருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, அவரது மறைவுக்கு பின்னர் முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டார்.

அதன் காரணமாக அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும், ஸ்டாலின் தலைமையை ஏற்று மீண்டும் திமுகவில் ஐக்கியம் ஆயினர். ஆனாலும், அழகிரி மீண்டும் திமுகவில் இணைந்தாலோ அல்லது தனிக்கட்சி தொடங்கினாலோ, அவரது ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் அவரை நோக்கி சென்று விடுவார்கள் என்றே சொல்லப்பட்டது.

ஆனாலும், கடந்த காலங்களில் அதிகம் வெளியில் வராமல் ஒதுங்கியே இருந்த அழகிரி, சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, கடந்த சில நாட்களாக அவரது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார்.

ஸ்டாலின் தம்மை நேரடியாக அழைத்து பேசி, கட்சியில் முக்கிய பொறுப்பு அளித்தால் மீண்டும் திமுகவில் சேர்ந்து செயல்படுவது அல்லது தனிக்கட்சி தொடங்கி திமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதுதான், அழகிரியின் தற்போதைய முடிவாக இருக்கிறது.

அழகிரி மீண்டும் திமுகவுக்கு வந்தால், தென் மாவட்டங்களில் திமுகவின் வலிமை கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அழகிரியை சமாளிப்பது மிகவும் கடினம். மேலும், ஸ்டாலின் தலைமைக்கு கூட அது சவாலாக அமைந்து விடும்.

அதனால், அழகிரியை மீண்டும் திமுகவுக்குள் கொண்டு வருவதை ஸ்டாலினோ, அவரது ஆதரவாளர்களோ கூட விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தமது வலிமை என்ன? என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அழகிரி, திமுக தன்னை கைவிட்டால், தனிக்கட்சி என்ற அஸ்திரத்தை எடுத்து அதை திமுகவுக்கு எதிராக பிரயோகப்படுத்துவார் என்றே பலரும் கூறுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக அல்லது, பல தொகுதிகளில் அக்கட்சிகளின் வெற்றிகளை பதம் பார்த்து, பெரும்பான்மை இல்லாமல் செய்யவேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு அழகிரியை பாஜக நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், தினகரனின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை பாஜக பி-டீமாக களமிறங்கும் என்று சொல்லப்படுகிற நிலையில், இந்த கூட்டணியில் அழகிரியும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்த கூட்டணியின் இன்னும் சில உதிரி கட்சிகளையும் இணைத்து அதை பாஜக பின்னால் இருந்து இயக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளும் பெற்ற வாக்குகள் கிட்டத்தட்ட 9 சதவிகிதமாகும். இத்துடன் இன்னும் சில உதிரி கட்சிகளை சேர்த்தால் 10-13 சதவிகித வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது.

இந்தக் கூட்டணி பெறும் வாக்குகள், அக்கட்சிகளுக்கு வெற்றியை தராது என்றாலும், பீகாரில் சிராக் பஸ்வான், ஒவைசி கட்சிகளை போன்று பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை மாற்றி அமைத்து விடும்.

அதனால், திமுகவோ அல்லது அதிமுகவோ தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது, தமிழகத்தில் அமையப்போகும் கூட்டணி அரசை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக இருக்கும்.

இந்த திட்டத்தின்படியே, ஐந்து சதவிகிதம் மற்றும் அதற்கு குறைவான   வாக்கு வங்கியை கொண்டிருக்கும் கட்சிகளையும், சில குறிப்பிட்ட தொகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள சிறு கட்சிகளையும், அழகிரி போல கட்சியை உடைத்து வெளியில் வருபவர்களையும் ஒன்றிணைக்கும் பணியே தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் பல சுவையான காட்சிகள் அரங்கேறும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறது தமிழக அரசியல் அரங்கம்.