இயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை!

ஒரு நாள், ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவுகள் நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும், கப்பல்கள் மிதப்பதும், விமானங்கள் பறப்பதும் கூட நிறுத்தப்படலாம். ஆனால், உங்களுக்கான உணவை நீங்கள் உற்பத்தி செய்ய பழகியிருந்தால், இதையெல்லாம் எண்ணி அஞ்ச வேண்டியதில்லை என்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் சொல்லி இருந்தார்.

கொரோனா என்னும் கொடிய நோய், உலகின் பல நாடுகளையும் மாதக்கணக்கில் முடக்கிப்போட்ட, இந்த காலகட்டத்தில் நாம் அதை முழுமையாக அறியலாம். அவரது சிந்தனை எவ்வளவு தீர்க்கதரிசனம் என்பதை நாம் உணரலாம்.

அவர் வலியுறுத்திய இயற்கை விவசாயத்தை இன்னும் பெரிய அளவில் நாம் முன்னெடுத்து இருந்தால், கொரோனா நமக்கு இவ்வளவு பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி இருக்காது என்பதை நாம் இப்போதாவது உணர வேண்டும். நம்மாழ்வார் வார்த்தையை இப்போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி, மத்திய அரசே ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறது.

கொரோனா உச்ச கட்டத்தில் இருந்த கடந்த செப்டம்பர் மாதமே, டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “ஸ்டேட் ஆஃப் ஆர்கானிக் ஆண்டு நேச்சுரல் பார்மிங்”  (State of Organic and Natural Farming)  என்ற நூலில், இயற்கை விவசாயத்தில் இந்தியாவின் நிலையும், தற்போது முன்னெடுக்க வேண்டிய திட்டங்களின் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளதே இதற்கு சான்றாகும்.

அண்மைக்காலமாக பன்றி காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சிக்கன் குனியா போன்ற நோய்கள் பலரது உயிரை பறித்தன. தற்போது வந்த கொரோனா என்ற நோய் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான உயிர்களை பறித்து, அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி விட்டது.

இத்தகைய நோய்களை  எல்லாம் முழுமையாக கட்டுபடுத்த கூடிய அலோபதி மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், நில வேம்பு கஷாயம், கபசுர குடிநீர், பப்பாளி இலை கஷாயம் போன்ற நமது பாரம்பரிய மருந்துகளே எண்ணற்ற காய்ச்சல்களுக்கு அரு மருந்தாக விளங்கியது. இன்னும் கொரோனாவை எதிர்க்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதுபோன்ற இயற்கை மருத்துவ முறைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனால், நமது முன்னோர்கள் கடைபிடித்த இயற்கை விவசாயம், இயற்கை மருத்துவம் போன்ற பாரம்பரிய முறைகளை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இயற்கை விவசாயம் என்ற விழிப்புணர்வை நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்ற எத்தனையோ பெரியோர்கள் வலியுறுத்தியும், நம்மால் இன்னும் இயற்கை வேளாண்மையை முழுமையாக முன்னெடுக்க முடியவில்லை.

கடந்த மார்ச் மாதம் வெளியான இந்திய தேசிய விவசாய அறிக்கையின் படி, இந்தியாவில் வெறும் 2  சதவிகிதத்திற்கும் குறைவாகவே இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையின்படி நாட்டில்       346.7 மில்லியன் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதில்   68 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே இயற்கை விவசாயம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் இருந்தே, இன்னும் நாம் இயற்கை விவசாயத்தை முழுமையாக தொடங்கவில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இயற்கை விவசாயம் என்பது, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாமல், பசுந்தால் உரங்கள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்படும் நமது பாரம்பரிய விவசாய முறையாகும். இத்தகைய விவசாயத்தின் மூலம் விளையும் உணவுப்பொருட்களில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதுடன், உடலுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. அனைத்துக்கும் மேலாக விளை நிலங்கள் மலட்டுத் தன்மை அடைவதில்லை. சாகுபடிக்கும் துணைபுரியும் பல்லுயிர் பெருக்கத்தை தடுப்பதில்லை. பருவநிலை மாற்றத்திற்கும், இயற்கை சேதங்களுக்கும் வழிவகுக்கும் எந்தவித ஆபத்தையும் விளைவிப்பதில்லை. சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதில்லை.

ஆனால், ரசாயன உரங்கள், மண்ணில் வாழும் மண்புழு மற்றும் நுண்ணுயிர்களை அழித்து, மண்ணின் வளத்தையும் கெடுத்து மலடாக்கி விடுகின்றன. அதேபோல், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயிர் வளர்ச்சிக்கு துணைபுரியும் பூச்சிகளையும், நுண்ணுயிர்களையும் அழித்து விடுகின்றன. அத்துடன் உணவுப்பொருட்களையும் நஞ்சாக்கி விடுகின்றன. அதனால், அந்த உணவுப்பொருட்களில் நஞ்சு கலந்து பல்வேறு நோய்கள் ஏற்பதுவதுடன், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுகின்றன.

இதன் காரணமாகவே, நாம் மீண்டும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தான், மத்திய அரசும், உலக நாடுகளின் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. எனவே, இயற்கை விவசாயம் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை மறுப்பதற்கில்லை.

இயற்கை விவசாயத்தில் போதுமான அளவு விளைச்சல் கிடைக்குமா? அதற்கான சந்தை வாய்ப்புகள் எப்படி?, அதற்காக விவசாயிகளும், அரசும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? இயற்கை விவசாயத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பன  குறித்து அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.