பீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி!

மத்தியில் ஆள்வது காங்கிரசாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும், அவர்களது ஒரே திட்டம் வலுவான மாநில கட்சிகளை வலுவிழக்க செய்வதுதான். அதேபோல், அந்தந்த தேசிய கட்சிகளில் உள்ள மாநில தலைவர்களும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதும் கூட.

இந்த முயற்சிகள் சில சமயங்களில் பலன் அளிப்பதும் உண்டு பலனளிக்காமல் போவதும் உண்டு. ஆனால், அதற்கான முயற்சிகள் மட்டும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.

இதே பாணியை பின்பற்றி, பீகாரில் சிராக் பஸ்வான் மூலம் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மண்ணைக் கவ்வ வைத்தது பாஜக. அதனால், தற்போது முதல்வர் பதவியை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார் நிதிஷ் குமார்.

இநிலையில், தமிழகத்திலும் கணிசமான வாக்கு வங்கியுடன் இருக்கும் சில கட்சிகளை பயன்படுத்தி திமுக மற்றும் அதிமுகவை பலவீனப்படுத்தி, ஆட்சி அமைக்க போதுமான இடங்களை பெற முடியாமல் செய்யும் முயற்சியை செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு, தினகரனின் அமமுக, கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சியை பயன்படுத்தவது குறித்து, பாஜக யோசித்து வருவதாக  தரப்பில் சொல்லப்படுகிறது.

அதற்கு முன், கடந்த மக்களவை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை பார்ப்பது அவசியம்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில், அதிமுக கூட்டணி 30.09 சதவிகித  வாக்குகள் பெற்று ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அதில் அதிமுகவுக்கு 18.72 சதவிகிதமும், பாமக    5.49 சதவிகிதமும், பாஜகவுக்கு    3.66 சதவிகிதமும், தேமுதிக   2.22 சதவிகித வாக்குகளும் கிடைத்தன.

தி.மு.க கூட்டணி 52 சதவிகித வாக்குகளை பெற்று 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் திமுகவுக்கு 33.18  சதவிகிதமும்,  காங்கிரஸ் கட்சிக்கு 12.92 சதவிகிதமும், இடதுசாரி கட்சிகளுக்கு 4.87 சதவிகிதமும்,  வி.சி.கவுக்கு 1.2 சதவிகித வாக்குகளும் கிடைத்தன.

கடந்த மக்களவை தேர்தலில் தனித்து நின்ற அமமுக 5.13 சதவிகித வாக்குகளை பெற்றது. நாம் தமிழர் கட்சி   3.93 சதவிகிதமும், மக்கள் நீதி மய்யம் 3.77 சதவிகித வாக்குகளையும் பெற்றன. இம்மூன்று கட்சிகளின் வாக்குகளை கூட்டினால் அதுவே  13 சதவிகிதத்திற்கும் அதிகமாக வருகின்றன.

குறிப்பாக சேலம் மக்களவை தொகுதியில், மக்கள் நீதி மய்யம் 58 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோல், அமமுக   52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி   33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெற்றுள்ளன. நோட்டாவிற்கு 17 ஆயிரம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் பிரிபடாமல் இருந்தால், திமுகவின் வெற்றி கேள்விக்குரியதாக இருந்திருக்கும்.

மேலும், தேனி தொகுதியில் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1 லட்சத்து  44 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால், இந்த தொகுதியில் 76 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே  ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

அதேபோல் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சுமார் ஒன்றரை  சதவிகித அளவிலான வாக்கு வித்தியாசத்தில்தான்  மட்டுமே திமுக தமது வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 1.07 சதவிகித வாக்குகளை பெற்றிருந்ததை கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதனால், அமமுக, ம.நீ.க, நா.தா.க போன்ற கட்சிகளால் வெற்றியை ஈட்ட முடியாமல் போனாலும், பல தொகுதிகளில் திராவிட கட்சிகளின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது உண்மை.

இது போன்ற உதிரி கட்சிகளின் வாக்கு கணக்குகளை சரியாகப் போட்டதன் விளைவாகவே, பீகார் தேர்தலில், சிராக் பஸ்வான் கட்சி தனித்து களமிறங்கியது. அந்தக் கட்சி ஒரே இடத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், 30 க்கும் மேற்பட்ட இடங்களில், நிதிஷ்குமார் கட்சியின் வெற்றியை பதம் பார்த்து விட்டது.

தற்போது, இதே பார்முலாவை தமிழகத்தில் பயன்படுத்தி, பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவுக்கு தோல்வியை ஏற்படுத்தி, யாருக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இல்லாமல் செய்வதே, பாஜகவின் அடுத்த திட்டம் என்று கூறப்படுகிறது.

2016  சட்டமன்ற தேர்தலில், அரியலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சிவசங்கரை, அதிமுக சார்பில் போட்டியிட்ட தாமரை ராஜேந்திரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அதற்கு, இந்திய ஜனநாயக கட்சியின் சுமார் நான்காயிரம் வாக்குகள் அதிமுகவுக்கு திருப்பி விடப்பட்டதே காரணம் என்று கூறப்பட்டது.

அதே பாணியில், அதிமுக மற்றும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகளில், அமமுக, மநீம, நாதக போன்ற கட்சிகளின் வாக்குகளை மடை மாற்றிவிடுவதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்றும் கூறப்படுகிறது.

எனினும், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.