பீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி!

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இன்று அதிகாலைக்குள் முழுமையாக வந்து விட்டன. ஆளும் ஐக்கிய ஜனதாதள – பாஜக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட கூடுதலாக மூன்று இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்க தயாராகி விட்டது.

இதையடுத்து, நிதிஷ் குமாரே நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கூற்று உண்மையே, ஆனாலும், நிதிஷ் குமார், பாஜகவை விட குறைவான இடங்களில் வெற்றி பெற்று வெறும் 43 எம்.எல்.ஏ க்களை மட்டுமே வைத்திருப்பதால், அவர் எத்தனை காலம் முதல்வராக நீடிப்பார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகள் என அனைத்திலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டது.

அதற்கேற்ப, தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் வரை இந்த இழுபறிகள் நீடித்த வண்ணமே இருந்தன. இருந்தாலும் இறுதியில் ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தயார் நிலையில் உள்ளது.

இந்த தேர்தலில், 115 இடங்களில் போட்டியிட்ட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதளம்    43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற  28 இடங்களை அக்கட்சி இழந்துள்ளது.

ஆனால்,   110 இடங்களில் போட்டியிட்ட பாஜக  74 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதலாக 21 இடங்களை கூடுதலாகப் பெற்றுள்ளது.

மோடியின் ஆதரவுடன், நிதிகுமாரின் எதிர்ப்பாளராக களமிறங்கிய சிராக் பஸ்வான், ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும், பல இடங்களில் நிதிஷ்குமாரின் வெற்றியை பதம் பார்த்துள்ளார்.

மாநில கட்சிகளின் செல்வாக்கை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் மறைமுக செயல் திட்டம், சிராக் பஸ்வானின் தனி ஆவர்த்தனம் மூலம் பீகாரில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

பீகாரில் நான்காவது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பொறுப்பேற்றாலும், லாலுவிற்குப் பிறகு பீகாரில் வலிமையான அரசியல் தலைவராக உருவெடுத்த, அவரது செல்வாக்கு இனி சரியும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

நிதிஷ் குமாரின் வயது, அவரது கட்சியில் செல்வாக்குள்ள இரண்டாம் நிலை தலைவர்கள் இல்லாமை போன்றவையே அதற்கு வழி வகுத்து விடும். பாஜக எதிர்பார்த்தது இதைத்தான்.

அடுத்து, தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதளத்தின் வளர்ச்சியை மிகவும் உற்று நோக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட கட்சிகளின் வெற்றி என்ற அடிப்படையில்,  அவரது கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்று அது முதலிடத்தில் உள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெறும்  19  இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது.

தற்போது, ஐக்கிய ஜனதாதளத்தை விட பாஜகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், நிதிஷ் குமாரே முதல்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாஜக கூட்டணி நம்பிக்கை தன்மை அற்றது என்ற இமேஜை அது உடைக்க முயல்கிறது.

மேலும், தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால், பாஜகவுக்கு அந்த இமேஜ் மிகவும் அவசியமாகிறது.

இந்த தேர்தல்கள் முடிந்த பின்னர், பீகாரில் நிதிஷ்குமாரின் முதல்வர் பதவிக்கு பிரச்சினை எழ வாய்ப்பு உண்டு. அதே சமயம், நிதிஷ் குமாருக்கு அதிக நெருக்கடி கொடுத்தால்,75 இடங்களை வைத்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளமும்,  19 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சியும், மகராஷ்டிரா பாணியில் எதிர்வினை ஆற்றக்கூடும்  என்பதால், பாஜக கொஞ்சம் அடக்கியே வாசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி இருப்பினும், மாநிலத்தில் செல்வாக்குள்ள கட்சிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்ற பாஜகவின் செயல் திட்டம், நிதிஷ்குமார் விஷயத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.