அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்: துணை அதிபராகிறார் கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் 46 அதிபராக, ஜனநாயக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ளார். துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி ஏற்கிறார்.

உலகின் முக்கிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய அமெரிக்காவில், குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்ற இரு கட்சிகளே பிரதானமாகும். இதில் குடியரசு கட்சி வலது சாரி சிந்தனையையும், ஜனநாயக கட்சி இடது சாரி சார்ந்த சிந்தனையையையும் கொண்ட கட்சிகளாகும்.

இந்நாட்டின் அதிபர் பதவிக்கான காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். ஒருவர் குறைந்த பட்சம் இரண்டு முறைக்கு மேல், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை. இது எழுதப்பட்ட சட்டம் இல்லை என்றாலும், தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்படுபவர்கள், கூடுமானவரை தொடர்ச்சியாக இரு முறை அப்பதவி வகிப்பதே பெரும்பாலான சமயங்களில் நிகழ்ந்துள்ளது. ஒரு சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும், இரண்டாவது முறை அதிபராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது குடியரசு கட்சியின் சார்பில் அதிபராக இருந்து வரும் ட்ரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, கடந்த 3 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மாகாண வாரியாக 270 எலெக்ட்ரல் வாக்குகளை பெற்றால் மட்டுமே அதிபராக பதவி ஏற்க முடியும். அதன்படி, கிட்டத்தட்ட  290 எலெக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் ஜோ பைடனின் வெற்றி உறுதியாகி உள்ளது. தற்போதைய அதிபர் ட்ரம்ப்புக்கு  214 வாக்குகளே கிடைத்துள்ளன.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் 1948 ம் ஆண்டு நவம்பர்  20 ம் தேதி, பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஸ்க்ராண்டன் என்ற ஊரில் பிறந்தவர்.  36 ஆண்டுகளாக அமெரிக்க செனட் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். பராக் ஒபாமா அதிபராக இருந்த எட்டு ஆண்டுகள், துணை அதிபராக இருந்து, அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பைடன்.

ஜோ பைடன் 1966-ல் நீலியா என்பவரை மணந்தார். அவர்களுக்கு நவோமி, ராபர்ட், மூன்றாம் ஜோசப் ஆகிய மூன்று குழந்தைகள். நீலியாவின் இறப்புக்குப் பின், 1977-ல் ஜில் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியரின் ஒரே பெண் குழந்தை ஆஷ்லே.

அமெரிக்க துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், பொறுப்பேற்க உள்ளார். அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக துணை அதிபராக பொறுப்பேற்கும் பெண்மணியும் இவரே.