குரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்!

தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களிலேயே வர இருப்பதால், ஆட்சி நமதே என்று கூறி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு கட்சியின் அமைப்பு ரீதியான பலம், தொண்டர்களின் உழைப்பு ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளும் வகையில், உத்தி வகுப்பாளர்கலான பிரசாந்த் கிஷோரை திமுகவும், சுனிலை அதிமுகவும் நம்பி வருகின்றன.

திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளும், தனித்து நின்று வெற்றி வாகை சூடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை அறிந்த கூட்டணி கட்சிகள், முடிந்தவரை தங்களது பேரத்தை வலுப்படுத்தி வருகின்றன.

பாஜக, பாமக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளுமே துணை முதல்வர் பதவி கேட்டு நிர்பந்தித்து வருவதால், அவர்களை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல், அதிமுக விழி பிதுங்கி வருகிறது.

மறுபக்கம், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில், காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இடையே முரண்பட்டு ஏற்பட்டுள்ளது. இது திமுக கூட்டணியை பாதிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இதனிடையே, நடிகர்கள் ரஜினி தரப்பில், வாட்ஸ் அப் வாயிலாக ஒரு தகவல் வெளியானது. அது பொது மக்களின் நாடித்துடிப்பை அறிய முற்படும் முயற்சியாகவே கூறப்பட்டது. ஆனால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால், வழக்கம் போல, பட்டதும் படாமல் சிலவற்றை கூறிவிட்டு ரஜினி நழுவி விட்டார்.

அதேபோல், நடிகர் விஜய்யின் பெயரில், அவரது தந்தை ஒரு கட்சியை தொடங்கி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அறிவிப்பு வெளியான, சில மணி நேரங்களிலேயே, அவருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நடிகர் விஜயின் மறுப்பு வெளியானது. இது தந்தை மகனுக்கு இடையேயான உரசல் என்று சொல்லப்பட்டாலும், மக்களின் மன ஓட்டத்தை அறிவதற்கான சோதனை என்ற கருத்தும் உண்டு.

ரஜினி மற்றும் விஜய்யின் அரசியல் விஷயத்தில் இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்ற தெரியவில்லை. எப்படி இருந்தாலும், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய கால அவகாசமே இருப்பதால், அதற்குள், இந்த இருவரும் அரசியலில் களமிறங்கும் வாய்ப்பு இல்லை என்பதே உண்மை.

இதையும் தாண்டி, வரும் சட்டமன்ற தேர்தலில், 1996 தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுத்தது போல, தற்போது வாய்ஸ் கொடுக்க வேண்டும் என பாஜக அவரை வலியுறுத்துவதாக தெரிகிறது.

ரஜினியின் வாய்ஸ் என்பது பாஜகவுக்கு ஆதரவாக என்று அல்ல, திமுக அதிமுகவுக்கு எதிராக இருந்தாலே போதும் என்றே எதிர் பார்க்கிறது. ஆனால், அது தமக்கு தேவை இல்லாத தலைவலியை ஏற்படுத்தும் என்று ரஜினி நினைக்கிறார். இருந்தாலும் பாஜக அவரை விடுவதாக தெரியவில்லை.

இவர்களுக்கு மத்தியில், ஏற்கனவே கட்சி ஆரம்பித்து மக்களவை தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்ற கமலஹாசன், கழகங்களுடன் கூட்டணி இல்லை, நல்லவர்களுடன் கூட்டணி என்று சொல்லி இருக்கிறார். அப்போது, இது என்ன பாஜகவின் பி டீமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியை ஒதுக்குவதற்கில்லை.

இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில்தான் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே அடுத்து ஆட்சியை பிடிப்பதற்கான, கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றன.

திமுக பொது செயலாளர் துரை முருகன் ஏற்கனவே சொன்னது போல, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தொகுதி பங்கீடு முடிவடைந்த பின்னரே, எந்தெந்த கட்சி எந்தெந்த கூட்டணியில் இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும்.

இதுபோன்ற குழப்பங்களை கடக்கும் நிலையில்தான், சில நாட்களில் குரு பகவான் தனுசு ராசியை விட்டு மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். மகர ராசியில் குரு நீசம் ஆவதாலும், அங்கு ஏற்கனவே உள்ள சனி பகவானுடன் இணைவதாலும், இரு கிரகங்களுமே தங்களது இயல்பை இழக்க நேரும். அதனால், ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அது கூட்டணியிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள்.