பண்ணையாரின் கோட்டையை உடைத்த பாமர விவசாயி: வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு!

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72. கடந்த சில நாட்களாக, உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில், 2006, 2011, 2006  ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் அமைச்சர் துரைக்கண்ணு.

பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி என்ற ஊரில் 1948 ம் ஆண்டு, அமைச்சர் துரைக்கண்ணு பிறந்தார். தஞ்சை சரபோஜி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து அக்கட்சியில் இருப்பவர்.

கூட்டுறவுத்துறையிலும், ஆசிரியராகவும் பணியாற்றிய அவர் பின்னர் முழு நேர அரசியலில் இறங்கினார். அதிமுக ஒன்றிய செயலாளர், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் போன்ற பொறுப்புக்களையும் வகித்த அவர், கடந்த 2016 ம் ஆண்டு, ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வசித்தாலும், இதுவரை, அம்மாவட்டங்கள் எதிலும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே வன்னியர் சமூகத்திற்கு அமைச்சர் பதவி வழங்கியதில்லை.

இந்நிலையில், பாபநாசம் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கண்ணுக்கு, 2016 ம் ஆண்டு வேளாண் அமைச்சர் பொறுப்பை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையிலும், அவர் அதே பொறுப்பில் நீடித்தார். தஞ்சை மாவட்டத்தில் வன்னியர் சமூகத்தில் இருந்து முதன் முதலில் அமைச்சராகப் பொறுப்பேற்றதும் இவரே.

அதேபோல், பாபநாசம் தொகுதியில் பெரும்பான்மையாக வன்னியர் சமூக மக்கள் வசிக்கின்றனர். எனினும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் மிகுந்த செல்வாக்கு பெற்ற மூப்பனாரின் குடும்ப ஆதரவு இருந்தால் மட்டுமே, அந்த தொகுதியில் வெற்றி பெற முடியும் என்ற நிலையே தொடர்ந்தது.

அந்த நிலையை உடைத்து, முதன்முதலில் பாபநாசத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அமைச்சர் துரைக்கண்ணு. அத்துடன், அதே தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

தேசிய அளவில் செல்வாக்கு பெற்ற மூப்பனார் குடும்பத்திற்கு எதிராக,  ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த துரைக்கண்ணு, கடுமையாகப் போராடி பாபநாசம் தொகுதியையே அதிமுகவின் கோட்டையாக மாற்றிக்காட்டியவர்.

எளிமையான விவசாயியைப் போன்ற தோற்றம் கொண்ட துரைக்கண்ணு, தொகுதி மக்களின் சிறு சிறு இன்ப துன்பங்களிலும் தவறாமல் பங்கெடுக்கும் இயல்பு கொண்டவர். அதனால், அத்தொகுதி மக்கள் இவர் மீது தொடர்ந்து அன்பு செலுத்தினர்.

தாம் அமைச்சராகப் பொறுப்பேற்ற வேளாண் துறையையும் மிகவும் நேர்மையுடன் நிர்வாகம் செய்தவர் என்றும் அறியப்படுகிறார். ஆர்ப்பாட்டமற்ற அரசியலால் மக்களையும், கட்சியினரையும் கவர்ந்தவர் என்பதே அவரது சிறப்பு பண்பு.

கடந்த மாதம் 12ம் தேதி, முதல்வர் எடப்பாடியின் தாயார் மறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, சென்னை காவேரி மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

காவேரி மருத்துவ மனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று இரவு அவர் காலமானார்.

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி, அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு, மனைவி, இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் முடிந்து இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.