கொங்கு மண்டலத்தில் மாற்று சமூக அரசியல்: திமுக வகுக்கும் புதிய வியூகம்!

வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றியை ஈட்டிவிட வேண்டும் என்று திமுகவும், அதிமுகவும் கடுமையாக போராடி வருகின்றன. அதற்காக, இதுவரை இல்லாத வகையில், இரு கட்சிகளுமே தேர்தல் உத்தி வகுப்பாளர்களை நியமித்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

குறிப்பாக, பலவீனமான வாக்குவங்கி கொண்டுள்ள பகுதிகளில் இவ்விரு கட்சிகளுமே, தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, திமுக மிகவும் பலவீனமாக உள்ள, மேற்கு மாவட்டங்களில், மாற்று சமூக அரசியலை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வடமண்டலம், மேற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், தென் மண்டலம் என்ற நான்கு வரையறைக்குள் கொண்டு வந்து தேர்தல் உத்திகள் வகுப்பது, அரசியல் கட்சிகளின் வழக்கம்.

இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை  கொங்கு பகுதியாகவும், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளை மழவர் நாடு என்றும் இலக்கியங்கள் வரையறுத்துள்ளன, ஆனாலும், இன்று இரண்டு பகுதிகளையும் சேர்த்தே கொங்கு என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கொங்கு மற்றும் மழவர் மண்டலம், பெரும்பாலான தேர்தல்களில் அதிமுகவுக்கே சாதகமாக இருந்துள்ளது. அதனால், இந்த பகுதிகளில் திமுக எப்போதுமே பலவீனமாக உள்ளது.

இந்த நிலையை மாற்ற கடுமையாக போராடிவரும் திமுக, வரும் தேர்தலில் அதற்காக பல்வேறு மாற்றுத் திட்டங்களை உள்ளடக்கிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. அது, மாற்று சமூக அரசியலை முன்னெடுக்கும் திட்டமாகும்.

மேற்கு மாவட்டம் என்பது, கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் அரசியல் செய்யும் பகுதியாக அறியப்பட்டுள்ளது. அதனால், பெரும்பாலான காட்சிகளில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் பொறுப்பில் உள்ளனர்.

இந்த நிலையை மாற்றுவதன் மூலமே, திமுக தனக்கென ஒரு வாக்கு வங்கியை தக்க வைக்க முடியும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் குழுவினரும் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட பின்னர், திமுக கூட்டணியில் இருக்கும், ஈஸ்வரன் தலைமையலான நிர்வாகிகள் பலரை, மறைமுகமாகவும், நேரடியாகவும், அதிமுக அமைச்சர்கள் வளைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இது திமுகவுக்கு மேலும், பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதால், மேற்கு மாவட்டங்களில் உள்ள இதர சமூகங்களின் செல்வாக்கை தம் பக்கம் இழுக்கும் வேலைகளை திமுக முன்னெடுக்க உள்ளது.

இதன் ஒரு பகுதியாக மேற்கு மாவட்டங்களில் உள்ள அருந்ததியர் சமூக மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அந்தியூர் செல்வராஜ் மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் மாநில துணை பொது செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் வேட்டுவ கவுண்டர் சமூகத்தை சேர்ந்த சிலருக்கும் திமுகவில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு முன்னாள் எம்.பி. கந்தசாமி வேட்டுவ கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்.

அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பவானி போன்ற பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் வன்னியர்களுக்கு, திமுகவில் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குறிஞ்சி என்.சிவகுமார், மாநில விவசாய அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.

மேலும், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஓரளவு கணிசமாக வாழும் முதலியார் சமூகத்திற்கும் திமுகவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் வன்னியர் சமூகத்திற்கு உரிய  பொறுப்புக்கள் வழங்கவும் திமுக முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, எடப்பாடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், மேற்கு மாவட்டங்களில் உள்ள மற்ற கட்சியினரின் வாக்குகளும் அதிமுகவுக்கே அதிக அளவில் செல்லும் வாய்ப்பு உள்ளதால், அந்த பகுதிகளில் வசிக்கும் மற்ற சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே திமுகவின் தற்போதைய வியூகமாக உள்ளது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டத்தில் பலவீனமான தமது வாக்கு வங்கியை பலப்படுத்த, திமுக வகுத்துள்ள இந்த வியூகம், எந்த அளவுக்கு வெற்றியை தரும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.