சினிமா நட்சத்திரங்களை களமிறக்கும் பாஜக: சமாளிக்க திணறும்  திமுக – அதிமுக!

தமக்கு வலிமையாக இதுவரை பயன்பட்டு வந்த ஆயுதம், எதிரியின் கைகளுக்கு போய்விட்டால், அதை எதிர் கொள்வது மிகப்பெரிய சவால். அந்த சவாலைதான் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என்னும் இருபெரும் திராவிட கட்சிகள் எதிர்கொள்ளப் போகின்றன.

தமிழகத்தில் அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு சினிமா நடிகர்கள் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலையில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவே சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் சினிமா கலைஞர்களை பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது திமுகதான் என்ற ஒரு பேச்சு உண்டு. ஆனால், சுதந்திரத்திற்கு முன்பே, கே.பி.சுந்தரம்பாள் உள்ளிட்ட சினிமா மற்றும் நாடக கலைஞர்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டது காங்கிரஸ் கட்சிதான்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1920 ம் ஆண்டுதான் சென்னை மாகாணத்திற்கு முதல் சட்டமன்ற தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கட்சி, சுயாட்சியை வலியுறுத்தி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் சுயேச்சையாக போட்டியிட்டனர். இந்த நிலை அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்தன. அது, நீதிக்கட்சிக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

ஆனால்,   1937 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சத்தியமூர்த்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, முதல்வர் பொறுப்பை ஏற்றார் ராஜாஜி. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் சினிமா மற்றும் நாடக கலைஞர்களே.

அதைத்தொடர்ந்து, திரைக்கலைஞர்களின் ஆதிக்கம் தமிழக அரசியலில் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. ஆனால், திமுக தொடங்கப்பட்டதற்கு பின்னர், நாடக மேடையிலும், திரையிலும் மின்னிய பலவேறு நட்சத்திரங்கள் அக்கட்சியின் பிரச்சாரத்தில் பெரும் பங்காற்றினர். எஸ்.எஸ்.ஆர், கே.ஆர்.ஆர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் அதில் குறிப்பிடத் தக்கவர்கள்.

அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், திமுகவில் ஏற்பட்ட பிளவு, திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்த எம்.ஜி.ஆர், புதிய கட்சி தொடங்க வழி வகுத்தது. அக்கட்சி ஆட்சியையும் பிடித்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர், சினிமா துறையை சேர்ந்த ஜெயலலிதாவே, கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலம் அதிமுகவை வழி நடத்தினார்.

சினிமா நட்சத்திர வரிசையில், தனித்து களமிறங்கிய நடிகர் விஜயகாந்த், எட்டு முதல் பத்து சதவிகித வாக்குகளைப்பெற்று, ஒன்றிரண்டு தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுகவுக்கு நெருக்கடியை கொடுத்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். ஆனால், அதன்பிறகு, அவரது உடல்நிலை, கட்சி நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்ற காரணங்களால், அந்த கட்சியின் செல்வாக்கு சரிந்து போனது.

ஆனாலும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்த, நடிகர் ரஜினியை மையப்படுத்தி அரசியலில் களமிறக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிக்கு தெளிவான விடை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளிலும், ஜெயலலிதா, கலைஞர் போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் தற்போது இல்லை. ரஜினியின் நிலை பற்றி யாராலும் கணிக்க முடியவில்லை. அதனால், திரையில் மின்னும் நட்சத்திரங்கள் பலரை, தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு களமிறக்க திட்டமிட்டுள்ளது பாஜக.

அதன் முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு, தற்போது பாஜகவில் இணைக்கப்பட்டுள்ளார். அடுத்து, நடிகர் விஷாலும், அவரை தொடர்ந்து இன்னும் பல நடிகர்களும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்ற செய்திகளும் வலம்வரத் தொடங்கியுள்ளன.

ஏற்கனவே, நடிகர் ராதாரவி, நடிகை நமீதா ஆகியோர் தமிழக பாஜகவின் பிரச்சார நட்சத்திரங்களாக அறியப்பட்டுள்ள நிலையில், நடிகை குஷ்பு, நடிகர் விஷால் என பல்வேறு நடிகர்கள் களமிறங்கினால், அது தங்கள் கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் என்று பாஜக கணக்கு போடுகிறது.

திமுக, அதிமுகவைப் பொறுத்தவரை அது ஸ்டாலின் – எடப்பாடி என்ற அளவில்தான் அரசியல் பிரச்சாரம் இருக்கும். கூடுதலாக அந்த இரு கட்சிகளிலும் சில சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரத்திற்காக வேண்டுமானால் களமிறங்கலாம். ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க சினிமா நட்சத்திரங்களையே முழுமையாக பிரச்சார களத்திற்கு தயார் செய்து வருகிறது.

சினிமா நட்சத்திரங்களை பார்க்க கூடும் கூட்டம் அவர்களுக்காக தங்களது வாக்குகளை பதிவு செய்வார்களா? என்பது தெரியாது. மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அரசியல் அங்கீகாரம் மற்ற நடிகர்களுக்கு கிடைக்குமா? என்பதும் தெரியாது.

மறுபக்கம், நடிகர்களை முழுமையாக நம்பி அடுத்த தேர்தலில் களமிறங்கப்போகும் பாஜக, கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கப் போகிறதா? அல்லது புதிய கூட்டணியை அமைக்கப் போகிறதா? என்றும் இதுவரை தெரியவில்லை.

அதே சமயம், கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தனது தனித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அதிமுகவுக்கு இருக்கிறது. அதேபோல், அதிமுக, பாஜக, நடிகர்கள் என்ற மூன்று தரப்பினரையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது.

எந்த சினிமாவை நம்பி அரசியலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதோ, அதே சினிமாவை எதிர்த்து களமிறங்க வேண்டிய கட்டாயம் திராவிட கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதான், வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட கட்சிகளுக்கான மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.