எடப்பாடி-பன்னீரை ஒருங்கிணைத்த சசிகலா எதிர்ப்பு: பின்னணியில் கே.பி.முனுசாமி–எஸ்.பி.வேலுமணி!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா ஆதரவோடு முதல்வரான எடப்பாடி, மூன்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வருகிறார். அதனால், கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கென ஒரு செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே தற்காலிக முதல்வராக பொறுப்பு வகித்த பன்னீருக்கு, நீண்ட காலம் முதல்வராக தொடரக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரையும் மீறி தனக்கென ஒரு செல்வாக்கை அவரால் வளர்த்துக் கொள்ள இயலாமல் போனது.

எடப்பாடி முதல்வரான போது, ஜெயலலிதா உயிருடன் இல்லாததும், சசிகலா சிறையில் இருந்ததும், அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து விட்டது.

பன்னீர் அணி, அதிமுகவில் இணைந்த பின்னரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் போன்ற பொறுப்புக்கள் அவருக்கு அளிக்கப்பட்டாலும், எடப்பாடியின் செல்வாக்குக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர் திணற நேரிட்டது.

ஆனாலும், கட்சியில் தன்னுடைய முக்கியத்துவத்தை நிலைநாட்ட பன்னீர் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார். அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு சர்ச்சையில், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தியும் கொண்டார்.

ஆனாலும், அவர் வாயாலேயே அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது பன்னீருக்கு. இது, பன்னீருக்கு தனிப்பட்ட முறையில் சற்று பின்னடைவு என்றாலும், கட்சியில் தன்னுடைய முக்கியத்துவத்தை நிலை நாட்டுவதில் அவருக்கு இதில் ஓரளவு வெற்றியே கிடைத்துள்ளது.

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாத அதிமுக என்ற நிலைப்பாட்டில் பன்னீர், எடப்பாடி ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளனர் என்றே அக்கட்சியினர் கூறுகின்றனர்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது, கட்சியின் உண்மையான அதிகார மையமாக இருந்தது சசிகலா குடும்பமே. சசிகலா எதிர்ப்பாளர்கள் கட்சியில் தடயம் தெரியாமல் அழிக்கப்பட்டனர். தற்போது, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள கே.பி.முனுசாமியே அதற்கு முக்கிய உதாரணமாகும்.

அதன் காரணமாகவே, சசிகலா எதிர்ப்பு அணியை தொடங்கிய பன்னீரின் பின்னால் உறுதியாக நின்றார் கே.பி.முனுசாமி. அதன் பின்னர், தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி திரும்பியபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அமைச்சர் வேலுமணி.

கடந்த ஒரு மாதமாக, அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சையில், பன்னீருக்கும் எடப்பாடிக்கும் எழுந்த பூசலை, சரி செய்ய முக்கிய காரணமாக இருந்தார்கள் முனுசாமியும், வேலுமணியுமே.

அதிமுக தற்போதுள்ள நிலையில், திமுகவை எதிர்த்து போராடுவதை விட, சசிகலா ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதே முக்கியமானது என்பதை வலியுறுத்தி, பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையே சமாதானம் செய்து வைத்ததில் இந்த இருவருமே முக்கிய பங்கு வகித்தனர் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

எடப்பாடி பன்னீர் இடையே எழுந்த மோதலை சாதகமாகப் பயன்படுத்தி, சசிகலா ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து விட்டால், அதிமுகவை காப்பாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதை சொல்லியே இந்த சமாதானம் அரங்கேற்றப்பட்டதாகவே சொல்லப்படுகிறது.

எனவே, எவ்வளவோ கருத்து வேறுபாடுகள், ஈகோ யுத்தங்கள் இருந்தாலும், எடப்பாடியே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று பன்னீர் அறிவிக்க முழு காரணமாக இருந்தது சசிகலா எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியே என்கின்றனர் அதிமுகவினர்.