புதுச்சேரி நாராயணசாமிக்கு நெருக்கடி: புதிய கட்சி தொடங்கும் முடிவில் நமசிவாயம்!

மாப்பிள்ளையாக ஒருவரை அடையாளம் காட்டி, மணவறையில் வேறு ஒருவரை அமரச் சொல்வதுதான், காங்கிரஸ் கட்சி ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வரும் ராஜ தந்திரம். புதுச்சேரி மாநிலத்திலும் இத்தகைய ராஜ தந்திரத்தை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சி, நாராயணசாமி வடிவில் தற்போது அதற்கான பலனை அறுவடை செய்ய தயாராகி வருகிறது.

1963 ம் ஆண்டு தொடங்கி இன்று வரை, காங்கிரஸ் ஐந்து முறையும், திமுக நான்கு முறையும்  ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதிமுக இரண்டு தடவை ஆட்சி அமைத்தாலும், அற்ப ஆயுளே அதற்கு அமைந்தது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு முறை முதல்வராக இருந்தவர் ரங்கசாமி. பின்னர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை கைப்பற்றினார்.

புதுச்சேரி மண்ணின் மைந்தராக, தனிக்கட்சி தொடங்கி, நூறு நாட்களுக்குள் ஆட்சியை கைப்பற்றியவர் என்ற பெருமை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு மட்டுமே உண்டு.

புதுச்சேரியில் மாநிலம் தழுவிய அளவில் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவராக விளங்கிய ரங்கசாமியை வீழ்த்த முடியாமல் தவித்தனர் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள்.

குறிப்பாக, தற்போதைய முதல்வரான நாராயணசாமி, அப்போது தாம் வகித்த மத்திய அமைச்சர் பதவியை பயன்படுத்தி, புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எண்ணற்ற இடையூறுகளை கொடுத்து வந்தார் என்றும், அதற்கான பலனை, இன்று கிரண்பேடி மூலம் அவர் அறுவடை செய்கிறார் என்ற பேச்சுக்களும் உண்டு.

ரங்கசாமியை எக்காரணம் கொண்டும் வீழ்த்த முடியாது என்ற நிலைக்கு வந்த, காங்கிரஸ் தலைவர்கள், ரங்கசாமியின் நெருங்கிய  உறவினரான நமச்சிவாயத்திற்கு கொம்பு சீவினர். அவரை புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக்கி, அவரது தலைமையில் தேர்தலை சந்தித்தனர்.

நாராயணசாமியின் முகத்தை காட்டினால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது என்பதால், தேர்தல் பிரச்சாரத்தில் அவர் முன்னிலைப்படுத்த வில்லை.

ஆனாலும், தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, நமச்சிவாயத்தை ஓரம் கட்டி முதல்வர் ஆனார் நாராயணசாமி.

இது, நமச்சிவாயத்திற்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. எனினும், கட்சியின் தேசிய தலைமைக்கு கட்டுப்பட்டு, வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்டார்.

ஆனாலும், மெல்ல மெல்ல தனது சுயரூபத்தை காட்ட தொடங்கிய முதல்வர் நாராயணசாமி, ஒரு கட்டத்தில், நமச்சிவாயம் வகித்து வந்த காங்கிரஸ் தலைவர் பதவியையும் பறிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டார்.

எனினும், காங்கிரஸ் தலைமைக்கு தாம் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற, நமச்சிவாயம் இதுவரை அமைதி காத்தார். ஆனால், இதற்கு மேலும் பொறுமையாக இருப்பது நல்லதல்ல என்று உணர்ந்த அவர், நாராயணசாமிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, பாஜக மேலிடத்தின் முயற்சியால், என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு நமச்சிவாயத்திற்கு கிடைத்தது. ஆயினும், பதவிக்காக கட்சியை உடைத்த கெட்ட பெயர் ஏற்படக்கூடாது என்பதால், அந்த வாய்ப்பை அவர் தவிர்த்து விட்டார்.

ஆனால், தற்போது அவர் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த நினைக்கும் பாஜக, நமச்சிவாயம் போன்றவர்களுக்கு மறைமுகமாக அனைத்து ஆதரவையும் தருவதற்கு தயாராக உள்ளது.

பாஜகவே ஆதரவளிக்கவில்லை என்றாலும், நாராயணசாமி போன்ற மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களை முன்னிலைப்படுத்தி, தன்னைத்தானே அழித்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும் தயாராகவே உள்ளது.

அதனால், புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் நமச்சிவாயம் தலைமையில் புதிய கட்சி உருவாகும் என்பதே பேச்சாக உள்ளது.