தடம் மாறும் கூட்டணி கட்சிகள்: குழப்பத்தில் திமுக – அதிமுக!

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தொகுதி பங்கீடு எல்லாம் முழுமையாக முடிவடைந்த பின்னரே, எந்தெந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதை தெளிவாக கூற முடியும். இதுதான் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி அருகே அளித்த பேட்டி.

இது துரைமுருகனின் தனிப்பட்ட கருத்தாக பார்க்காமல் கட்சியின் கருத்தாகவே பார்க்க வேண்டும். இதில் இருந்து அதிமுகவில் உள்ள சில கட்சிகள், திமுகவுக்கும், திமுகவில் உள்ள சில கட்சிகள் அதிமுகவுக்கோ செல்லும் என்பதை அவர் வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு, திமுக பிரசாந்த் கிஷோரையும், அதிமுக சுனிலையும் தேர்தல் உத்தி வகுப்பாளராக நியமித்து, தீவிரமாக களம் இறங்கியுள்ளன.

கலைஞர், ஜெயலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்த அதிமுக, வரும் தேர்தலில் தோற்றால், அது அதிமுகவுக்கும், அதன் தலைவர்களுக்கும் கடும் பின்னடைவை ஏற்படுத்தும்.

அதேபோல், இரண்டு முறை தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த   திமுக, இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும், அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

அதனால், இரு கட்சிகளுமே வாழ்வா? சாவா? என்ற நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. அதனால் வலுவான கூட்டணி என்பது இரு கட்சிகளுக்குமே அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது.

இந்த நிலையில்தான், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள்  வேறு கூட்டணிக்கும், வேறு கூட்டணியில் உள்ள சில கட்சிகள் திமுகவுக்கு வர வாய்ப்பு உள்ளதாக துரைமுருகன் கூறி இருக்கிறார். இதற்கு பின்னணியில், திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் வலுவான அறிவுறுத்தல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் திமுக வலுவாக இருப்பதால், கண்டிப்பாக அது ஆட்சிக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடம் ஒதுக்கினால், அந்த இடங்களை அதிமுக குறி வைத்து கைப்பற்றும் என்றும், அது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பிரசாந்த் கிஷோர் வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது.

இதை கவனத்தில் கொண்டே, கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்குவதற்கு திமுக தலைமை விருப்பம் இல்லாமல் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதனால், திமுகவில் உள்ள சில கூட்டணி கட்சிகள், வேறு முகாம்களை நோக்கி செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த முகாம்களுக்கு தாவப்போகின்றன என்பது இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.

மறுபக்கம், அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சையில் முதல்வர் எடப்பாடிக்கும், துணை முதல்வர் பன்னீருக்கு இடையே நடக்கும் பனிப்போரையும் திமுக உற்று நோக்கி வருகிறது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இறுதி செய்யப்படும் வரை, திமுக மற்றும் அதிமுகவில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் நிலைபாட்டை கணிக்க முடியாத நிலையே உள்ளது.

எனவே, அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்ததும், கூட்டணி கட்சிகளின் போக்கை ஓரளவு கணிக்கலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.