அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரம்: சமூக ரீதியாக பிரியும் அணிகள்!

பன்னீர்செல்வம், எடப்பாடி ஆகிய இருவருமே சசிகலாவின் ஆதரவில் முதல்வர் ஆனவர்கள்தான். ஆனாலும், ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது தற்காலிக முதல்வர் ஆன பன்னீருக்கு, முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஜெயலலிதா இல்லாத நிலையில், சசிகலாவும் சிறையில் இருப்பதால், அது எடப்பாடிக்கு மிகவும் சாதகமாக அமைந்து விட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து வரும் எடப்பாடி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, கிட்டத்தட்ட கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். அத்துடன், தமக்கு போட்டியாக விளங்கிய பன்னீரின் ஆதரவாளர்கள் பலரையும் தம் பக்கம் இழுத்து விட்டார்.

சென்னையில், கடந்த 28 ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அது வெளிப்படையாகவே தெரிந்தது. பன்னீரின் ஆதரவாளர்களாக அறியப்பட்ட நத்தம் விஸ்வநாதன் நேரடியாகவே எடப்பாடியை ஆதரித்து பேசிவிட்டார். அமைச்சர் மாபா பாண்டியராஜன், பன்னீருக்கு ஆதரவாக எதுவுமே பேசாமல் மவுனம் சாதித்தார்.

மற்றொரு ஆதரவாளரான கே.பி.முனுசாமி, சசிகலாவுக்கு ஆதரவான பாதையை பன்னீர் தேர்ந்தெடுத்து விட்டார் என்ற வெறுப்பில், முதல்வர் வேட்பாளர் குறித்து பன்னீரும் – எடப்பாடியும் சேர்ந்து முடிவெடுப்பார் என்று முடித்துக் கொண்டார்.

சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்ட திண்டுக்கல் சீனுவாசன், ஒ.எஸ்.மணியன், காமராஜ் ஆகியோர் பன்னீருக்கு ஆதரவாக வாய்கூட திறக்காமல் மவுனமாக இருந்து விட்டனர்.

இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மட்டுமே நேற்று பன்னீரை சந்தித்து பேசி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதே போல், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன், பன்னீரை சந்தித்து, தங்கள் சமூகத்தை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ க்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதாக உறுதி அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மறுபக்கம், அதிமுக பெரிதும் நம்பியுள்ள வன்னியர் சமூகத்தை சேர்ந்த சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால், அவர்களும் எடப்பாடி ஆதரவு நிலையையே மேற்கொண்டுள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணு, எம்.சி.சம்பத் ஆகியோரும் எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் இல்லை.

இது ஒரு புறம் இருக்க, சசிகலாவின் தீவிர முயற்சியால் அமைச்சரான செங்கோட்டையன், தற்போதுள்ள நிலையில் எடப்பாடியையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே பொதுக்குழுவில் பேசி உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியில் இருக்கும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காவிட்டால், அவருடைய ஆட்சி சரியில்லை என்று எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்யும் என்றும் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து வரும் அமைச்சர் ஜெயக்குமாரும் எடப்பாடிக்கே ஆதரவு தெரிவித்துள்ளார். எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்ட அமைச்சர் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும், நல்ல பலனை தந்துள்ளது என்பதை, அதிமுக பொதுக்குழு உணர்த்தி விட்டது. மேலும், பொதுக்குழுவில் தன்னுடைய பெரும்பான்மையையையும் எடப்பாடி நிரூபித்து விட்டார்.

எனினும், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாத பன்னீர், தன்னடைய தலைமையை நிரூபிக்க தொடர்ந்து போராடி வருகிறார். அவருக்கு சசிகலா மற்றும் தினகரனின் ஆதரவு இருப்பதால், தமது சமூகத்தை சேர்ந்தவர்களின் ஆதரவோடு தொடர்ந்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மறுபக்கம், வரும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் செய்ய வேண்டிய செலவை கொங்கு லாபியே ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதால், பன்னீரின் நிலை மேலும் சிக்கலாக உள்ளது.

அதனால், தினகரன் மற்றும் சசிகலாவின் ஆதரவுடன் முக்குலத்தோர் லாபியை கையில் எடுத்து மீண்டும் தம்மை முன்னிலைப்படுத்தும் முயற்சிகளில் பன்னீர் தீவிரமாக இறங்கியுள்ளார்.

ஆனால், கொங்கு உள்பட அனைத்து சமூகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்தில் கிட்டத்தட்ட எடப்பாடி வெற்றி பெற்று விட்டார் என்றே கூறப்படுகிறது.

எனவே தற்போதுள்ள நிலையில், எடப்பாடி, பன்னீர் ஆகிய இருவரும், தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க அதிமுகவில் சமூக ரீதியாக இரு அணிகளை உருவாக்கி விட்டனர்.  இதில், எந்த அணி அதிமுகவை கைப்பற்றும் என்பது விரைவில் தெரிந்து விடும்.