சசிகலா விடுதலையில் சிக்கல்: 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்துவது எப்படி?

சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால், அதிமுகவில் மாற்றம் ஏற்படும். எடப்பாடி, பன்னீர் போன்றவர்களின் செல்வாக்கு குறைந்து, கட்சியை சசிகலா தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அண்மையில் சென்னையில் நடந்த, அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கூட ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு போன்றவர்கள் கூட சசிகலா கட்சிக்கு வந்தால், அதிமுக வெற்றி பெறுவது எளிது என்றெல்லாம் பேசினார்கள்.

இந்த பரபரப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், தண்டனைப்படி, அவர் வரும் ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனாலும், அவருக்கு விதிக்கப்பட்ட தொகை 10 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்றால், அவருக்கு மேலும் தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை செலுத்துவது பெரிய விஷயம் இல்லை என்றாலும், அந்த 10 கோடி ரூபாய்க்கான வருமான வரி செலுத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி. இந்த விதிதான், இன்று சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, எப்பாடு பட்டாவது சிறையில் இருந்து சசிகலாவை கொண்டு வந்துவிட வேண்டும் என்று, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

சிறையில் உள்ள சசிகலா சரியான மருத்துவ முறைகளை மேற்கொள்ளாததால், அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகவே, அவர் சிறையில் இருந்து வந்தாலும், உடல்நிலையை மேம்படுத்தும் வகையில் உரிய மருத்துவமும், போதுமான ஓய்வும் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக அவரை விரைவில் சிறையில் இருந்து வெளியே கொண்டு வரவேண்டியது முக்கியம்.

10 கோடி ரூபாய் அபராதத்தொகை செலுத்துவதற்கான வருமான வரி கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான், இப்போது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. அதனால், அபராதத்தொகையை எப்படி செலுத்துவது? என்பது குறித்தே சசிகலா குடும்பத்தினர் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.

அதற்காக அமுமுக தொண்டர்கள் பங்களிப்புடன் 10 கோடி ரூபாய் அபராதத்தொகை செலுத்துவதா? அல்லது, சசிகலாவின் கணவர் நடராஜனின் தந்தை பெயரில் நடத்தப்பட்டு வரும் மருதப்பா அறக்கட்டளை மூலம், அபராதத் தொகையை செலுத்துவதா? என்றும் சசிகலா குடும்பத்தினர் ஆலோசித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

தினகரனின் சமீபத்திய டெல்லி பயணம் குறித்து எத்தனையோ யூகங்கள் வெளியான போதும், சசிகலாவை சிறையில் இருந்து விடுவிப்பது குறித்து ஆலோசிக்கவே, அவர் டெல்லி சென்று வந்துள்ளார் என்பதே முக்கிய விஷயமாக உள்ளது.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், எப்படியும் அதிமுகவை தன் வசம் கொண்டு வந்து விடுவார் என்று பேசப்பட்டாலும், தற்போது, 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும் விவகாரமும், அவரது உடல்நிலையும் அதைவிட முக்கியமானதாக உள்ளது.

எனவே, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.