இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபரை வென்ற தமிழன்: திருக்குறள் முனுசாமி!

எந்த கருத்தையும் நகைச்சுவையுடன் சொன்னால், அது எளிதில் சென்று சேரும், மனத்திலும் நிலைக்கும். இந்த வித்தையை, தமது இறுதிக்காலம் வரையில் மிக நேர்த்தியாக கையாண்டவர் திருக்குறள் முனுசாமி.

1330 திருக்குறளையும் சிறு வயதிலேயே மனப்பாடம் செய்து, அதை எப்படிக்கேட்டாலும் சொல்லும் திறன் படைத்து, அவற்றுக்கான பொருளை நகைச்சுவை ததும்ப விளக்கும் தன்மையும் அவரிடம்   நிரம்பி இருந்தது.

நாடாளுமன்றத்தில் திருக்குறளுடன் உரையை தொடங்கி வைத்த தமிழர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இவருடைய பேச்சும், அதில் இழையோடிய திருக்குறள் சார்ந்த இனிய விளக்கமும், அப்போதைய சபாநாயகர் அனந்த சயனம் ஐயங்காரை வெகுவாக கவர்ந்ததால், பல நேரங்களில் அவர்  மெய்மறந்து போவார்.

இவரைப் பாராட்டி தமிழ்மறைக்காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என ஏராளமான பட்டங்கள் உலகத் தமிழர்களால் வழங்கப்பட்டன.

ஆனாலும், 1951 ம் ஆண்டு, கும்பகோணத்தில், உடையார் பாளையம் ஜமீன்தார்  கச்சி யுவரங்க காளாக்க தோழ உடையார் வழங்கிய “திருக்குறளார்” என்ற பட்டமே இவருக்கு இறுதி வரை நிலைபெற்று விளங்கியது.

விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி என்ற ஊரில் 1913 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ம் தேதி, வீராசாமி – வீரம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் திருக்குறள் முனுசாமி.

திருச்சி சூசையப்பர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பையும், சூசையப்பர் கல்லூரியில் பட்டப்படிப்படியும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும், பின்னர் தமிழ் வித்வான் படிப்பையும் முடித்தார்.

சிறு வயதிலேயே தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால், திருக்குறள் அனைத்தையும் கசடற கற்றுத் தேர்ந்த அவர், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் திருக்குறளை பரப்பும் பணியை மேற்கொண்டார்.

1952 ம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில், திண்டிவனம் தொகுதியில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்காவை தோற்கடித்தார்.

தேர்தல் விதிமுறைகள் கடுமையாக இல்லாத அந்த சமயத்தில், பெரும் தனவந்தரான கோயங்கா, ஹெலிகாப்டரில் இருந்து ஒரு ரூபாய் நோட்டுக்களை வாரி இறைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்றும், அதையும் மீறி திருக்குறளார் வெற்றி பெற்றார் என்றும் சொல்லப்படுவதுண்டு.

இவர் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டில், பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, சுப்பிரமணியப் பிள்ளை, இராசாக் கண்ணனார் போன்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பெரியார், பாரதிதாசன், ஜீவானந்தம், காமராஜர், மு.வ, கி.ஆ.பெ.விசுவநாதம், வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார், சுத்தானந்த பாரதி, உ.வே.சா, தண்டபாணி தேசிகர், சுவாமி சகஜானந்தா, சுவாமி விபுலானந்தா, சர்.பி.டி.ராசன், சி.ப.ஆதித்தனார், கலைவாணர் போன்றோரிடம் நெருங்கி பழகியவர் திருக்குறளார்.

வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியதற்கு திருக்குறளாரின் பங்கு இன்றியமையாதது. இந்தி எதிர்ப்பும், தமிழ் உணர்வும் மேலோங்கி இருந்த காலத்தில் திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

தமிழகம் மட்டுமன்றி, உலகில் தமிழ் மக்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் திருக்குறளை பரப்பிய திருக்குறளாரின் பங்கை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

1981 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார்.

தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.

அகமும் புறமும், இன்பத்தோட்டம், இன்பம் தரும் இன்பம், உலகப் பொதுமறை திருக்குறள் உரைவிளக்கம், ஏன் இந்த வாழ்வு, வடலூரும் ஈரோடும், வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் ஏன் எழுதினார், வள்ளுவர் காட்டிய வழி, வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப்பாதை, வள்ளுவரைக் காணோம், வள்ளுவர் குறளும் ஈ.வெ.ர. வாழ்க்கையும், வள்ளுவர் வழிப்பயணம், வள்ளுவர் பூங்கா, வள்ளுவரும் பரிமேலழகரும, வள்ளுவரும் பெரியாரும், திருக்குறள் அதிகாரவிளக்கம், திருக்குறள் இன்பம், திருக்குறள் உரைவிளக்கம், திருக்குறள் காமத்துப்பால் பொழிப்புரை, திருக்குறளாரின் சிந்தனைகள், திருக்குறளில் நகைச்சுவை, திருவள்ளுவரும் திராவிடக்கொள்கையும் போன்ற நூல்களை திருக்குறளார் எழுதி உள்ளார்.

இவற்றுள், சிந்தனைக்களஞ்சியம், திருக்குறள் அதிகார விளக்கம், திருக்குறள் தெளிவுரை பதவுரை பதிப்பு, திருக்குறள்-காமத்துப்பால் பொழிப்புரை, திருக்குறளார் தெளிவுரை, திருக்குறளில் நகைச்சுவை, முருகன் முறையீடு, வள்ளுவர் காட்டிய வழி, வள்ளுவர் காட்டும் வாழ்க்கை பாதை ஆகிய நூல்கள் நாட்டுடமையாக்கப் பட்டன.

திருக்குறள் முனுசாமி 1939ஆம் ஆண்டில் திருச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியர் என்பவற்றின் மகள் ஞானம்பாளை மணந்தார். இவர்கள் குமரகுருபரன், பாலசுப்பிரமணியன், தேவிகுமாரி, கோபிநாதன், ஞானசூரியன்,  திலகர், ரேவதி, தேவகுரு என்னும் சுந்தரராஜன் என்னும் 5 ஆண்களையும் 2 பெண்களையும் பெற்றனர்.

1913 ம் ஆண்டு இதே நாளில் பிறந்து,  தம் வாழ்வின் இறுதி வரை திருக்குறளை மக்களிடம் பரப்பி, தமிழ்த் தொண்டாற்றிய திருக்குறளார் 1994 ம் ஆண்டு ஜனவரி மாதம்  4 ம் தேதி காலமானார். அவரின் நினைவைப் போற்றுவோம்.