பாடிப் பறந்த குயில் பாலசுப்ரமணியம்!

ஒரு பாடல் எத்தனை உதடுகளால் உச்சரிக்கப்படுகிறது, அந்த அளவுக்கு அது வெற்றி பெற்றுள்ளது என்று பொருள். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, ஹிந்தி போன்ற எத்தனையோ மொழிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள், இன்னும் கோடிக்கணக்கான உதடுகளால் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இன்று எஸ்.பி.பி காலமானார் என்று பலரும் கலங்கத்தான் செய்வர். ஆனாலும், அவர் தமது அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் மூலம், தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருப்பார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத காலத்தில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோணடம்பேட்டையில், எஸ்.பி.சாம்பமூர்த்தி-சகுந்தலா தம்பதியினருக்கு 1946 ம் ஆண்டு ஜூன் மாதம்  4 ம் தேதி எஸ்.பி.பி பிறந்தார். இவரது முழுப்பெயர்  ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்.  இவருக்கு இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள். இதில் பாடகி எஸ்.பி.ஷைலஜாவும் ஒருவர்.

ஹரிகதா என்று சொல்லப்படும், கதையும் பாட்டும் கலந்த கதா கலாட்சேபம் செய்து வந்தவர் இவரது தந்தை. அதனால், அவரது குடும்பத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய மரியாதை இருந்தாலும், பெரிய அளவில் பொருளாதாரப் பின்னணி இல்லை. ஆகவே, மகன் பாலுவை எப்படியாவது ஒரு பொறியாளர் ஆக்கிவிட வேண்டும் என்பது அவரது குடும்பத்தின் கனவாக இருந்தது.

ஆனாலும், அது முடியாமல் போகவே, வேறு வழியின்றி அதற்கு நிகரான ஏ.எம்.ஐ.இ படிப்பதற்காக சென்னை வந்தார் எஸ்.பி.பி. சிறு வயதிலேயே தந்தையோடு கச்சேரியில் பங்கேற்ற அனுபவம், இசை மீது அவருக்கு இருந்த ஆர்வம் போன்றவற்றால், பொறியியலை விட இசையையே அவரது மனம் அதிகம் நாடியது.

அப்போது, தென்னிந்தியா திரைப்படங்களுக்கே தலைமையிடமாக விளங்கிய சென்னையில் நடந்த, தெலுங்கு இசைப்போட்டியில் பங்கேற்ற பாலு, முதல் பரிசை பெற்றார். அப்போதைய புகழ்பெற்ற தெலுங்கு இசை மேதைகள் நடுவராக இருந்து, அவருக்கு அந்த பரிசை வழங்கினர்.

அந்த சமயத்தில், பாலுவின் குரல் மற்றும் திறமையை உன்னிப்பாக கவனித்த எஸ்.பி.கோதண்டபாணி என்ற இசை அமைப்பாளர், முதன்முதலில் தமது இசையமைப்பில் அவருக்கு பாடுவதற்கு வாய்ப்பளித்தார். அதன் மூலம் தெலுங்கு திரையுலகில் பாலுவுக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது.

பிற்காலத்தில், சென்னையில்  தாம் தொடங்கிய ஒலிப்பதிவு கூடத்திற்கு, கோதண்டபாணி ஸ்டியோ என்று பெயர் சூட்டினார் எஸ்.பி.பி.

தமிழில் முதன்முதலாக, ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் எஸ்.பி.பி ஒரு பாடலைப்பாடினார். அந்த படம் வெளியாகவில்லை. அதைத் தொடர்ந்து “சாந்தி நிலையம்” என்ற படத்தில் “இயற்கை என்னும் இளைய கன்னி” என்ற பாடலை பாடினார். ஆனால், அந்த பாடல் வெளியாவதற்கு முன்பு, எம்.ஜி.ஆரின் “அடிமைப்பெண்” என்ற படம் ரிலீஸ் ஆனது. அதில் பாலு பாடிய “ஆயிரம் நிலவே வா” என்ற பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலித்து அவருக்கு புகழ் சேர்த்தது.

எனினும், இளையராஜா சினிமாவில் கோலோச்சிய காலம்தான், பாலுவின் பொற்காலமாக இருந்தது. “இளையராஜா–எஸ்.பி.பி–ஜானகி” டீம், தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் கொடிகட்டிப் பறந்தது. அனைத்து மொழிகளிலும் உள்ள இசை அமைப்பாளர்களும் பாலுவை பாடவைக்க போட்டி போட்டனர்.

ஜாதி, மதம், இனம், மொழிகளை கடந்தவனே கலைஞன் என்பதை நிரூபிக்கும் வகையில், பாலுவின் பாட்டுக்கள் எல்லா மொழிகளிலும் ஒலித்தன. தேசிய விருதுகளும், மாநில விருதுகளும், பிலிம் பேர் விருதுகளும் பல முறை அவருக்கு கிடைத்தன.

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித் என அனைத்து தலைமுறை கலைஞர்களுக்கும் பாலுவின் குரல் கனகச்சிதமாக பொருந்தியது. ஷாரூக்கான் போன்ற இந்தி நடிகர்களுக்கும் மிகப்பொருத்தமாகவே இருந்தது.

கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புறப்பாட்டு என அனைத்திலும் பாலுவின் பங்களிப்பு பஞ்சமில்லாமல் இருந்தது. தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தார். சாவித்திரி என்பவரை காதலித்து மணந்து கொண்டு பாலுவுக்கு சரண், பல்லவி என இரண்டு பிள்ளைகள், இருவருமே பாடகர்கள்.

தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி பல்வேறு மொழிகளில் இதுவரை 42 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உலக சாதனை படைத்துள்ளார் எஸ்.பி.பி. பல நடிகர்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். நல்ல நடிகர், இசை அமைப்பாளர், படத்தயாரிப்பாளர் என்ற பன்முகத்தன்மை கொண்டவர் அவர். பத்மஸ்ரீ, பத்மபூஷன், கலைமாமணி, நந்தி போன்ற மத்திய மாநில அரசுகளின் விருதுகளை பலமுறை பெற்றுள்ளார்.

எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் “ஆயிரம் நிலவே வா” பாடலைப்பாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் பாலு. ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரால் பாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், அவர் உடல் நலம் சரியாகும் வரை, அந்த பாடலை ஒலிப்பதிவு செய்யாமல் தள்ளிப்போட்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவர் பூரண குணம் அடைந்து வந்த பின்னரே அந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் அது பற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, நீ சின்ன பையன், உன்னுடைய நண்பர்களிடம் எல்லாம் எம்.ஜி.ஆர் படத்தில் பாடப்போவதாக சொல்லி வைத்திருப்பாய். அது முடியாமல் போய்விட்டால், உன்னை படக்குழுவினர் தவிர்த்து விட்டார்கள் என்றோ, உனக்கு திறமை இல்லை என்றோ மற்றவர்கள் சொல்லகூடும். அது உன்னுடைய மனதை கடுமையாக பாதிக்கும் என்று எம்.ஜி.ஆர் அதற்கு பதில் சொல்லி இருக்கிறார்.

இந்த விஷயத்தை பலமுறை பலரிடமும் உணர்ச்சி பொங்க கூறியவர் எஸ்.பி.பி. காலத்தால் அழியாத ஒரு காவிய இசைக்கலைஞனை அன்றே அடையாளம் கண்ட எம்.ஜி.ஆரையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டி இருக்கிறது.

“ஆயிரம் நிலவே வா” என்ற பாடலின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகி, பாடும் நிலா என்ற பெயருடன் வலம் வந்த பாலு, பாடிப்பறந்த குயிலாக இசையை நேசிக்கும் ஒவ்வொரு இதயத்திலும் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.