ஆட்சியின் பயன்கள் அனைத்தும் ஒரே சமூகத்திற்கா? சீறிப்பாய்ந்த சி.வி.சண்முகம்!

அதிமுக அமைச்சர்களில் மிகவும் சூடானவர், விவரம் தெரிந்தவர், எந்தவித குறிப்புகளுமே இல்லாமல் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு நறுக்கு தெரித்தார் போல் பதில் சொல்லக்கூடியர் என்றெல்லாம் பேசப்படுபவர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.

இவர் பேசிய ஆவேசமான பேச்சு காரணமாக, சென்னையில் நேற்று  நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தை, அவசர அவசரமாக முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடியின் ஆதரவாளரான அமைச்சர் தங்கமணி, கூட்டணிக்கு தலைமை தாங்கும் நாம், முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு களமிறங்குவதுதான் சரியாக இருக்கும் என்றார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஜே.சி.டி.பிரபாகர், அம்மாவின் ஆத்மாவின் வழி நடப்பவர் ஒ.பி.எஸ் தான். அவருடைய நெஞ்சத்தில் யாருக்கு எதிராகவும் எந்த சூது வாதும் கிடையாது. அவர் மனதை நோகடித்தால் அது நன்றாக இருக்காது என்றார்.

அமைச்சர் உதயகுமார் பேசும்போது, நமக்கு தேவை இப்போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு சின்னம்மா விடுதலை ஆகி வந்ததும், அவரை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்தித்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்று சசிகலா ஆதரவாளர் என்பதை நிரூபித்தார்.

அதற்கு எதிராக சலசலப்புகள் எழுந்தன. ஆனால், அந்த சலசலப்புகளை கண்டுகொள்ளாமல், சின்னம்மாவை சேர்த்துக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது, அவரை சேர்த்துக் கொள்வது அதிமுகவுக்கு நன்மையைத்தான் தரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜுவும் தமது சசிகலா விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

இதைக்கண்டு வெறுத்துப்போன அமைச்சர் ஜெயக்குமார், உங்கள் பேச்சை கேட்டுத்தானே, நான் அவருக்கு (சசிகலாவுக்கு) எதிராக பேசினேன்.. இப்போது நீங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால் என்னுடைய நிலைமை என்னாவது? என்று அப்பாவியாக கேட்டுள்ளார்.

அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தின் போக்குகள் அனைத்தும், இரண்டு குழுக்களுக்கு இடையேயான அதிகார பங்கீடு தொடர்பான போராட்டமாகவே இருந்துள்ளது.

இதை எல்லாம் பார்த்து மிகவும் டென்ஷன் ஆன அமைச்சர் சி.வி.சண்முகம், எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? “இந்த ஆட்சியின் அனைத்து பலன்களும் குறிப்பிட்ட சமூகத்துக்குத்தான் போகிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகிக்கொண்டு இருக்கிறது. அதை உருவாக விடக்கூடாது என்று ஆவேசமாகப் பேசி உள்ளார்.

அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து எதிர்ப்பு குரல்கள் கேட்க ஆரம்பித்தன. ஆனால், அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், நான் சட்ட அமைச்சர் பேசுகிறேன். என்னை எதிர்த்து பேசுவது யார்? என்று ஆவேசமாகப் பேச.. அங்கு அமைதி ஏற்பட்டுள்ளது.

அதிமுக என்பது இரு சமூகங்களுக்கு மட்டுமே சொந்தமான இயக்கம் போல மக்களால் உணரப்பட்டு வருகிறது. காலத்திற்கு ஏற்ப அந்த இரண்டு சமூகங்களில், ஏதாவது ஒன்று கட்சியின் அனைத்து பயன்களையும் எடுத்துக் கொள்கிறது என்ற எண்ணம் மக்களிடையே வேரூன்றி விட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதையே சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார் என்று சில  அதிமுகவினர் கூறுகின்றனர்.

ஆனாலும், இதை இப்படியே விட்டால், உள்கட்சி ரகசியங்கள் அனைத்தும் வெளியில் வந்து, கட்சி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் உருவாகிவிடும் என்ற அச்சத்தில், அதிமுக ஆலோசனைக் கூட்டம் அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.