செல்வகணபதி – வேதரத்தினம் கொடுக்கும் நெருக்கடி: தொகுதி மாறும் முடிவில் எடப்பாடி – ஒ.எஸ்.மணியன்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், கட்சி மாறும் முக்கிய பிரமுகர்கள், கூட்டணி குழப்பம் போன்ற காரணங்களால், முதல்வர் எடப்பாடியும் சில அமைச்சர்களும், தொகுதி மாறி போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடியே தமது தொகுதியில் இருந்து மாறி, சேலம் மாநகர் அல்லது மாநகரை ஒட்டிய ஒரு தொகுதியில் போட்டியிடுவதா? அல்லது காங்கேயம் தொகுதியில் போட்டியிடுவதா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை, வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி, முதல்வரை திணறடிக்க வேண்டும் என்பது திமுக தலைவர் ஸ்டாலினின் திட்டம்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதல்வரின் கொங்கு வேளாளர் சமூக வாக்குகள் பெரிய அளவில் இல்லை. வன்னியர் சமூகத்தின் வாக்குகளே பெரிய அளவில் உள்ளன. மேலும், அந்த தொகுதி ஏற்கனவே பாமக வெற்றி பெற்ற தொகுதி.

அந்த தொகுதியில், செல்வகணபதியை திமுக வேட்பாளராக நிறுத்தினால், அவர் வன்னியர் சமூகத்தின் பெருவாரியான வாக்குகளை பெற்று, முதல்வருக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் என்பது ஸ்டாலினின் கணக்கு.

எடப்பாடி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில், பாமக தனித்து நின்று 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. வரும் தேர்தலில், ஒரு வேளை அதிமுக கூட்டணியில் இருந்து பாமக  விலகினாலோ அல்லது அடக்கி வாசித்தாலோ, அது முதல்வர் எடப்பாடிக்கு தோல்வியை ஏற்படுத்தி விடும்.

இதன் காரணமாக சேலம் மாநகர பகுதியை ஒட்டியுள்ள சேலம் மேற்கு, தெற்கு அல்லது கொங்கு வேளாளர் சமூக வாக்குகள் நிறைந்த காங்கேயம் தொகுதியில் போட்டியிடலாம் என்று முதல்வர் எடப்பாடி  யோசிப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக உள்ள ஒ.எஸ்.மணியனும் வேறு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

வேதாரண்யம் தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற எஸ்.கே.வேதரத்தினம், பாஜகவில் இருந்து தற்போது மீண்டும் திமுகவிற்கு திரும்பியுள்ளதால், ஒ.எஸ்.மணியன் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

வேதாரண்யம் தொகுதியில் மட்டுமன்றி, நாகை மாவட்டம் முழுவதும் தமக்கென ஒரு தனி செல்வாக்கை கொண்டவர் வேதரத்தினம். திமுகவில் ஏற்பட்ட உள்கட்சி அரசியலால், அவர் அக்கட்சியில் இருந்து விலகினார்.

2011 ல் நடந்த தேர்தலில், வேதாரண்யம் தொகுதியில்  சுயேச்சையாக போட்டியிட்ட வேதரத்தினம் 25 ஆயிரம் வாகுகளுக்கு மேல் பெற்றார். கடந்த தேர்தலிலும், பாஜக சார்பில் போட்டியிட்டு  45 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று தமது செல்வாக்கை நிரூபித்தார். அத்துடன், பாஜகவுக்கு அடித்தளமே இல்லாத நாகை மாவட்டத்தில் 8 ஒன்றிய கவுன்சிலர்களையும் பெற்றுத்தந்தார்.

தற்போது, அவர் மீண்டும் திமுகவுக்கு திரும்பி உள்ளது, ஒ.எஸ்.மணியனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கஜா புயல் காலத்தில் மக்களின் கடும் எதிப்புக்கு ஆளான ஒ.எஸ்.மணியன், தற்போது வேதரத்தினத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். அதனால், வேதாரண்யம் தொகுதியை விட்டு வேறு தொகுதியில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார்.

ஆனால், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதுதான் இன்னும் அவருக்கு குழப்பமாக உள்ளது. நாகை மாவட்டத்தில் இடம்பெற்றிருந்த மயிலாடுதுறை தற்போது  தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்டது. நாகையில் தற்போது எஞ்சியுள்ள மூன்று தொகுதிகளில், நாகப்பட்டினத்தில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். கீழ்வேளூர் தொகுதி தனித்தொகுதியாக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் போட்டியிடலாம் என்றால், தனி மாவட்ட கோரிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டார், மயிலாடுதுறையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைய விடாமல் தடுத்தார் என்று ஒ.எஸ்.மணியன் மீது அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஏற்கனவே தாம் எம்.பி யாக இருந்த மயிலாடுதுறை தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம் மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே சாய்ஸ். ஆனாலும், கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை போராட்டம் காரணமாக, அப்பகுதி மக்கள் அதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அத்துடன், கும்பகோணம் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூகத்திகே இந்த முறை தேர்தலில் சீட் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலுமே ஓங்கி ஒலித்து வருகிறது.

இதன் காரணமாக, வரும் சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் ஒ.எஸ்.மணியன், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் குழப்பமே நீதிக்கிறது. இதுபோல, இன்னும் பல அமைச்சர்களும் வேறு தொகுதியில் போட்டியிடும் மனநிலையிலேயே உள்ளனர்.