பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் அரசியல் முன்னோடி ராமசாமி படையாட்சியார்!

சுதந்திரப்போராட்ட வீரரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், அவரது, சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு,க.ஸ்டாலின்  பாஜக தலைவர் எல்.முருகன், பாமக தீரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும், பல்வேறு சமூக அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல், கடலூரில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்திலும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

யார் இந்த ராமசாமி படையாட்சியார்?   

தமிழகத்தின் ஒற்றை பெரும்பான்மை சமூகமான வன்னிய குல ஷத்திரியர் சமூகத்தின் அரசியல் முன்னோடியாகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலராகவும் அறியப்பட்டவர் படையாட்சியார்.

1918  ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  16 ம் தேதி, கடலூரில் 500 ஏக்கருக்கும் மேலான சொத்துக்களை கொண்டிருந்த மிகப்பெரும் செல்வந்தர் சிவசிதம்பரம் படையாட்சியின் மகனாகப் பிறந்தார்.

இன்டர்மீடியட் வரை கல்வி பயின்ற படையாட்சியார், ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆற்றல் மிக்க பேச்சாளராக விளங்கினார். தமது முப்பது வயதுக்குள் கடலூர் நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர் போன்ற பதவிகளை எல்லாம் வகித்த அவர், சுதந்திரப்போராட்ட வீரராகவும் திகழ்ந்தார்.

அதே சமயம், காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ, எம்.பி, உள்ளாட்சி பொறுப்புக்கள் அனைத்திலும் வன்னியர் போன்ற பெரும்பான்மை சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டு, ரெட்டியார், நாயுடு, பிள்ளை, முதலியார் போன்ற சிறுபான்மை சமூகத்தினருக்கே வாய்ப்பளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது முப்பதாவது வயதிலேயே வன்னியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோர் அரசியலை கையில் எடுத்து களமிறங்கினார்.

அதற்காக தமிழ் அரசர் குல வாலிபர் சங்கம், வன்னிய குல ஷத்திரியர் சங்கம் போன்ற அமைப்புகளை நிறுவினார். அதன் காரணமாக 1949 ம் ஆண்டு நடைபெற்ற ஜில்லா போர்டு தேர்தலில், அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் பாதிக்கும் மேற்பட்ட ஜில்லா போர்டு தலைவர் பதவிகளை, படையாட்சியார் தலைமையில் இயங்கிய அமைப்பு கைப்பற்றியது. மேலும், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலும் கணிசமான வெற்றியை பெற்றது.

அதனால், தமது 31 வது வயதிலேயே தமிழகம் முழுவதும் அறிந்த தலைவராக உருவெடுத்தார். அதன் பின்னர், 1952 ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், படையாட்சியார் தலைமையிலான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 4 மக்களவை தொகுதியிலும்,  19 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதன் மூலம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

உழைப்பாளர் கட்சியில் வெற்றி பெற்ற 19  சட்டமன்ற உறுப்பினர்களில்  10 பேர் வன்னியர்,   6  பேர் ஆதிதிராவிடர், இது தவிர, முதலியார், நாயுடு, முக்குலத்தோர் சமூகத்தினரும் தலா ஒருவர் வெற்றி பெற்றனர்.   நாடாளுமன்றத்தில் வென்ற 4 இடங்களில் 3 பேர் வன்னியர், ஒருவர் ஆதிதிராவிடர்.

அந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றினாலும், ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இது, தேசிய அளவில் நேருவுக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்தது. அதையடுத்து, காமராஜருக்கு பதில் ராஜாஜியை முதல்வராக பதவி ஏற்குமாறு நேரு அறிவுறுத்தினார்.

அந்த தேர்தலில், படையாட்சியாரைப் போலவே, வடாற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வன்னியர் அரசியலை கையில் எடுத்த, மாணிக்கவேல் நாயக்கர் தலைமையிலான காமன் வீல் கட்சிக்கு சட்டமன்றத்தில் 6 இடங்களும், நாடாளுமன்றத்தில் 3 இடங்களும் கிடைத்தன.

பின்னர் காமன்வீல் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. மாணிக்கவேல் நாயக்கருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. படையாட்சியார் கட்சி வெளியில் இருந்து ஆதரவு வழங்க, ராஜாஜி முதல்வராக பதவி ஏற்றார்.

ஆனால், அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. அதையடுத்து, பெரியார் மற்றும் காமராஜர் வேண்டுகோளை ஏற்று படையாட்சியார், தமது கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். காமராஜர் அமைச்சரவையியிலும் பங்கேற்றார்.

அப்போது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவின் கீழ் வன்னியர் உள்ளிட்ட 28 சாதிகளை ஒருங்கிணைத்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், கல்விக்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும், மதிய உணவுத் திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை காமராஜரிடம் படையாட்சியார் முன்வைத்தார். அந்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

ஆனால், அதற்கு பின்னர் காமராஜருக்கும், படையாட்சியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு மீண்டும் தலையெடுத்தது. அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, மீண்டும் தனிக்கட்சி நடத்தினார். பின்னர் சில காலம் கழித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் படையாட்சியார் இணைந்தார். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் போன்ற பொறுப்புக்களை வகித்த அவர், 1992 ம் ஆண்டு காலமானார்.

படையாட்சியாரின் சிறப்புகள்

சுதந்திரப் போராட்ட வீரர், பிற்படுத்தப்பட்டோரின் காவலர், வன்னியரின் அரசியல் முன்னோடி என்று அறியப்பட்ட அவர், தமது சொத்துக்களின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டும், சொத்துக்களை விற்றுமே அரசியல் செய்த பண்பாளர்.

கடலூர் நகரில் அமைந்துள்ள, பேருந்து நிலையம், மருத்துவமனை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் போன்ற அரசு நிறுவனங்கள் பலவற்றுக்கும் பல ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கியவர்.

கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் படையாட்சியார். அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று ஒரு தனிப்பிரிவை உருவாக்கி, வன்னியர் உள்பட 29 சமூகங்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர். மாநிலம் முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தபடுவதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் படையாட்சியார்.

தமிழகத்தில் மட்டுமன்றி, தேசிய அளவில் முதன் முதலில், பிற்படுத்தப்பட்டோர் அரசியலை கையில் எடுத்து வெற்றி கண்டவர் ராமசாமி படையாட்சியார். எனினும், அப்போது நிலவிய அரசியல் சூழலால் அதை அவரால் திறம்பட தக்கவைத்துக் கொள்ளமுடியாமல் போய்விட்டது.