சசிகலா விடுதலை தேதி அறிவிப்பு : அதிமுகவில் தொற்றிக்கொண்ட பரபரப்பு!

அதிமுகவின் அதிகார மையமாக திகழ்ந்த சசிகலா, பெங்களூரு சிறையில் இருந்து, வரும் ஜனவரி மாதம் 27 ம் தேதி விடுதலை ஆவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூரு நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் கேட்ட கேள்விக்கு, சிறை நிர்வாகம் மேற்கண்ட பதிலை அளித்துள்ளது.

மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை முன்கூட்டியே சசிகலா கட்ட வேண்டும். கட்டத்தவறினால், 2022 ம் ஆண்டு வரை அவர் சிறையில் இருக்க நேரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை, சென்னை வரை வரவேற்பதற்காக, இப்போதே அதற்கான ஏற்பாடுகளை தினகரனின் அமமுக சார்பில் முடுக்கி விட்டுள்ளது.

வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், ஜனவரி மாதமே சசிகலா விடுதலையாக இருப்பது, அதிமுகவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

அதனால், அதிமுகவில் இப்போதே பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளில், எடப்பாடி ஆதரவாளர்கள், சசிகலா ஆதரவாளர்கள், பன்னீர் ஆதரவாளர்கள், சூழ்நிலைக்கு தகுந்தது போல முடிவெடுப்பவர்கள் என  பல பிரிவினர் உள்ளனர்.

இந்தப்பிரிவினருக்கு இடையே நடந்து வரும் நிழல் யுத்தம், சசிகலா வருகைக்கு பின்னர் மாற்றத்திற்கு உள்ளாகும். பலர் இடம் மாறுவர். பலர் தடம் மாறுவர் என்ற பேச்சுக்கள் இப்போதே றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளன.

மறுபக்கம், சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா மீண்டும் கட்சியைக் கைப்பற்ற முயல்வாரா? அல்லது ஒதுங்கி இருந்து மேற்பார்வை செய்வாரா? அல்லது சசிகலாவை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திக்க முடியுமா? என்ற கேள்விகளை எல்லாம் முன்வைத்து கட்சிக்குள் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

கட்சி மற்றும் ஆட்சியில் முழுமையாக செல்வாக்கை இழந்த பன்னீர் மீண்டும் சசிகலாவுடன் கைகோர்த்து, எடப்பாடியை ஓரம்கட்ட தயாராகி விட்டார் என்று ஒரு பலமான பேச்சு உள்ளது. மறுபக்கம், எடப்பாடிக்கும் சசிகலாவுக்கும் எந்தவிதமான மோதலும் இல்லை. அதன் காரணமாகவே, எடப்பாடி, இதுநாள் வரை சசிகலா குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

அமைச்சர் ஜெயகுமார், கே.பி.முனுசாமி போன்றவர்கள் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது.. நீக்கியதுதான் அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க மாட்டோம் என்று உறுதியுடன் கூறி வருகின்றனர். இது, முதல்வர் எடப்பாடியின் குரலே என்றும் சிலர் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கு முன்னர், வேறு வழக்குகள் அவர் மீது பாயாமல் இருக்க வேண்டும். அது பாஜகவின் கையில்தான் இருக்கிறது.

தற்போதுள்ள நிலையில், ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்று வந்துள்ள சசிகலாவை முன்னிறுத்தி, தேர்தலை சந்திக்க முடியாது என்பதால், கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் மனநிலை, சசிகலாவுக்கு எதிராகவே உள்ளது.

இதனிடையே, முதல்வர் எடப்பாடியின் கொங்கு வேளாளர் சமுதாயத்தின் சார்பில், எப்பாடு பட்டாவது அவரை மீண்டும் முதல்வர் ஆக்கிவிட வேண்டும் என்பதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து தொகுதிகளிலும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இவற்றில், சசிகலா விடுதலை விஷயத்தை தவிர அனைத்துமே யூகங்களின் அடிப்படையில் இருப்பதால், அவர் விடுதலையாகி வெளியே வந்த பின்னரே, அதிமுகவின் உண்மையான நிலவரம் தெரியவரும்.