தீவிரமடையும் கும்பகோணம் மாவட்ட கோரிக்கை: அமைச்சர் துரைக்கண்ணுக்கு நெருக்கடி!

எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, நிர்வாக வசதிக்காக பல்வேறு புதிய மாவட்டங்களை உருவாக்கி வருகிறது. அதன்படி, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய புதிய மாவட்டங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டன.

அந்த வகையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்ககோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அந்தக் கோரிக்கையை ஏற்று, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், கடந்த ஆண்டு ஜூலை மாதம், விரைவில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கும் கோரிக்கை மிகவும் வலுவடைந்தது. கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்திய கும்பகோணம் பகுதி மக்கள், அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து சமூக  அமைப்புகள் சார்பில், மகாமக குளம் அருகே இன்று மனித சங்கிலி போராட்டத்தை நடத்தி உள்ளனர்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏற்கனவே, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அண்மையில், நாகை மாவட்டத்தின் வடபகுதி தனியே பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டமும் அறிவிக்கப்பட்டது.

எனினும், ஒரு தலை நகருக்கு உரிய அனைத்து அடிப்படை வசதிகளும் நிரம்பப்பெற்ற கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் உறுதி அளித்த பின்னரும், இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தின் தெற்கு பகுதியில் திமுக வலுவாக இருப்பதால், அங்கு அதிமுக வெற்றி பெறுவது பெரும் சவாலாக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில், ஒரத்தநாடு தொகுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வி அடைந்தார். அதனால், வேறு வழியின்றி பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்ற துரைக்கண்ணுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

கடந்த முப்பது ஆண்டுகளாக டெல்டா மாவட்ட அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் ஆதரவே மேலோங்கி இருந்தது. தற்போது, மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதால், அந்த ஆதிக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் மேலும் குறைந்து விடும். இதனால், முதல்வர் எடப்பாடிக்கு மறைமுக நெருக்கடிகள் அதிகம் தரப்படுவதாகவும், அதன் காரணமாகவே கும்பகோணம் மாவட்ட அறிவிப்பு தள்ளிப்போவதகவும் சொல்லப்படுகிறது.

உத்தேச கும்பகோணம் மாவட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பாபநாசம் தொகுதியில், அதிமுக சார்பில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கண்ணு, தற்போது வேளாண் துறை அமைச்சராக உள்ளார்.

மற்ற இரு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று இருந்தாலும், திருவிடைமருதூர் தொகுதியில் நூலிழையிலும், கும்பகோணத்தில் மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்திலுமே அக்கட்சி வென்றுள்ளது.

இந்நிலையில், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால், அது அதிமுகவிற்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை வழங்கும். அது முதல்வர் எடப்பாடியில் செல்வாக்கையும் அதிகரிக்கச் செய்யும். எனினும், கடுமையான உள்கட்சி நிழல் யுத்தம் காரணமாக, கும்பகோணம் மாவட்ட அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

வரும் சட்டமன்ற தேர்தலுக்குள், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவில்லை என்றால், அது அதிமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அதனால், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க, அம்மாவட்ட அமைச்சர் துரைக்கண்ணு கடுமையாக போராடி வருகிறார். இருந்தாலும், உள்கட்சி அரசியலை அவரால் சமாளிக்க  முடியவில்லை. எடப்பாடி கைராசிக்காரர், முகராசிக்காரர் என அவர் எவ்வளவு புகழ்ந்தாலும், தனி மாவட்ட அறிவிப்பு மட்டும் இதுவரை கைகூடவே இல்லை.

இதேநிலை நீடித்தால், பாபநாசம் தொகுதியில் மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று, அமைச்சரான துரைக்கண்ணு அடுத்த தேர்தலில், வெற்றி பெறுவதே சிரமமாக இருக்கும் என்பதே இப்போதைய நிலை. துரைக்கண்ணுவின் வெற்றியை தடுக்க, ஏற்கனவே ஒரு அரசியல் லாபி முழுமூச்சில் வேலை செய்துகொண்டு இருக்கிறது.

எனினும், யார் வென்றாலும் தோற்றாலும், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்தே தீர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது, போராட்டக்குழு. எனவே, கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை மேலும் வலுவடையத் தொடங்கி உள்ளது.