விதைத்த அண்ணா: விளைந்த திமுக – அதிமுக!

பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய அளவில் செல்வாக்கு பெற்று விளங்கிய இரு இயக்கங்கள் காங்கிரசும், பொதுவுடைமை கட்சியுமே ஆகும். அந்த இரு இயக்கங்களும் திரும்பிபார்க்கும் வகையில், நாட்டின் தென்கோடியில் உருவான இயக்கம்தான் திராவிட இயக்கம்.

திராவிட இயக்கத்தின் வேர் என்பது நீதிக்கட்சி என்றாலும், நீதிக்கட்சி கிட்டத்தட்ட தமது முழு செல்வாக்கையும் இழந்துவிட்ட நிலையில்தான், திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார், அங்கு நிலவிய உயர் சாதி ஆதிக்கத்தை எதிர்த்தே 1925  ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். அதுவே 1944 ம் ஆண்டு திராவிடர் கழகமாக உருவெடுக்கிறது.

பிராமண எதிர்ப்பு, சமூக நீதி, இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற அடிப்படை கொள்கைகளுடன் திராவிடர் கழகம் இயங்கி வந்தது. அதில் பெரியாரின் சீடராக, தளபதியாக அண்ணா விளங்குகிறார்.

சுதந்திர தினத்தை துக்க நாளாக கடைபிடித்தல், பெரியார் – மணியம்மை திருமணம் போன்ற காரணங்களை முன்வைத்து, பெரியாரை விட்டு விலகிய அண்ணா 1949 ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவிக்கிறார்.

அண்ணாவுடன், நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன், என்.வி.நடராசன், ஆகியோர் அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களாக அறியப்பட்டனர்.

திராவிடர் கழகம் என்பது தேர்தலில் பங்கேற்காத ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். ஆனால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றாவிடில், இயக்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தார்.

விளைவு, அண்ணா தலைமையிலான திமுக 1957 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பங்கேற்று, சட்டமன்றத்தில்   15 இடங்களையும், நாடாளுமன்றத்தில்  2  இடங்களையும் கைப்பற்றியது.

நாடாளுமன்றத்திற்கு சென்ற ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.சம்பத், ஆற்றிய உரைகள் தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தி பேசாத மாநிலங்கள், விரும்பும் வரை இந்தி திணிக்கப்படாது என்ற உத்திரவாதத்தை, அப்போதைய பிரதமர் நேருவிடம் இருந்து பெற்றுத்தந்தவர் சம்பத்.

அதுவரை தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்ற மற்ற  எம்பிக்களைப் போல அல்லாமல், ஒவ்வொரு விவாதத்திலும் சம்பத்தின் உரை நாடாளுமன்றத்தையே ஒரு கலக்கு கலக்கியது. வடமாநிலங்கள் பலவற்றுக்கு செல்லவிருந்த தொழிற்சாலைகள் பலவும் தமிழகத்திற்கு வந்ததில் சம்பத்தின் பங்கு இன்றியமையாதது.

அதேபோல், தமிழகத்தில் டெல்லியின் தலைமையை மீறி, தமிழக மக்களின் உணர்வுகளையே வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி கொண்டு வரப்பட்டதற்கு சம்பத் ஒரு முக்கிய காரணமாகும்.

அப்படிப்பட்ட ஒரு எம்.பியை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த அண்ணா, தமிழகத்தில் இளைஞர்களை தமது பேச்சு, எழுத்து, போராட்டங்கள் மூலம் தன்பக்கம் ஈர்த்து, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலையை வளர்த்தார்.

அண்ணாவிடம் எழுத்தாற்றல், பேச்சாற்றல், இயக்கத்தை கட்டமைக்கும் திறன் பெரிய அளவில் இருந்தது. அதை விடவும், சம்பத், நெடுஞ்செழியன், கலைஞர் ஆற்றல் நிறைந்தவர்களை, சுதந்திரத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நிர்வகிக்கும் ஆற்றலும் மிகுந்து காணப்பட்டது.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், அறிவுப்பூர்வமான விளக்கங்கள், நாகரீகமான விமர்சனங்கள் போன்றவற்றின் ஆதாரமாக திகழ்ந்த அண்ணா, இந்தி எதிர்ப்பு, தமிழ் உணர்வு போன்ற தன்னெழுச்சியான மாணவர் போராட்டங்களைக்கூட தமது இயக்கத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுரியம் பெற்றிருந்தார்.

தமது குருவான பெரியாரே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோதும், அதை மிகவும் நாகரீகமாக எதிர்கொண்டார். பெரியாரை அவர் கடுமையாக விமர்சிக்கவே இல்லை.

பேச்சு, எழுத்து, நாடகம், திரைப்படம் மூலம் காங்கிரசுக்கு எதிரான வலுவான பிரச்சாரத்தை, அவர் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் மிக தெளிவாகக் கொண்டு சேர்த்திருந்தார். அதற்கு நிகரான ஒரு எதிர் பிரச்சாரம் இன்று வரை எந்த ஒரு அரசியல் கட்சிகளாலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.

அதன் விளைவாக அடுத்து 1962 ம் ஆண்டு நடந்த இரண்டாவது தேர்தலில், அண்ணா, நாவலர் போன்றவர்கள் தோற்றாலும் 50 இடங்களில் வெற்றிபெற்ற திமுக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது.

இதனிடையே, ஈ.வி.கே.சம்பத் திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியபோதும், அது திமுகவின் வெற்றியை கொஞ்சம் கூட பாதிக்கவில்லை.

அடுத்து 1967 ல் நடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. அண்ணா முதல்வர் ஆனார். அன்று ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி இன்று வரை இன்னும் ஆட்சியை பிடிக்கவில்லை.

அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் அதாவது  1969 ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவரைத்தொடர்ந்து கலைஞர் முதல்வரானார்.  பின்னர் 1971 ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுகவே வெற்றி பெற்று கலைஞர் முதல்வர் ஆனார்.

அதன் பின்னர் திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர், அண்ணா திமுக என்ற கட்சியை தொடங்கி 1977 ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து 1980, 1984 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுகவே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் 1989 ம் ஆண்டு கலைஞர் மீண்டும் முதல்வர் ஆனார். அதன் பிறகு 1991 முதல்  2016 வரை திமுகவும், அதிமுகவுமே மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றன.

குறிப்பாக 1967 முதல் கடந்த   53 ஆண்டுகளாக அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவும், அதில் இருந்து பிரிந்த அதிமுகவுமே தொடந்து தமிழகத்தை ஆண்டு வருகின்றன.

பெரியாரால் கருவாகி, அண்ணாவால் உருவாகி, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற ஆளுமைகளால் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்பது இதுவரை உருவாகவே இல்லை என்பதே இதுவரை உள்ள நிலை.

அந்த அளவுக்கு திராவிட இயக்கத்திற்கு வலுவான விதையை  ஊன்றியவர் பெரியார் என்றாலும், அதை அடுத்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக தமிழத்தை ஆளும் அளவுக்கு வளர்த்தெடுத்த பெருமை அண்ணாவையே சாரும்.

1909 ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா  1969 ம் ஆண்டு வரை அறுபது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஆனால், அவர் உருவாக்கிய இயக்கம் அடுத்தடுத்து பல்வேறு பரிணாமங்களை கொண்டிருந்தாலும், இன்னும் வலுவாகவே இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பதற்கு அண்ணாவே மிகச்சிறந்து எடுத்துக்காட்டு.