பாஜகவை கூட்டணியில் சேர்ப்பதா? தவிர்ப்பதா?: குழப்பத்தில் அதிமுக!

சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவை கூட்டணியில் சேர்ப்பதா? அல்லது தவிர்ப்பதா? என்ற குழப்பத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற குழப்பத்திற்கு இன்னும் தெளிவான முடிவு எட்டப்படாத நிலையில், பாஜக பிரச்சினை மேலும் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் இருந்த போதும், மூன்றாண்டுகளுக்கும் மேலாக வகித்து வரும் முதல்வர் பதவியின் மூலம், கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கென வலுவான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் எடப்பாடி.

எனினும், முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சினை எழுந்த போது வெடித்த போஸ்டர் யுத்தங்கள் மூலம், பன்னீர் கொடுத்த நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

பன்னீருக்கு நெருக்கமான கே.பி.முனுசாமி போன்றவர்கள், எடப்பாடியிடமும், பன்னீரிடமும் மாறி மாறி பேசி, அந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியும், தமிழக அமைச்சரவையில் தாம் கேட்கும் துறையும் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று பன்னீர் விதித்த நிபந்தனையை எடப்பாடி ஏற்றுக்கொண்டார். அதனால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிப்பதில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கும் “கிசான்” ஊழல் விவகாரத்தில், எதிர்கட்சியான திமுகவை விட, பாஜக கொடுத்த குடைச்சல், எடப்பாடியை ரொம்பவும் அப்செட் ஆக்கிவிட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு மூலம், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் நிதி முறையாக சென்று சேர்ந்தது என்றும், ஆனால், மத்திய அரசே நேரடியாக ஆன்லைன் மூலம், அந்த நிதியை விநியோகித்தபோதுதான் சிக்கல் எழுந்ததாக, தம்மிடம் பேசிய கட்சி நிர்வாகிகளிடம் முதல்வர் கூறி இருக்கிறார்.

நிலைமை இப்படி இருக்க, பன்னீரின் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரைவில் இடம் பெற்றுத் தருவது என்பது, பாஜகவோடு கூட்டணி என்பதை உறுதிப்படுத்தும் விஷயம். இதில் முதல்வருக்கு உடன்பாடு இல்லை.

ஏற்கனவே, தங்கள் கூட்டணியில் பாஜக இருந்தாலும், அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பாஜகவை கூட்டணியில் வைத்துக் கொண்டால், சிறுபான்மையினர் வாக்குகள் அனைத்தும் மொத்தமாக எதிர்க்கட்சி பக்கம் திரும்பிவிடும். இது அதிமுகவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதல்வர் நினைக்கிறார்.

இருந்தாலும், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதே பாதுகாப்பு என்று பன்னீர்செல்வம் உறுதியாக நம்புகிறார். எடப்பாடிக்கு நெருக்கமான கொங்கு மண்டல அமைச்சர்களும் அதையே முதல்வரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் மட்டுமே கட்சிக்கும், தமது தலைமைக்கும் நல்லது என்று நினைக்கும் முதல்வர் எடப்பாடி, பாஜகவை கூட்டணியில் சேர்த்தால், அது அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் என்று அஞ்சுகிறார்.

இந்த விவகாரமே தற்போது அதிமுகவில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.