இந்தி படிப்பது தவறல்ல… இந்தியை திணிப்பது முறையல்ல!

இந்தியே இந்தியாவின் தேசிய மொழி, இந்தியை எதிர்ப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்ற வாதம் தொடர்ந்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்தி எதிர்ப்பின் தாயகம் தமிழகம் என்றும் இந்தியை எதிர்ப்பதால், தமிழகம் பின்தங்கி விட்டது என்ற கூச்சல்களும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.

உண்மையில், மொழி என்பது அடிப்படையில் ஒருவரின் எண்ணத்தை மற்றவருக்கு வெளிப்படுத்தும் கருவிதான் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதேபோல், ஒருவர் மற்றொரு மொழியை கற்றுக்கொள்வதிலும் தவறு இல்லை.

ஆனால், அதற்காக காலாகாலமாக பேசப்பட்டு வந்த ஒரு மொழியை புறந்தள்ளிவிட்டு, இன்னொரு மொழியை திணிப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

இங்கே, இந்தி கற்பதை யாரும் எதிர்ப்பதில்லை. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கின்றனர் என்பதை அறியாமலே பலர் தங்களது கருத்துக்களை உதிர்த்து வருகின்றனர்.

உண்மையிலேயே இந்தியை தமிழக மக்களும், அரசியல் இயக்கங்களும் எதிர்த்தால், இங்குள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் எப்படி இந்தி மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற கேள்வி எழும் அல்லவா?. எனவே இந்தி படிப்புக்கும், இந்தி திணிப்புக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல்வேறு இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், மாறுபட்ட நிலப்பரப்புக்கள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் நிறைந்த துணைக்கண்டம். இந்த துணைக்கண்டத்தின் ஒற்றுமையை நிலைநாட்ட, இங்கு பேசப்படும் அனைத்து மொழிகளும் சமமானவை என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

இதை உணர்ந்தே, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள்தான் என்று அறிவித்தார்.

ஆனாலும், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 1937 ம் ஆண்டு சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, இந்தியை கட்டாயப்பாடமாக திணித்த போது, இங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. தாலமுத்து-நடராசன் என்ற இரு மொழிப்போர் தியாகிகள் இன்றுவரை மக்கள் மனதில் நிலைத்து நிற்பதற்கு காரணமே, அப்போது நடந்த மாபெரும் போராட்டம்தான்.

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கங்கள் தொடங்கப்படாத காலகட்டத்திலேயே, இந்தியை கட்டாயமாக்கி, தமிழ் உணர்வை தூண்டியதற்கு ராஜாஜியே முக்கிய காரணமாவார்.

அதன் பின்னர் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்தபோது, இந்தி திணிப்பு கூடாது என்று அதை எதிர்க்கும் அளவுக்கு துணிந்தவரும் ராஜாஜியே.

அப்போது, சென்னை ராயப்பேட்டையில் யுவர்ஸ் என்ற ஒரு அமைப்பின் சார்பில் இந்தி எதிர்ப்பு குறித்த கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் பேசிய அண்ணா, “நாகின்” என்ற ஆங்கில படத்தில், ஒருவனை கடித்த பாம்பு, கடித்த இடத்தில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சி மீண்டும் உயிர்பிழைக்க செய்யும். அதுபோல, இந்தி திணிப்புக்கு காரணமான ராஜாஜியே, அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பேசினார்.

 

இந்தி திணிப்பை எதிர்ப்பது ஏன்?

இந்தியாவில் மொகலாய படையெடுப்புகள் 1175 வாக்கில் தொடங்கின. அதன் பின்னர் வடஇந்தியாவில் உள்ள மன்னர்கள் பலரையும் வென்று  1340 ம் ஆண்டில் மொகலாயர் ஆட்சி டில்லியை தலைநகராகக் கொண்டு வலுவாக அமைந்தது.

அதற்கு முன்பு வரை, வடஇந்தியாவில் பிராகிருதி என்னும் ஒரு வகை மொழியை அங்குள்ள பெரும்பாலான மக்கள் அனைவரும் பேசி வந்தனர். அதற்கு பேச்சு வடிவம் மட்டுமே இருந்தது எழுத்து வடிவம் இல்லை.

மொகலாயர் ஆட்சியில் அங்குள்ள பிராகிருத மொழியுடன் அரபு மற்றும் பாரசீக வார்த்தைகள் கலந்து உருது மொழி உருவானது. உருது என்பதற்கு பாசறை அல்லது படைவீடு என்பது பொருள். மொகலாயர் ஆட்சியில் வடஇந்தியாவில் உருது மொழியே அலுவல் மொழியாக இருந்தது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரம் செலுத்தும் போது, 19 ம் நூற்றாண்டின் மையப்பகுதியில், பிராகிருத மொழியில் கலந்துள்ள அரபு மற்றும் பாரசீக வார்த்தைகள் பெரும்பாலும் களையப்பட்டு அதில் சமஸ்கிருத வார்த்தைகளும், தேவநாகரி வரி வடிவமும் கொடுக்கப்பட்டு இந்தி உருவாக்கப்பட்டது.

இதில், வடஇந்தியாவில் பேசப்பட்ட பல்வேறு மொழிகளின் வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டன. இது முழுக்க, மொகலாயர்களுக்கு எதிரான மொழியாகவே உருவாக்கப்பட்டது.

அதற்குப் பின்னர், ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தி மொழிக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதால், உருது மொழி தமது முக்கியத்துவம் அனைத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தி மொழியால், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்கள் பலவற்றில் பேசப்பட்ட மொழிகளும் தமது முக்கியத்துவத்தை இழந்தன.

ஆனால், தமிழ் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணம் கண்ட ஒரு மொழி. அன்று முதல் இன்று வரை மக்களால் தொடர்ந்து பேசப்பட்டு வரும் மொழி. உலக அளவில் இணையத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் மொழிகளில் ஒன்று. மேலும், எந்த மொழிக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மொழி அல்ல.

இந்தி மொழியில் துளசிதாசர் “ராமாயணமும்” கபீர்தாசரின் “விப்ரமதீசி” ஆகிய இரண்டுமே நூறு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவையே. இதில் ஒருவர் “மைதிலி” மொழியிலும், மற்றொருவர் “அவதி” மொழியிலும் பாடியுள்ளார். இரண்டுமே இந்தி என்றாலும், இந்தி தெரிந்த ஒருவரால் இந்த இரண்டையும் படித்து பொருள் கொள்ள இயலாது.

ஆனால், தமிழில் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், தமிழில் உள்ள அனைத்து இலக்கியங்களையும் படித்தவர் என்று யாராலும் சொல்ல இயலாது. அந்த அளவுக்கு எண்ணற்ற இலக்கியங்கள் தமிழில் குவிந்து கிடக்கின்றன.

ஒருவர் திருக்குறளை படிக்க முயன்றால், அதிலேயே அவர் ஆயுள் முழுவதும் மூழ்கிக் கிடக்க வேண்டும். அவர் திருக்குறள் முனுசாமியாக மட்டுமே இருக்க முடியும்.

சிலப்பதிகாரத்தை கற்கத் தொடங்கினால், அவரால் அதை விட்டு மீண்டு வரவே முடியாது. அவர் சிலம்பு செல்வராகவோ, சிலம்பொலி செல்லப்பனாகவோதான் இருக்க முடியும்.

நிலைமை இப்படி இருக்க, இந்தி கற்பதற்கு எளிதான மொழி. அதை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்புபவர்களிடம் நாம் என்ன பதில் சொல்ல முடியும். இந்தி கற்பதை இங்கே யார் எதிர்க்கிறார்கள்? இந்தி திணிப்பைத்தானே எதிர்க்கின்றனர்.

மூன்று நூற்றாண்டு பாரம்பரியம் கூட இல்லாத ஒரு மொழியை இங்கே திணிப்பதால், உருது மொழிக்கு ஏற்பட்ட நிலை தமிழுக்கும் ஏற்பட்டுவிடாது என்பதற்கு என்ன உத்திரவாதம்.

விந்திய மலைகளுக்கு வடக்கே இருந்த பல்வேறு மொழிகள், தங்களது சுயத்தை இழந்து நிற்கும் நிலை, தமிழுக்கு வரக்கூடாது என்பதற்காகவே, இந்தி திணிப்பு இங்கே எதிர்க்கப்படுகிறது. இந்தி கற்பதை இங்கே யாரும் எதிர்ப்பதில்லை.

எனவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுமே, இந்தியாவின் தேசிய மொழிகள் என்பதை மறந்து, தேவை இல்லாமல் ஏதாவது ஒரு மொழியை திணிப்பதன் மூலமே, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், அமைதிக்கும் குந்தகம் விளையும் என்பதை மொழி அரசியல் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்: நாடாளுமன்றத்தில் ஈ.வி.கே.சம்பத், அண்ணாவின் படைப்புகளில் வெளியான “மறைமலை அடிகளாரின் கட்டுரை”, நமது பிளாக்ஸ்பாட்டில் நக்கீரன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை.