எழுபது ஆண்டுகள் கடந்தும் வெல்ல முடியாத திராவிடம்: பெரியார் – அண்ணாவின் கடிதங்கள் சொல்லும் உண்மை!

தமிழ்நாட்டில் தொடங்கப்படும் ஒவ்வொரு கட்சியும், திராவிட இயக்கங்களுக்கு மாற்று கட்சி தாங்களே என்று மார்தட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. உண்மையில் எழுபது ஆண்டுகளை கடந்தும் வலுவாக இயங்கும் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இதுவரை எந்த ஒரு இயக்கமும் உருவாகவில்லை என்பதே உண்மை.

அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், திராவிட இயக்கங்களை வலுவாக கட்டி எழுப்பிய பெரியார், அண்ணா போன்றவர்களின் அரசியல் அணுகுமுறைகளையும், அவர்களது செயல்பாடுகளையும் அறிய வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

எந்த ஒரு தலைவரையும், இயக்கத்தையும் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனாலும், அவர்கள் எப்படி ஜெயித்தார்கள்? நம்மால் ஏன் முடியவில்லை? என்ற திறந்த மனதுடன் அவற்றை ஆராய்ந்தால், உண்மை விளங்கும்.

தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் முன்னோடி தலைவர்களான பெரியார், அண்ணா ஆகிய இருவரும் செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள். 17.09.1879 ல்  பெரியாரும், 15.09.1909 ல் அண்ணாவும் பிறந்தனர்.   இவ்விருவரின் பிறந்த நாட்கள் நெருங்கும் வேளையில், இதைப்பற்றி  சிந்திப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பெரியார் 1925 ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். ஆயினும் 1944 ம் ஆண்டே திராவிடர் கழகம் உருவானது.

பகுத்தறிவு, சுயமரியாதை, பிராமணர் எதிர்ப்பு, சமூக நீதி போன்ற அடிப்படை கொள்கைகளை தன்னகத்தே கொண்டு தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்தில்தான், பெரியாரை விட 30 வயது இளையவரான அண்ணாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த உயர்சாதி ஆதிக்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட இயக்கம் என்பதால், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை இன மக்களின் ஆதரவுடன் பெரும் செல்வாக்கு பெற்ற இயக்கமாக திராவிடர் கழகம் மாறியது.

ஒரு இயக்கம் தமது கொள்கையை விளக்கி, தொண்டர்களின் முழுமையான ஆதரவுடன் வலிமையான வளர்ச்சியை சந்திக்க வேண்டுமானால், அந்த கொள்கை அனைத்தும், அடிமட்ட தொண்டன் வரை குழப்பம் இல்லாமல் போய் சேர வேண்டும்.

அதேபோல, கொள்கையை உருவாக்கும் தலைமை, அதில் இருந்து பிறழாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டும் பெரியார் மற்றும் அண்ணாவிடம் இருந்தன. சுயமரியாதை இயக்கம் தொடங்க வேண்டியதன் அவசியம் குறித்து குடியரசு இதழில் பெரியார் எழுதிய கட்டுரையும், ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் அண்ணா மனநிறைவுடன் இல்லை என்பதை விளக்கும் அவரைது கடிதமும் அதை பறை சாற்றுகின்றன.

சுயமரியாதை இயக்கம் தம்மால் எதற்காக தொடங்கப்பட்டது என்று குடியரசு இதழில் 18.07.1937 அன்று பெரியார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே காண்போம்..

“என்ன காரணத்தினாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம். எப்படியோ உயிர் வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து ஆகும்.

அதாவது உழைக்க உறுதியும், ஆசையும், சோம்பேறித்தனமும், களுப்பினித்தனமும் இல்லாத திடம் உள்ள சரீரமும், தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்கு சரியென்று தோன்றிய அபிப்ப்பிராயங்களை – வாழ்க்கை நலத்துக்காக, முடிவுகளை தனது வாழ்க்கைக்காக, மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லாத – சாகும்வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்ததிலோ எதுவோ, அதுவே மேற்கண்ட சம்பத்து ஆகும்.

அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக்கொண்டு இருப்பதால்), அந்த நிலையை பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலை என்று எதைக் கருதுகிறேனோ அதை செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.” என்று கூறுகிறார்.

இந்த கட்டுரையின் தொடக்கத்தில், தன்னுடைய குடும்பம் வணிகத்தில் தேவையானதை சம்பாதித்து விட்டது. அந்த பொறுப்புக்கள் அனைத்தும் தனது கைகளுக்கு வந்த பிறகு நானும் அதை பல மடங்கு பெருக்கி விட்டேன். அதன் பிறகே இந்த பணியில் இறங்கி இருக்கிறேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார்.

இதிலிருந்து, ஒரு மனிதன் குறைந்த பட்சம் தமது பொருளாதார விஷயங்களில் தன்னிறைவு அடைந்த பின்னரே, பொது வாழ்க்கைக்கு வரவேண்டும். அப்போதுதான், யாருக்காகவும், எதற்காகவும் தன்னுடைய கொள்கையை, போக்கை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்லாமல் சொல்கிறார்.

திராவிடர் கழகத்தின் முக்கிய தூணாக விளங்கிய அண்ணா, பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக அதில் இருந்து பிரிந்து 1949 ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். அண்ணாவையும், திமுகவையும் கடுமையாக பெரியார் விமர்சித்து களமிறங்கினாலும், பெரியார் மீதான விமர்சனங்களை தவிர்த்தே அண்ணா அரசியல் செய்தார்.

இன்னும் சொல்லப்போனால், திமுக தலைவர் பதவி என்பது அண்ணா உயிரோடு இருக்கும் வரை காலியாகவே இருந்தது. அது பெரியாருக்கான இடம் என்பதில் அண்ணா உறுதியாகவே இருந்தார்.

திமுக தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் கழித்தே முதன்முதலாக தேர்தலை சந்தித்தது. 1957 ம்  ஆண்டு திமுக சந்தித்த முதல் தேர்தலில்   15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்கட்சி அந்தஸ்து கூட அதற்கு கிடைக்கவில்லை.

அடுத்து  1962 ம் ஆண்டு சந்தித்த இரண்டாவது தேர்தலில் திமுக  50 இடங்களை கைப்பற்றி சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக அமர்ந்தது. இந்த தேர்தலில் அண்ணா, நெடுஞ்செழியன் போன்ற முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தாலும், இயக்கம் எந்த வகையிலும் பலவீனம் அடையவில்லை.

அடுத்து  1967 ம் ஆண்டு சந்தித்த மூன்றாவது தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. 6-3-1967 அன்று அண்ணா தலைமையிலான திமுக அமைச்சரவை பொறுப்பேற்றது. அதற்குபிறகும் கூட அண்ணா திருப்தியாக இல்லை. நெஞ்சு கொள்ளாத அதிருப்தியுடன் இருந்தார். தம்பிக்கு எழுதிய கடிதத்தில் அது அம்பலத்திற்கு வந்தது.

“சிலர் தங்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். என்னிடம் காரசாரமாகக் கூடப் பேசினார்கள். வெளியே போய் என்னைக் கண்டபடி திட்டினார்கள். சிலர் என் வீட்டுக்கு  முன்னால் நின்று, மண்ணை வாரித் தூற்றினார்கள். சிறிதுகாலம் பொறுத்து, நாமெல்லாம் பக்குவப்பட்டதற்குப் பிறகு இந்த ஆட்சி நமக்கு கிடைத்திருக்கலாம். மிகச் சீக்கிரமாகவே இந்த ஆட்சி நமக்குக் கிடைத்திருக்கிறது. எதிர்காலத்தில் நாம் மகிழ்ச்சியை விடத் தொல்லைகளையும் துயரங்களையும்தான் அதிகமாகத் தாங்க வேண்டி வரும் என்று நான் கருதுகிறேன்.” என்று அந்த கடிதத்தில் அவர் தனது மனவேதனையை அவர் கொட்டி இருந்தார்.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான பெரியார், ஒரு இயக்கத்தை தொண்டர்களின் ஆதரவுடன் கட்டியமைக்கும் தலைவன்,  தன்னிறைவுடன், சுயமரியாதையுடன் நடந்து கொள்வது எப்படி? என்று கூறினார்.

அவரது சீடரான அண்ணா, ஆட்சி பொறுப்பிற்கு வந்த பின்னரும், தனக்குள்ள நெருக்கடிகளை வெளிப்படையாக எடுத்துக் கூறி, தாம் ஒரு முழுமையான ஜனநாயகவாதி என்பதை நிரூபித்து விட்டார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு வழிகோலியவர் பெரியார். அதை செயல்படுத்தியவர் அண்ணா. அதை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டவர்கள் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று வைத்துக்கொள்ளலாம்.

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சிப்பொறுப்பை இழந்து கிட்டத்தட்ட  53 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அக்கட்சி மீண்டும் துளிர்விடாமல் இருப்பதற்கு திராவிட இயக்கங்கள் மட்டுமே பொறுப்பல்ல. அதற்கு காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமைக்கும் முக்கிய பங்கு உள்ளது.

1952 ம் ஆண்டு நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடத்தில் பொதுவுடைமை கட்சி இருந்தது. ஆனால், அதன்பிறகு இன்று வரை ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு திராவிட கட்சியினை நாடும் நிலையிலேயே அது உள்ளது.

வடதமிழகத்தின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக விளங்கும் வன்னியர் சமூகத்தின் பின்னணியுடன் களமிறங்கிய பாமக, முப்பது வருடங்களை கடந்து அரசியல் செய்தாலும் இன்னும் 6 சதவிகித வாக்குகளுக்கு மேல் வாங்க முடியாத நிலையே உள்ளது.

திமுக, அதிமுகவில் இருந்து பலர் பிரிந்து வந்து புதிய கட்சியை தொடங்கினாலும், அவர்களால் மக்கள் செல்வாக்கை பெற முடியவில்லை. கட்சியை வளர்க்கும் சூத்திரமும் அவர்களுக்கு கைவசம் ஆகவில்லை. பெரும் ஆரவாரத்துடன் திமுகவில் இருந்து பிரிந்த மதிமுகவின் நிலை கவலை அளிப்பதாகவே உள்ளது.

அதேபோல், சினிமா மூலம் மக்களின் செல்வாக்கு பெற்று தேர்தலில் போட்டியிட்டு 8 முதல் 10 சதவிகிதம் வரை வாக்குகளைப் பெற்ற, நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு இன்று  2 சதவிகித வாக்குகளாவது கிடைக்குமா? என்பதே சந்தேகமாக உள்ளது.

இதிலிருந்து, திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தமிழகத்தில் ஒரு வலுவான இயக்கம் இதுவரை உருவாகவே இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னும் இதே நிலைதான் தமிழகத்தில் நீடிக்கிறது.

தலைநகர் தொடங்கி, குக்கிராமம் வரை கட்சியின் கொள்கை சென்றடையவும், வலுவான இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் உள்ளூர் பொறுப்பாளர்களை உருவாக்கவும் எந்த இயக்கமும் தயாராக இருக்கவில்லை என்பதே அதற்கு முக்கிய காரணமாகும்.

ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் ஏதோ ஒரு வகையில் இக்கட்சிகள் அனைத்தும் மனநிறைவை அடைந்து விடுகின்றன. ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற இதயப்பூர்வமான என்னமோ, அதற்கான செயல் திட்டமோ, திமுக, அதிமுகவைத் தவிர  எந்த கட்சிக்கும் இல்லவே இல்லை என்று நாம் உறுதியாக சொல்லலாம்.

சிறு கட்சிகள், இத்தகைய மனநிறைவில் இருந்து விடுபட்டு, இரண்டாம் கட்ட தலைவர்களையும், உள்ளூர் பொறுப்பாளர்களையும் வளர்ப்பதற்கு எப்போது தயாராகிறதோ, அதுவரை தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்ற சிந்தனை கூட உருவாக வாய்ப்பு இல்லை.