எடப்பாடி எதிர்ப்பில் தீவிரம்: மீண்டும் சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்!

கலைஞர், ஜெயலலிதா என்ற இரு பெரும் திராவிட ஆளுமைகள் இல்லாத நிலையில், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும், அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்றன.

இந்த தேர்தலின் வெற்றி, தோல்வி என்பது திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மற்றும் அவற்றின் தலைமையின் எதிர்காலத்திற்கும் எழுந்துள்ள சவாலாகவே உள்ளது.

எனவே எப்படியாவது வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, பிரசாந்த் கிஷோரை திமுகவும், சுனிலை அதிமுகவும், தேர்தல் வியூக நிபுணர்களாக பணியமர்த்தி உள்ளன.

இருந்தாலும், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடங்கி, கூட்டணி கட்சிகளை சமாளிப்பது வரை பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

சசிகலா சிறையில் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, டெல்லி மேலிடத்தின் ஆதரவைப் பெற்ற எடப்பாடி, கட்சி நிர்வாகிகள் பலவற்றையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்.

ஆனாலும், பன்னீரின் எதிர்ப்பு என்பது நீருபூத்த நெருப்பாகவே கனன்றுகொண்டு இருக்கிறது. எடப்பாடியை எதிர்த்து வெற்றிகொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்த பன்னீர், சில கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்ற மனநிலைக்கும் வந்து விட்டார்.

ஆயினும், சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடியை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அதே சமயம் சசிகலாவின் விடுதலை குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை.

இந்நிலையில், எடப்பாடி எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து சசிகலா ஆதரவுடன் அதிமுகவில் வலுவான ஒரு அணியை உருவாக்க, சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த அணிக்கு தலைமை ஏற்க பன்னீரும் முடிவு செய்து விட்டதாகவே சொல்லப்படுகிறது.

சசிகலா ஆதரவுடன் முதல்வரான எடப்பாடி, ஆட்சி மற்றும் கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார். இது சசிகலாவுக்கு செய்யும் துரோகம் என்று தினகரன் தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், சசிகலா குறித்து எடப்பாடி இதுவரை நேரடியாக எந்த கருத்தையும் உதிர்க்கவில்லை.

அதேசமயம், சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய பன்னீர், தமது நிலையை வலுப்படுத்திக் கொள்ள, சசிகலா அணிக்கு செல்வதற்கு  தயாராகி விட்டார் என்றே சொல்லப்படுகிறது.

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மேற்கு மாவட்டங்களில் எடப்பாடிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தென் மாவட்டங்களின் சில இடங்களில் சசிகலா மற்றும் பன்னீரின் ஆதரவாளர்கள் வலுவாக உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் சசிகலா எதிர்ப்பே மேலோங்கி இருக்கிறது.

அதிக தொகுதிகளைக் கொண்ட வடமாவட்டங்களில் திமுக ஓரளவு வலுவாகவே இருக்கிறது. இங்கு பன்னீர், சசிகலா போன்ற எவராலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. மேலும், பாமகவின் வலுவான வாக்கு வங்கியின் மூலம் திமுகவை இங்கே துடைத்து எரிந்து விடலாம். அதன்மூலம் தமது தலைமையை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பதே எடப்பாடியின் கணக்கு.

இவ்வளவு வலுவாக இருக்கும் எடப்படியை எப்படி வீழ்த்துவது என்று யோசித்துதான், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில், பன்னீரை மீண்டும் தமது ஆதரவு வளையத்திற்கு தினகரன் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய பன்னீருக்கு, கட்சி தொண்டர்கள் மட்டுமன்றி பொது மக்களும் தாமாக வந்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது மக்கள் தலைவர் ரேஞ்சுக்கு பேசப்பட்ட பன்னீர், அடுத்த சில மாதங்களில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆகி, துணை முதல்வராக பதவியேற்று மக்கள் செல்வாக்கை இழந்தார்.

தற்போது, எடப்பாடியை எதிர்க்கும் நோக்கத்தில் மீண்டும் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளதாகக் கூறப்படும் பன்னீரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.