கோரிக்கைகளால் நெருக்கும் கூட்டணி கட்சிகள்: அடக்கி வாசிக்கும் அதிமுக!

தமிழக அரசியல் கட்சிகளில் அமைப்பு ரீதியாக வலுவாக இருக்கும் , ஒரே கட்சி திமுக. அதன் காரணமாகவே, கலைஞர் மறைவுக்குப்பின், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழாமலே, ஸ்டாலின் தலைமையில் இயங்கி வருகிறது.

ஆனால் அதிமுகவுக்கு தொண்டர்கள் பலமும், வாக்கு வங்கியும் வலுவாக இருந்தாலும், அமைப்பு ரீதியாக அவ்வளவு வலுவாக இல்லை. அதனால், ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவின் தலைமை  இன்னும் சரியாக அடையாளம் காணப்படவில்லை.

அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் இருந்தாலும், கட்சி மற்றும் ஆட்சியில் முதல்வர் எடப்பாடியின் ஆதிக்கமே ஓங்கி இருக்கிறது. இதுவே, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சைக்கு முடிவு எட்டப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுக்கொரு கோரிக்கையை கையில் எடுத்துக் கொண்டு, வெளிப்படையாக பேசி வருவதால், கூட்டணிக்குள் லேசான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

விநாயகர் சதுர்த்தி விவகாரத்திற்குப் பிறகு, பாஜக தனித்து நின்றாலே 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அதன் தமிழக தலைவர் முருகன் கூறி இருப்பதும், தமிழகத்தில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையில்தான் போட்டி என்று வி.பி.துரைசாமி கூறி இருப்பதும், அக்கட்சி தனி கூட்டணியை உருவாக்கப்போகிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிகவின் பிரேமலதா, தமிழக மக்கள் மாற்று அரசியலை விரும்புகிறார்கள் என்றும், அதிமுக, திமுக ஆகிய பூனைகளுக்கு மணி கட்டுவது யார்? என்றும் பேசி வருகிறார். அதனால், தேமுதிகவும் அதிமுக கூட்டணியை விட்டு அகல நினைக்கிறதா? என்ற கேள்வியை உருவாக்கி உள்ளது.

அதிமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான பாமகவும், கூட்டணி குறித்து பிடி கொடுக்காமல் பேசி வருகிறது. அண்மைக்காலமாக, பாமகவுக்கும் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் எதிராக, வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஒரு சில அமைப்புகள், சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு பின்னால், அதிமுகவை சேர்ந்த சில வன்னிய தலைவர்கள் இருக்கக்கூடும் என்று பாமக தலைமை சந்தேகிக்கிறது. இதற்கிடையில், அண்மையில் பேசிய வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, வன்னியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சியுடன்தான் அடுத்த கூட்டணி என்று வெளிப்படையாகவே பேசி உள்ளார்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, அதிமுக கூட்டணியில் லேசான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஆனாலும், இதுகுறித்து முதல்வர் எடப்பாடியோ, அதிமுகவை சேர்ந்த மற்ற தலைவர்களோ, இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து அதிமுகவை சேர்ந்த சிலர் கூறுகையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு இறுதி செய்யப்படும் வரை இது போன்ற சிறு சிறு சலசலப்புக்கள் இருக்கவே செய்யும். ஆனால், அதற்குப் பின்னர் அனைத்தும் சுமூகமாக முடிவுக்கு வந்துவிடும். எனவே, முதல்வர் உள்பட அதிமுகவை சேர்ந்த யாரும், இதுகுறித்து இப்போதைக்கு எதுவும் பேசமாட்டார்கள் என்று கூறுகின்றனர்.

மேலும், அதிமுகவில் ஜெயலலிதா போன்ற வலுவான தலைமை தற்போது இல்லை என்பதால், கூட்டணி கட்சிகள் கூடுதலாக இடங்களை பெறும் நோக்கில் இதுபோன்று பேசி வருகின்றன. ஆனாலும், அனைத்தும் வெகு விரைவில் சுமூகமாக பேசி தீர்க்கப்படும் என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர்.