கன்னியாகுமரியை கைப்பற்றியே தீர வேண்டும்: காங்கிரஸ் – பாஜக தீவிரம்!

தமிழ்நாட்டின் தென் கோடியில், கேரளாவை ஒட்டி இருக்கும்  மாவட்டமான கன்னியாகுமரியின் அரசியலும், வித்தியாசமாகவே இருக்கும்.

தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வலுவான வாக்கு வங்கிகளை கொண்டிருக்கும் திமுக மற்றும் அதிமுகவின் அரசியல் இம்மாவட்டத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

அதேசமயம், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, இடது சாரி ஆகியவை ஓரளவு வலுவான வாக்கு வங்கிகளை கொண்டுள்ளன. நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த தொகுதியில், மீனவர்கள், பிள்ளைமார், நாயர் சமூகத்தினரும் அதிக அளவில் உள்ளனர். எனினும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், இதுவரை நாடார் சமூகத்தினரை தவிர வேறு யாரும் வெற்றி பெற்றதில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை நெல்லையே நமது எல்லை. குமரி நமக்கு இல்லை என்றும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அல்ல, நாடார் மன்ற தொகுதி என்றும் கலைஞர் வேடிக்கையாக சொன்னதாகவும் சிலர் கூறுவதுண்டு.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க கடுமையாக போராடியவர் மார்ஷல் நேசமணி. அதன் விளைவாக 1956 ம் ஆண்டு, தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைக்கப்பட்டது.

முன்னதாக, 1951 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனவர் மார்ஷல் நேசமணி. 1957 ம்  ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தாணுலிங்க நாடார் வெற்றி பெற்றார். பின்னர்  மீண்டும்   1962  1967 ம் ஆண்டு தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மார்ஷல் நேசமணியே வெற்றி பெற்றார்.

மார்ஷல் நேசமணி இறந்ததையடுத்து,   1969 ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் மற்றும்  1971 பொதுத்தேர்தல் ஆகியவற்றில் காமராஜர் வெற்றி பெற்றார்.

1977 ம் ஆண்டு தேர்தலில்  குமரி அனந்தன் வெற்றி பெற்றார். அதையடுத்து , 1980, 1984, 1989, 1991, 1996, 1998  ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் வேட்பாளர் என்.டென்னிஸ் தொடர்ந்து ஆறுமுறை வெற்றி பெற்றார்.

1999 ல், பாஜகவின் பொன்னார் வெற்றி பெற்றார். 2004 ல் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பெல்லார்மின் வென்றார்.     2009 ல் திமுகவின் ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றார்.  2014 ல் பொன்னார் மீண்டும் வெற்றி பெற்றார்.

கடந்த 2019  தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற வசந்த குமார், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ம் தேதி மறைந்தார்.

நாகர்கோயில் தொகுதியாக இருந்த இத்தொகுதி, 2009 ம் ஆண்டு தேர்தலில் இருந்து கன்னியாகுமரி தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஒரு இடைத்தேர்தல் உள்பட, இத்தொகுதியில் இதுவரை 18 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 14  முறை காங்கிரஸ் கட்சியும், 2 முறை பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட், திமுக ஆகியவை தலா 1 முறை வென்றுள்ளன.

இந்நிலையில், வரப்போகும் கன்னியாகுமரி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி, மறைந்த வசந்த குமாரின் மகன் விஜய் வசந்துக்கே சீட் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ரூபி மனோகரனும் கடுமையாக முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

பாஜக தரப்பில் பொன்னாரே, அக்கட்சியின்  வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்டோரியா கௌரி என்பவர் பொன்னாருக்கு கடும் நெருக்கடி கொடுத்தாலும், இறுதியில் பொன்னாருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்றே சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில், பாஜக ஓரளவு கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. இதில் பொன்னாரே கன்னியாகுமரி பாஜகவின் அடையாளமாக இருக்கிறார்.

அத்துடன், தமிழகத்தில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ஒரு இடம் கூட இல்லாமல் இருக்கும் பாஜக, கன்னியாகுமரியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று, அக்கட்சியின் தமிழக நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவே பிறப்பித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

அதற்காக தொகுதியில் உள்ள இந்து நாடார், இந்து மீனவர்  பிள்ளைமார், நாயர் போன்ற சமூகங்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து, கொஞ்சம்கூட சேதாரம் இல்லாமல் அப்படியே பாஜகவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு விட்டன.

மறுபக்கம் வலுவான நிலையில் இருக்கும் காங்கிரஸ் திமுகவின் ஆதரவுடன் களமிறங்குகிறது. வசந்தகுமார் மறைவு அனுதாப வாக்குகளையும் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையும் அக்கட்சிக்கு கூடுதலாக உள்ளது.

கன்னியாகுமரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய எந்த கட்சி வெற்றி பெற்றாலும், அது தேசிய அளவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆயினும், இருந்த இடத்தை இழந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒரு இடத்தை பறிக்க வேண்டும் என்று பாஜகவும் போராடுகின்றன.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், இவ்விரு கட்சிகளின் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமடைய தொடங்கும்.