காட்டுமன்னார்கோயில் வெடிவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்  உள்பட 9 பெண்கள் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பெண்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காட்டுமன்னார்கோயிலை அடுத்த குருங்குடி என்ற ஊரில் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் சில இயங்கி வருகின்றன. இவற்றில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அதில் காந்திமதி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த  பட்டாசு ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் பணியில் ஈடுபட்டிருந்த காந்திமதி உள்பட 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனை செல்லும் வழியிலும், மற்ற இருவர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள  திமுக தலைவர் ஸ்டாலின், உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளாக இருந்தாலும், பாதுகாப்பு, காப்பீடு போன்றவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அதேபோல், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்ச ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனவால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள், கடந்த இரண்டு மூன்று நாட்களாகத்தான், தங்களது பணிகளுக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். இந்த நிலையில், இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பது வேதனைக்குரியது.