திமுக வரலாற்றில் முதன் முறையாக பெரும்பான்மை சமூகங்களுக்கு மாநில பொறுப்பு!

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலும் தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.,

இதன் மூலம், திமுகவின் எழுபது ஆண்டு கால வரலாற்றில், அக்கட்சியின் மாநிலப் பொறுப்புகளில் முதன்முறையாக, தமிழகத்தின் பெரும்பான்மை சமூகங்களான வன்னியர் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மாநிலப் பொறுப்புக்கள் கிடைக்க உள்ளன.

பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து 1949 ம் ஆண்டு, திமுகவை தொடங்கினார் அண்ணா. அப்போது, அண்ணா, ஈ.வி.கே.சம்பத், நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மதியழகன் ஆகியோர் அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களாக வருணிக்கப்பட்டனர். இதில் ஈ.வி.கே.சம்பத் மட்டுமே பெரியாரின் அண்ணன் மகன். மற்ற அனைவருமே முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

அண்ணா தொடங்கிய திமுகவில், தலைவர் என்ற ஒரு பொறுப்பு.. காலியாகவே விடப்பட்டது. அது பெரியாருக்கு உரியது என்றும் கூறப்பட்டது.

அதன் பிறகு, கட்சியின் பொது செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய மாநில பொறுப்புக்கள் அனைத்திலும் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.

1969 ம் ஆண்டு  அண்ணா மறைவுக்கு பின்னர், முதல்வரான கலைஞர், கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். நெடுஞ்செழியன் பொதுச்செயலாளர் ஆனார். எம்.ஜி.ஆர் பொருளாளர் ஆனார். ஆனால், நெடுஞ்செழியனும், எம்ஜிஆரும் அக்கட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நெடுஞ்செழியனுக்கு பிறகு, திமுகவின் பொதுச்செயலார் ஆன, பேராசிரியர் அன்பழகன், கடந்த ஆண்டு அவர் காலாமாகும் வரை அந்த பொறுப்பிலேயே தொடர்ந்தார்.

இதனிடையே,  திமுகவில் இருந்து பிரிந்து 1972 ம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய போது, சாதிக் பாட்சா திமுக பொருளாளராக பொறுப்பேற்றார். சாதிக் பாட்சா மறைவை தொடர்ந்து 1994 முதல்  2008  வரை, ஆற்காடு வீராசாமி திமுக பொருளாளராக பதவி வகித்தார்.

அதன் பிறகு, திமுக பொருளாளராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், கலைஞர் இறந்த பிறகு, திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். அந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த துரைமுருகன் பொருளாளராக பொறுப்பேற்றார்.

பேராசிரியர் அன்பழகன் இறந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை  துரைமுருகனுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. எனினும், கொரோனா பிரச்சினை காரணமாக அது தற்காலிகமாக இழுபறியில் இருந்தது.

தற்போது, திமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு, வன்னியர் சமூகத்தை சேர்ந்த துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

திமுக தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட எழுபதாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தமிழகத்தின் பெரும்பான்மை சமூகங்களை சேர்ந்த இருவர் பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய பொறுப்புக்களுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும்.

கலைஞர், ஜெயலலிதா என்ற இரு பெரும் திராவிட ஆளுமைகள் இல்லாத நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை திமுகவும், அதிமுகவும் சந்திக்கின்றன.

ஏற்கனவே இரண்டு முறை தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ள திமுக, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வரவில்லை என்றால், திமுகவின் எதிர்காலமும், ஸ்டாலினின் தலைமையும் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரும்.

அதேபோல், இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்த அதிமுக, வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கவில்லை என்றால், அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

எனவே, எதிர் வரும் சட்டமன்ற தேர்தல் என்பது, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே வாழவா? சாவா? பிரச்சினையாகவே இருக்கும்.

இந்நிலையில்தான், அந்திமக் காலத்தில் அசுவத்தாமனுக்கு பட்டம் சூட்டியது போல, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே, கட்சி பொறுப்புக்களில், அதிரடியாக பல்வேறு மாற்றங்களை புகுத்தி வருகின்றன.

எனினும், இவ்விரு கட்சிகளின் நடவடிக்கைகளும் எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.