சட்டமன்ற தேர்தல் வியூகம்: வன்னியர் அரசியலை கையில் எடுக்கும் திமுக – அதிமுக!

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் சமயங்களில் எல்லாம், சாதி அரசியல், விவாதப் பொருளாவது வாடிக்கையான ஒன்றுதான். இது வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக அளவில் எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, காவிரியின் வடபகுதியில் உள்ள மாவட்டங்களில்  பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர் சமூகத்தின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும் என்பதில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே, தனிக்கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளன.

திமுகவை, அண்ணா தொடங்கிய காலத்தில் இருந்து, அதன் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாவட்டங்களே ஆகும்.

அதேபோல், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி, தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று முதல்வர் ஆனபோதும், திமுகவுக்கென்று கணிசமான வெற்றிகளை தந்து உயிர்ப்புடன் வைத்திருந்ததும் வட மாவட்டங்களே.

எனினும், திமுகவில் வன்னியர்களுக்கென்று உரிய பிரதிநிதித்துவம் இன்று வரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஓங்கி ஒலித்துக் கொண்டே இருந்தது. இதுவே, வட மாவட்டங்களில் பாமக வலுவான வாக்கு வங்கியை பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், வன்னியர் அரசியலே முக்கிய விவாதப்பொருளாகி, அது திமுக படுதோல்வி அடைய காரணமாக அமைந்து விட்டது.

குறிப்பாக, வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று திமுக மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்ற பிரச்சாரம், அதிமுகவுக்கு மிகவும் சாதகமாக மாறிப்போனது.

இந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைக்கும் திமுக, பொன்முடியின் ஆதரவாளரான புகழேந்தி என்ற வன்னியரை, விழுப்புரத்தின் ஒரு மாவட்டத்திற்கு  செயலாளராக்க, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அத்துடன் திமுகவில் அண்மையில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி லக்ஷ்மனனுக்கும் முக்கிய பொறுப்பு வழங்கவும் அவர் தீர்மானித்துள்ளார்.

அதேபோல், நீண்ட குழப்பங்களுக்கு பிறகு, துரைமுருகனையே திமுகவின் பொதுசெயலாளராக நியமிக்கவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

அத்துடன், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வழக்கம்போல் திமுகவில் முதலியார், நாயுடு சமூகத்தவர்களுக்கே எம்.எல்.ஏ சீட்டுக்கள் வழங்கப்படும். ஆனால், இம்முறை அதிக அளவில் வன்னியர்களுக்கு வழங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதே அக்கட்சியின் வடமாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

அதே சமயம், திமுகவின் இத்தகைய தேர்தல் வியூகத்தை முறியடிக்கும் வகையில், அதிமுகவில் வலுவான எதிர் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஏற்கனவே திமுக வலுவாக இருக்கும் வடமாவட்டங்களில், பாமகவின் மூலம் அதைத் தகர்த்து விடலாம் என்பதே அதிமுகவின் கணக்காக உள்ளது.

மேலும், சட்டமன்றத்தில் வன்னியர் சமூகத்தின் மூத்த தலைவர் ராமசாமி படையாட்சியின் படத்திறப்பு, கடலூரில் அவருக்கு கட்டப்பட்ட மணிமண்டபம், வன்னியர் பொது சொத்து நலவாரியம் போன்றவற்றை வைத்தே, வன்னியர் வாக்குகள் திமுகவிற்கு செல்லாமல் தடுக்கலாம் என்று அதிமுக நினைக்கிறது.

அதேபோல், வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு ஆணை, எந்த நேரத்திலும் அதிமுக அரசால் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், வடமாவட்டங்களில் திமுகவின் வெற்றியை தடுத்து விட்டால், மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் திமுகவை சமாளிப்பது அவ்வளவு கடினம் அல்ல என்பதே அதிமுக போடும் கணக்கு.

ஏற்கனவே புதிய மாவட்டங்கள் பிரிப்பு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக்கல்லூரிகள், தலைவாசலில், தெற்காசியாவின் மிகப்பெரிய கால்நடை மற்றும் விலங்கின ஆராய்ச்சி பூங்காவுடன் கூடிய கல்லூரி, தஞ்சை டெல்டா வேளாண் மண்டலம் என, பல்வேறு சாதனைகளை பிரச்சாரத்தில் பட்டியலிடலாம் என்று அதிமுக நினைக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலைப்போல, அதிமுக எதிர்ப்பு அலை பெரிதாக வீசவில்லை என்பதால், வரும் சட்டமன்ற தேர்தலில், திமுகவை எதிர்கொள்வது அவ்வளவு சிரமம் இல்லை என்றே அரசியல் விமர்சகர்களும் கூறுகின்றனர்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234  தொகுதிகளில், சுமார்   120 தொகுதிகளில் வன்னியர்களின் வாக்குகளே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த தொகுதிகள் அனைத்தும் வடக்கு, மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக உள்ளன.

ஏற்கனவே, டெல்டா பகுதியில் மயிலாடுதுறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது எடப்படிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. கும்பகோணமும் தனியாக பிரிக்கப்பட்டால், அதிமுகவுக்கு அது  இன்னும் கூடுதல் வலுசேர்க்கும். இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் வலுவாக இருக்கும் திமுகவை எளிதாக சமாளிக்கலாம் என்றும் அதிமுகவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலையில், காவிரிக்கு வட பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கான தேர்தல் வியூகங்களை வகுப்பதிலேயே திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

காவிரிக்கு தென்பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கான, தேர்தல் வியூகங்கள் அதற்கு அடுத்த நிலையிலேயே உள்ளன. அதுவும் விரைவில் வெளிப்படும் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.