நியமன முதல்வர் நிலையில் இருந்து மக்கள் தலைவர்: எடப்பாடி வகுக்கும் புதிய வியூகம்!

தமிழகத்தை பொறுத்தவரை, இடைவெளியை நிரப்பும் நியமன முதல்வர்கள் யாரும், மக்கள் தலைவராக ஜொலித்ததில்லை. சுப்பராயன், ராஜாஜி, பக்தவச்சலம் உள்ளிட்ட பலரும் இதற்கு விதிவிலக்கல்ல.

பிரிட்டிஷ் இந்தியாவில், 1926 ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அரசியல் பிரிவான சுயாட்சி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

எனினும், ஆங்கிலேயரின் இரட்டை ஆட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. அதனால், அப்போதைய ஆளுநர், சுயேச்சையாக வெற்றிபெற்ற ப.சுப்பராயனை, நியமன உறுப்பினர்கள் மற்றும் இதர சுயேச்சைகளின் ஆதரவுடன் முதல்வராக நியமித்தார்.

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் சுப்பராயன் ஆட்சி தொடர்ந்தாலும், அதற்கு பின்னர், அவர் மக்கள் தலைவராக ஜொலிக்கவில்லை. முதல்வராகவும் ஆக முடியவில்லை.

அதேபோல், 1937 மற்றும் 1952 ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும், முதல் தடவை சத்திய மூர்த்தியையும், இரண்டாவது தடவை காமராஜரையும் ஓரம் கட்டிவிட்டு, கட்சி மேலிடத்தின் செல்வாக்கை பயன்படுத்தி முதல்வரானார் ராஜாஜி.

ராஜாஜியைப் பொறுத்தவரை, தமிழக முதல்வர் மட்டுமன்றி, ஆளுநர், கவர்னர் ஜெனரல், மத்திய அமைச்சர் என தேசிய அளவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார். ஆனாலும், அவரால் இறுதிவரை ஒரு மக்கள் தலைவராக உருவெடுக்க முடியவில்லை.

அந்த வரிசையில், காமராஜர் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், 1963   ம் ஆண்டு, தமிழக முதல்வரானவர் பக்தவச்சலம். இவர் நான்கு வருட காலம் தமிழக முதல்வராக இருந்த போதும், அவரால் அதன் பிறகு அரசியலில் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவரது நடவடிக்கைகளே, திமுக எளிதில் ஆட்சிக்கு வர காரணமாக அமைந்து விட்டது என்றும் சொல்லப்படுவதுண்டு.

அதுபோலவே, அதிமுகவின் தற்காலிக முதல்வராக, இரண்டு மூன்று தடவை பொறுப்பேற்று, சிற்சில மாதங்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் ஒ.பன்னீர்செல்வம். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி ஓரளவு மக்கள் செல்வாக்கை பெற்ற இவர், மீண்டும் அதிமுகவில் இணைந்ததன் மூலம் தமக்கு கிடைத்த லேசான மக்கள் செல்வாக்கையும் இழந்து விட்டார்.

அதேசமயம், சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால், அவரது ஆசியுடன் முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவின் ஆதரவு, கெடுபிடி என அனைத்துக்கும் ஏற்ற வகையில் வளைந்து கொடுத்து, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார் எடப்பாடி.

சசிகலாவின் தயவால் முதல்வர் ஆனாலும், தனக்கு கிடைத்த பதவியைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட அதிமுகவை அவர் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார் என்றே சொல்லப்படுகிறது. கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ, எம்.பி.க்கள், நிர்வாகிகள் போன்றவர்களின் ஆதரவையும் பெற்றுவிட்டார் எடப்பாடி.

அதனால், கட்சிக்கு உள்ளிருந்தோ அல்லது கட்சியில் இருந்து வெளியேறி முன்னைப்போல் தர்மயுத்தம் நடத்தியோ, தமக்கு நெருக்கடி கொடுக்க முடியாத அளவுக்கும் பன்னீரை பலவீனப்படுத்தி வைத்துள்ளார் எடப்பாடி.

இந்த நிலையில், சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தால், தமது தலைமை அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரும் என்பது எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும். இந்த சூழலில்தான், சசிகலா மீது பாய்ந்திருக்கும் பினாமி தடுப்பு சட்டம், அவரது விடுதலையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இவை அனைத்தும் எடப்பாடியின் வலிமையை கட்சி மற்றும் ஆட்சியில் பல மடங்கு கூட்டியுள்ளது. இந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, தம்மை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் மிகவும் தீவிரமாக இருக்கிறார்.

கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்வது, எதிர்கட்சியான திமுகவை பலவீனப்படுத்துவது போன்ற போன்ற நடவடிக்கைகள் மறுபக்கம் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதற்கு முன்னதாக, நியமன முதல்வர்கள் யாரும் மக்கள் தலைவர்களாக ஜொலித்ததில்லை என்ற வரலாற்றை உடைக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சுப்பராயன், ராஜாஜி ஆகிய இருவருமே ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து நியமன முதல்வர்களாக பதவி வகித்தவர்கள். தற்போது வரை எடப்பாடியும் அதே பட்டியலில்தான் இருக்கிறார்.

எனவே, அந்த வரலாற்றை தகர்த்து, தாம் ஒரு மக்கள் தலைவராக உருவெடுக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக உள்ளது. அந்த நோக்கம் நிறைவேற, எல்லா வகையிலும் கைகொடுக்க தயாராக இருப்பதாக, அவரது சமூகமும் உறுதி அளித்துள்ளது.