அண்ணாமலை பின்னும் அரசியல் வலை: அறுக்க துடிக்கும் திராவிட கட்சிகள்!

தமிழகம் இதுவரை பதினாறு சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் என்பது, தமிழக அரசியல் கட்சிகளுக்கு, இதுவரை சந்திக்காத ஒரு விசித்திரமான தேர்தலாகவே இருக்கும்.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் அல்லாத ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருக்கிறது பாஜக. கலைஞர், ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத இந்த நேரத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் பாஜக நினைக்கிறது.

அதற்காக கொம்பு சீவப்பட்ட ரஜினி, உடல்நிலை மற்றும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு, பாஜக விரித்த வலையில் இருந்து நழுவி விட்டார்.

ஆனாலும், தனிக்கட்சி குறித்த அவரது பழைய அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்வித்தாலும், கட்சி தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு என்ற அவரது புதிய அறிவிப்பு, அவரது ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை.

ஆனால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, அண்ணாமலையை மனதில் வைத்துத்தான், ரஜினி அப்படி ஒரு கருத்தை தெரிவித்தார் என்று ஊடகங்களில் தகவல்கள் வேகமான பரவின. அது தமிழக மக்கள் மத்தியில் அண்ணாமலைக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் தந்தது.

இந்த நிலையில், அண்ணாமலை நேரடியாக பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார். அவரை ஊடகங்களின் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சேர்ப்பது, பாஜகவுக்கு கடினமான பணி அல்ல. ஆனாலும், அது வாக்குகளாக மாறுமா? என்பதே இப்போதைய கேள்வி.

அதற்காக பாஜக மேலும் சில வியூகங்களை வகுத்துள்ளது. வலுவான அதிமுக, திமுக போன்ற கட்சிகளை பலவீனப்படுத்துவது அந்த வியூகம். அதிமுகவை பொறுத்தவரை, அது ஏற்கனவே பாஜகவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மாநிலங்களவை உறுப்பினர் ஆனதே அதற்கு சாட்சி.

அத்துடன், அதிமுக கூட்டணியில் தற்போது, பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இருக்கின்றன. வரும் தேர்தலில், சற்று கூடுதலான சீட்டுகள் பெற வேண்டும் என்பதற்காக, அதிமுக கூட்டணி கட்சிகள், ஊடகங்களில் சில கருத்துக்களை வெளியிட்டாலும், கூட்டணியில் பெரிய மாற்றம் இருக்காது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை, பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்து, மீண்டு தனித்து நிற்கவே போராடுகிறது. எனினும் வலுவான தலைமை இல்லாமை, இல்லாததாலும், முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை, சசிகலாவின் வருகை குறித்த யூகங்கள் போன்ற காரணங்களால், பாஜகவை விட்டு, அதிமுக அகல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

மறுபக்கம், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும், அதே கூட்டணியில் நீடிக்கும் நிலையே தொடர்கிறது. அந்த கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் கட்சியை அகற்ற, பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பதும் தெரியாது.

அதனால், திமுகவை மு.க. அழகிரி மற்றும் கனிமொழி மூலம் பலவீனப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது பாஜக. திமுகவால் தனித்து விடப்பட்ட அழகிரி, தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்த கடுமையாக போராடி வருகிறார். அதேபோல, உதயநிதியால், அதிகாரம் இழந்து நிற்கும் கனிமொழிக்கும் தன்னுடைய வலிமையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது பாஜக.

அதிமுக கூட்டணி ஆட்சியை பிடித்தால், பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி, திமுகவை பலவீனப்படுத்த அழகிரி, கனிமொழி போன்றவர்களின் உதவி ஆகியவற்றை, கையில் எடுத்துக்கொண்டு அண்ணாமலை மூலம், திராவிட கட்சிகளுக்கு எதிராக ஒரு வலுவான அரசியல் வலையை பின்ன ஆரம்பித்து விட்டது பாஜக.

திராவிட கட்சிகளின் பலவீனமே அண்ணாமலை பின்னப்போகும் அரசியல் வலைக்கு வலுவை கூட்டும் என்பது கணக்கு. ஆனால், அவர் பின்னும் வலை என்பது அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்குமே ஆபத்துதான்.

எனவே, அந்த வலையை நேரடியாக அறுக்க முடியாது என்றாலும், அதில் சிக்காமல் இருப்பதற்கான வேலையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் அதிமுகவிற்கு உள்ளது. அதே போல், பாஜகவின் அரசியல் வலையை அறுக்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உள்ளது.

இந்த நிழல் யுத்தமே, கொரோனாவையும் தாண்டி, தமிழக அரசியலில் தற்போது  மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.

பாஜக வழிகாட்டுதலுடன், அண்ணாமலை தற்போது பின்னப்போகும் அரசியல் வலையில், திமுகவும், அதிமுகவும் சிக்கிக் கொள்ளுமா? அல்லது அந்த வலையை அறுத்து வெளியே வருமா? என்பதை பொறுத்தே திராவிட கட்சிகளின் எதிர்காலம் உள்ளது.