மியூச்சுவல் பண்ட் (Mutual Fund)  பற்றி அறிந்து கொள்வோம்!

பங்கு சந்தை முதலீடு என்பது, நாமே பலவற்றை ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய விஷயம். மியூச்சுவல் பண்டு முதலீடு என்பது, நம்முடைய பணத்தை லாபகரமானவற்றில் முதலீடு செய்து, நமக்கு நல்ல வருமானத்தை வழங்கும் பொறுப்பை, நிபுணர்கள் குழுவிடம் ஒப்படைப்பது போன்றது.

மியூச்சுவல் பண்டு (Mutual Fund) என்பதை தமிழில் பரஸ்பர நிதி என்று சொல்கிறோம். நம்முடைய சேமிப்புக்கு குறைந்தபட்ச ரிஸ்கில், அதிகபட்ச வருவாய் கிடைக்க வழி செய்யும் அமைப்பே பரஸ்பர நிதி ஆகும்.

ஒருவர், தன்னுடைய சேமிப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், அவர் வங்கிகளில் மட்டுமே தமது பணத்தை டெபாசிட் செய்வார்.

வங்கியில் டெபாசிட் செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு அதிகம், ஆனால், அதன்மூலம் கிடைக்கும் வட்டி வருவாய் மிகவும் குறைவாக இருக்கும்.

அதே சமயம், ஒருவர் தமது சேமிப்பை, பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக வருவாயை ஈட்டலாம். அனால் இதில் ரிஸ்க் மிகவும் அதிகம்.

எனவே, ரிஸ்க் குறைவாகவும், வருவாய் கூடுதலாகவும் பெறுவதற்கு கைகொடுக்கும் அமைப்பே மியூச்சுவல் பண்டு எனப்படும் பரஸ்பர நிதி ஆகும்.

பரஸ்பர நிதியில், நாம் செலுத்தும் பணமானது, பங்கு சந்தை, அரசின் முதலீட்டு பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகிறது.

அதன்மூலம் கிடைக்கும் லாபம், முதலீட்டாளர்களுக்கு, அவரவர் விகிதாச்சார அடிப்படையில் பிரித்து வழங்கப்படுகிறது.

நம்முடைய பணத்தை எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்வது? எந்தெந்த பத்திரங்களில் முதலீடு செய்வது என நாம் யோசிப்பதற்கு பதில், பரஸ்பர நிதியில் உள்ள நிபுணர்கள் அதை யோசித்து முடிவு செய்வார்கள்.

பரஸ்பர நிதியின் முதலீட்டு திட்டங்கள், பல்வேறு பிரிவுகளில் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு யூனிட்டுகள் அடிப்படையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

இந்த யூனிட்டுகளின் மதிப்பு, சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் மாறுபடும். அதை முதலீட்டாளர்கள் அவ்வப்போது அறிந்துகொள்ள முடியும்.

அன்றைய மதிப்பில், எத்தனை யூனிட்டுகளை வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல், நீங்கள் வைத்துள்ள யூனிட்டுகளை கொடுத்துவிட்டு, அன்றைய மதிப்பிலான பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

பரஸ்பர நிதியில் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அவற்றுள், முதலீட்டாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சில முக்கிய திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

 பங்கு முதலீட்டு திட்டங்கள் (Equity Fund)

இந்த திட்டத்தின்படி, நம்முடைய பணம் முழுவதும்  பங்குகள் (Share) மீது முதலீடு செய்யப்படும். இதில் ரிஸ்க் அதிகம் உண்டு. அதேபோல் லாபமும் அதிகம் உண்டு. எனவே, முதலீட்டாளர்கள், அதிக அளவில் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.

நீண்ட கால அடிப்படையில், இந்த திட்டத்தின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவது முதலீடு செய்வது நல்லது. பணியில் இருப்போர், தங்களது ஓய்வு காலத்தில் அதிக வருவாய் பெறுவதற்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

கடன் பத்திர முதலீட்டு திட்டங்கள் (Debt Fund)

இது பங்கு முதலீட்டு திட்டத்திற்கு நேர் எதிரான திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், நாம் செலுத்தும் பணம், அரசின் முதலீட்டு பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும். இதனால், ரிஸ்க் மிகவும் குறைவு. லாபமும் குறைவு.

இது, இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை, குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்ற திட்டமாகும்.

 கலப்பின முதலீட்டு திட்டங்கள் (Hybrid Fund)

இந்த திட்டத்தின் கீழ், நாம் செலுத்தும் பணமானது, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் சமமாகவோ அல்லது, குறிப்பிட்ட விகிதங்களிலோ பிரித்து முதலீடு செய்யப்படும். இதன்மூலம், நாம் இரண்டுவிதமான பிரிவுகளில் முதலீடு செய்ய முடியும்.

 குறியீட்டு முதலீட்டு திட்டங்கள் (index Fund)

இந்த திட்டத்தின் கீழ், நம்முடைய பணம், பங்கு சந்தை குறியீட்டு எண்களான Nifty-50, Bank Nifty மற்றும் பல்வேறு துறை சார்ந்த குறிப்பிட்ட இன்டெக்ஸ்களில் முதலீடு செய்வதாகும். குறைந்த பட்ச செலவில், நீண்ட கால அடிப்படையில், இது நல்ல லாபம் அளிக்கும் திட்டமாக கருதப்படுகிறது.

 பங்கு முதலீட்டுடன் இணைந்த சேமிப்பு திட்டங்கள்

(ELSS Fund – Equity Linked Saving Schemes)

இந்த திட்டத்தின்படி, நம்முடைய பணம், பங்கு முதலீட்டுடன் இணைந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. எனினும், இந்த திட்டத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

(குறிப்பு : மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே  இக்கட்டுரை  வெளியிடப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு எந்த வணிக முடிவையும் மேற்கொள்ள வேண்டாம். அத்துடன், இக்கட்டுரையை அனுமதி இன்றி மற்றவர்கள் பயன்படுத்து சட்டப்படி குற்றமாகும்).