மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) என்னும் மாய வலை!

MLM – Multi Level Marketing என்பது படி நிலை சந்தை, நெட் ஒர்க் சந்தை, நேரடி விற்பனை, பிரமீடு விற்பனை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

உண்மையில், மல்டி லெவல் மார்க்கெடிங் என்ற இந்த வியாபார உத்தி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என்றும், அது பின்னாளில் எப்படி சதுரங்க வேட்டை லெவலுக்கு மாறியது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையான நோக்கம்

பெரிய மீன்கள், சிறிய மீன்களை விழுங்கி விடுவது போல, வணிகத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்கள், தங்களுடைய பண பலம் மற்றும் விளம்பர பலம் போன்ற உத்திகளால், சிறிய நிறுவனங்களை விழுங்கி விடும்.

மேலும், மிகப்பெரிய நிறுவனங்களுடன், வணிக ரீதியாக மோதுவது என்பது, சிறு நிறுவனங்களால் நினைத்து பார்க்க கூட முடியாது.

இந்த நிலையில்தான், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, பெரிய நிறுவனங்களுக்கு நிகராக, பொது மக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்ப்பது எப்படி? என்று சிறு நிறுவனங்கள் யோசித்தன.

அப்போது, அவர்களுக்கு கிடைத்த விடைதான். நேரடி விற்பனை. அதுவும் பொது மக்கள் பங்களிப்புடன் சந்தைப்படுத்தி வணிகத்தை பெருக்கும் திட்டம்.

உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனம், தமது தயாரிப்புகளை பொது மக்களிடம் அறிமுகப்படுத்த, உற்பத்தி செலவை விட அதிக அளவில் விளம்பர செலவுகளை செய்யும்.

விளம்பர செலவுகளுக்காகவே ஒவ்வொரு வருடமும், மிகப்பெரிய தொகையினை ஒதுக்கும். அதனால், அந்த பொருள் விரைவில் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி சந்தையில் அதிக அளவில் விற்பனையும் ஆகும். இதற்கு மாற்றுதான், மல்டி லெவல் மார்கெட்டிங் என்ற, நேரடி விற்பனை முறை.

இதன்படி,  விளம்பர செலவு கிடையாது. டீலர், மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் போன்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் தொகையும் இல்லை. ஆனால், இந்த கமிஷன் அனைத்தும், நேரடியாக விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கே வழங்கப்படும்.

இந்த நேரடி விற்பனையாளர்கள், சங்கிலி தொடர்போல இருப்பதால், அவர்களுக்கான கமிஷன் தொகை விகிதாச்சார முறையில், பிரித்தளிக்கப்படும் வகையில் பிரமீடு போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இவ்வாறு, விளம்பரம் இல்லாமல், டீலர் கமிஷன் இல்லாமல், கடைக் காரர்களுக்கான லாபமும் இல்லாமல், குறைந்த அளவில் லாபம் வைத்து பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யப்படும் முறையே மல்டி லெவல் மார்கெட்டிங் முறை ஆகும்.

இதன்மூலம், மிகப்பெரிய நிறுவனங்களின் பொருட்கள் எந்த விலையில் மக்களுக்கு கிடைக்குமோ, அதைவிட குறைந்த விலையில், மக்களுக்கு கிடைக்கும்.

அதனால், இந்த மல்டி லெவல் மார்க்கட் முறையை கையில் எடுத்த சிறு சிறு உற்பத்தி நிறுவனங்களின் பொருட்கள் எல்லாம், மக்களிடம் அதிக அளவில் விற்பனை ஆகின. அதனால், அந்த நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.

அந்த நிறுவனங்களின் பொருட்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்த்தவர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்தது.

இன்றைய நிலை

ஆனால், காலப்போக்கில், மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையின் உண்மையான நோக்கம் சிதைந்து, நேரடி சந்தையில் ஈடுபடும் விற்பனையாளர்களின் லாபமே பெரிதாக பேசப்பட்டது.

அந்த லாபத்திற்காக, சந்தைப்படுத்தும் பொருளின் விலை, அதன் சந்தை விலையைவிட பல மடங்கு உயர்த்தப்பட்டு விற்பனைக்கு வந்தது. அதனால், மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்றாலே, சதுரங்க வேட்டை லெவலுக்கு மாறி விட்டது.

குறைவான விலையில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கப்பட வேண்டிய பொருட்கள், பல மடங்கு விலையில் தள்ளப்படும் நிர்பந்தம் உருவானது. அதற்காக, நேரடி விற்பனையாளர்கள் மத்தியில், குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகும் சிந்தனை விதைக்கப்பட்டது.

சங்கிலித்தொடர்

உதாரணத்திற்கு, ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள பொருட்களின் தொகுப்பு ஐயாயிரம் ரூபாய்க்கு ஒருவர் வாங்கி உறுப்பினராக சேருவார்.

பின்னர், அவர், மேலும் இரண்டு பேரை அந்த திட்டத்தின் கீழ் சேர்த்து விடுவார். இதேபோல, இந்த விற்பனை சங்கிலி விரிந்து கொண்டே போகும்.

இதன் மூலம் கிடைக்கும் லாபம், இதில் உறுப்பினராகி, மென்மேலும் உறுப்பினர்களை சேர்த்து விடும் உறுப்பினர்களுக்கும், சந்தைப்படுத்தும் நிறுவனத்திற்கும் போய் சேரும்.

இந்த சங்கிலி தொடரின் ஏதோ ஒரு இடத்தில், ஒருவர் கழண்டு கொண்டாலும், செயல்படாமல் முடங்கி போனாலும். அதற்கு கீழ் இயங்கும் உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் நின்று போகும்.

இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஏனென்றால், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை ஐயாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதனால், கிடைக்கும் லாபத்தின் பெரும் பகுதி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று சேரும்.

ஒவ்வொரு சங்கிலி தொடரின், ஒவ்வொரு இணைப்பும் ஏதாவது ஒரு இடத்தில் அறுந்து கொண்டே போகும். அதனால், நிறுவனத்திற்கு எந்த வித நஷ்டமும் இல்லை. ஏனென்றால், அடுத்தடுத்து புதிது புதிதாக, மேலும் பல சங்கிலி தொடர்கள் உருவாகிக்கொண்டே இருக்கும்.

தேவையற்ற பொருட்கள்

மேலும், இதுபோன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் எதுவும், மக்களின் அடிப்படை தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை விற்பனை செய்வதில்லை. பெரும்பாலான பொருட்கள், மக்களுக்கு தேவையே இல்லாத, காந்த படுக்கை, நாமக்கட்டி போன்றவைகளாகத்தான் இருக்கும்.

அதையும் மீறி, பற்பசை, பல் துலக்கும் பிரஷ், சோப்பு, ஷாம்பூ போன்றவற்றை மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்களும் இருக்கும். அந்த பொருட்களின் மார்க்கெட் விலை நூறு என்றால், இங்கே அதன் விலை ஐநூறு ரூபாயாக இருக்கும்.

இதுபற்றி கேட்டால், சாதாரணமாக இரண்டு கிராம் அளவுள்ள பற்பசையை நீங்கள் வழக்கமாக பயன்படுத்துபவராக இருந்தால், இந்த பற்பசையை நீங்கள் கால் கிராம் அளவுக்கு பயன்படுத்தினால் போதும், அந்த அளவுக்கு இது தரமானது என்று விளக்கம் சொல்வார்கள்.

இது எந்த அளவுக்கு அப்பட்டமான, பொய்யான தகவல் என்று, சொல்பவர்களுக்கும் தெரியும், கேட்பவர்களுக்கும் தெரியும். இருந்தாலும், குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகும் மூளைச்சலவை நம்மை வேறு எதையும் பேச விடாது.

இவற்றை நம்பி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பயணித்தவர்கள். ஒரு பிஸ்னஸ் மீட்டிங் இருக்கிறது வாருங்கள் என்று நம்மை அழைத்தவர்கள், எனக்காகவாவது நீங்கள் இதில் உறுப்பினர் ஆக வேண்டும் என்று நம்மை நச்சரித்தவர்கள் எல்லாம் இன்று, எத்தனை லட்சம், எத்தனை கோடி சம்பாதித்துள்ளனர் என்று கணக்கெடுத்து பாருங்கள் உண்மை விளங்கும்.

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை படத்தில், மல்டி லெவல் மார்க்கெட்டிங் விஷயத்தை ஒட்டி இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் கொஞ்சம் கூட, பொய்யானவை அல்ல.

ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால், ஒன்று அது போலியான பொருளாக இருக்கும் அல்லது திருட்டு பொருளாக இருக்கும்.

அதேபோல், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் ஐயாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டால், அது பகல் கொள்ளையாகவே இருக்கும். இதற்கு பின்னணியில், நம்மை வீழ்த்தும் பேராசை என்னும் ஆயுதம் மறைந்து இருக்கும்.

(குறிப்பு : இக்கட்டுரை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே வெளியிடப்படுகிறது. இதை அடிப்படையாக கொண்டு எந்த வணிக முடிவையும் மேற்கொள்ள வேண்டாம். அத்துடன், இக்கட்டுரையை அனுமதி இன்றி மற்றவர்கள் பயன்படுத்து சட்டப்படி குற்றமாகும்).