தமிழ்மகனின் “படைவீடு” : ஒரு நூற்றாண்டின் மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு!

தமிழ்மகன் எழுதிய “படைவீடு” நாவலை கடந்த இரண்டு நாட்களில் படித்து முடித்தேன். நல்ல விறுவிறுப்பாக செல்கிறது. வரலாற்று நாவல் என்றாலே, சுவையான நிகழ்வுகளுக்காக கற்பனை புனைவுகளும், வர்ணனைகளுமே நிறைந்திருக்கும் என்ற வழக்கம் இதில் தவிர்க்கப்பட்டுள்ளது.

வரலாற்றின் உண்மை முகங்கள், கல்வெட்டு ஆதாரங்களுடன் நாவல் முழுக்க விரவிக்கிடக்கிறது. அனைத்துக்கும் மேலாக, மறைக்கப்பட்ட நூற்றாண்டு கால நிகழ்வுகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் தமிழ் மகன்.

சமய, பண்பாட்டு இடைச்செருகல்கள் எப்படி எல்லாம் மக்களையும், மக்கள் மீதான அக்கறையுள்ள ஆட்சி பீடங்களையும் தகர்த்திருக்கிறது என்பதற்கான ஆதாரமே “படைவீடு”.

வீரமும், படைபலமுமே போருக்கான தர்மம் என்பது மீறப்பட்டு, வெற்றிக்காக தாசிகளை பயன்படுத்தும் முறை, எப்படி, யாரால் அறிமுகம் ஆனது? என்பதை, நாவல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

மாமன்னர் வீர சம்புவரின் மகன், இளவரசர் ஏகாம்பரநாதரின் உலாவோடு நாவல் தொடங்குகிறது. அவர் பயணிக்கும் திருவண்ணாமலை, ஆறகழூர், பெரும்புலியூர், திருவானைக்கா, மழபாடி, பழுவூர், கங்கைகொண்ட சோழபுரம், தில்லை, தீவுக்கோட்டை, எயிற்பட்டினம், மல்லை, திருப்பாலைவனம், காளத்தி, திருவல்லம், விரிஞ்சிபுரம் வழியே சம்புவராய பேரரசின் எல்லை, கட்டுப்பட்ட சிற்றரசுகள், அவர்களின் வரலாறு, அப்பகுதிகளின் சிறப்புக்களை மிக நேர்த்தியாக படம்பிடித்துள்ள விதம் அருமை. அதுவே, இரட்டைப்புலவர்களின் “ஏகாம்பரநாதர் உலா” வாக பின்னர் மலர்கிறது.

தமிழகத்தின் பலம் வாய்ந்த மூவேந்தர்கள் மற்றும் பல்லவ பேரரசுகள் சிதைந்து போன வரலாறு படமாகவும், பாடமாகவும் சொல்லப்பட்டிருப்பது தமிழ்மகனின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது.

வலிமை வாய்ந்த சுல்தானியர்களே, படைவீடு பேரரசின் மீது படையெடுக்க அஞ்சும் நிலை, மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் வழங்குவதே ஒரு மன்னனின் கடமை என போரைத்தவிர்க்கும் சம்புவராய மன்னர்களின் உன்னத நோக்கத்தை படைவீடு சொல்கிறது.

தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி நீயா? நானா? என மோதிக்கொண்டாலும், அன்னிய மன்னர்கள் தமிழகத்தில் காலடி வைப்பதை ஒரு போதும் அனுமதித்ததே இல்லை. ஆனால், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களின் வாரிசுகள், அந்த வரலாற்றுக்கு முடிவுரை எழுதிவிட்டனர் என்பது வேதனை.

தமிழகத்தின் நதிகள், அந்நிய படையெடுப்புகளை தடுத்து நிறுத்த எப்படிப்பட்ட அரணாக திகழ்ந்திருக்கின்றன என்பதும் ஆதாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

இடங்கை, வலங்கை பூசல்கள், காந்தளூர் சாலை கலமறுத்த ராஜராஜ சோழனின் சீர்திருத்த முயற்சிகள் பலிக்காமல் போனது என்?, அதனால் எழுந்த சமூக ஏற்றத்தாழ்வுகள் என அனைத்தையும், இந்த நாவல் தெளிவாக விளக்குகிறது.

குறிப்பாக, தமிழ் மக்கள் மீது, தமிழ் மன்னரான சம்புவராயர் கொண்டிருந்த அக்கறையை விளக்க “அஞ்சினான் புகலிடங்கள்” அற்புதமான சான்றுகளாக திகழ்கின்றன.

சுமார் நூறாண்டு காலம் தமிழகத்தின் வடபகுதியை, போர் அபாயத்தில் இருந்து காக்க, மக்கள் அமைதியாக வாழ சம்புவராய மன்னர்கள் மேற்கொண்ட முயற்சிகளை, இதுவரை எந்த வரலாற்று ஆசிரியர்களும், நாவல் ஆசிரியர்களும் சொல்லாதது ஒரு வரலாற்றுப்பிழை என்பது, “படைவீடு” நாவலை படித்த பின்னரே அறிய முடிகிறது.

படைவீடு பேரரசுக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்கள், எதிரிகளால் தடுக்கப்பட்ட போதும், தம் நாட்டை எதிர்கொண்ட விஜயநகர பேரரசின் கடல் போன்ற சேனைகளை, சம்புவராயர் படைகள் இரண்டு முறை, தீரத்துடன் எதிர்கொண்டு ஓட ஓட விரட்டியது அவர்களின் வீரத்திற்கு சான்று. இறுதிப்போரில், எதிரிகளை வெல்லமுடியாத நிலை வரும்போது, தற்கொலைப்படையாக மாறி, எதிரியின் படைகளுக்கு தாங்க முடியாத இழப்புகளை ஏற்படுத்திய விதம் அவர்களின் சுயமரியாதைக்கு சான்று.

சம்புவராயர் படையின் வீரத்தை,  விஜயநகர ராணி கங்காதேவியின் “மதுரா விஜயமே” தெளிவாக சொல்லும்.

போரின் இறுதியில், விஜயநகர பேரரசின் படைகளிடம் சிக்காமல், சரண் அடையாமல், ஒவ்வொரு வீரனும், குதிரைப் பாய்ந்தான் பள்ளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வது கண்ணீரை வரவழைக்கும் ரத்த சரித்திரம்.

தோல்வி என்று வந்தாலும், போர் தர்மத்தை மீறாத தமிழனின் வீரம், வெற்றி என்ற ஒன்றுக்காக வேசிகளை கூட பயன்படுத்தும், மற்ற மன்னர்களின் இழிவான செயல்கள் என அனைத்தையும், பிரதிபலிக்கும் தமிழ்மகனின் “படைவீடு” நாவல், ஒரு நூற்றாண்டு கால தமிழக வரலாற்றின் காலக் கண்ணாடி.

இது போன்ற இன்னும் பல வரலாற்று ஆவணங்களை தமிழ்மகன் படைக்க வேண்டும். அதை ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக படிக்க வேண்டும். “படைவீடு” நாவல் வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்: 72992 41264.