பன்னீர் ஆதரவாளர்களை வளைக்கும் திமுக: தேமுதிகவை கபளீகரம் செய்யும் முனைப்பில் பாஜக!

விழுப்புரம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரும், எம்.பியுமான லக்ஷ்மணன் அக்கட்சியை விட்டு விலகி இன்று திமுகவின் இணைந்தார்.

தமிழகம் முழுவதும், அதிமுகவில் முக்கியத்துவத்தை இழந்து, அதிருப்தியில் இருக்கும் பன்னீர் ஆதரவாளர்கள் அனைவரையும், திமுகவிற்கு கொண்டு வர, அக்கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக, விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராகவும், எம்.பி யாகவும் இருந்த டாக்டர் லக்ஷ்மணன், இன்று திமுகவின் இணைந்துள்ளார்.

அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட லக்ஷ்மணன், அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு பெரும் தலைவலியாக இருந்தார். மேலும், சண்முகத்திற்கு மாவட்டத்தில் இருந்த செல்வாக்கையும் குறைத்து விட்டார்.

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் லக்ஷ்மணன், தர்மயுத்தம் நடத்திய பன்னீருடன் அணிவகுத்தது, அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வசதியாக போய்விட்டது. அவர் லக்ஷ்மணனின் அரசியல் பலத்தை முற்றிலுமாக ஒழித்து, தம்முடைய செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டார்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, புதிய மாவட்டத்திற்கு லக்ஷ்மணனை பொறுப்பாளராக நியமிக்கவும், சி.வி.சண்முகம் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தோன்றியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

அதனால், அதிருப்தியில் இருந்த லக்ஷ்மணனை, திமுகவினர் கிட்டத்தட்ட வளைத்து விட்டதாகவே செய்திகள் கூறுகின்றன. வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் விழுப்புரம் மாவட்டத்தில், சி.வி.சண்முகத்தை எதிர்த்து அரசியல் செய்ய, லக்ஷ்மணனே சரியான தேர்வாக இருக்கும் என்று திமுக கருதுகிறது.

ஆயினும், இந்த நகர்வு பொன்முடிக்கு தெரிந்தால், அதற்கு அவர் முட்டுக்கட்டையாக இருப்பார் என்று நினைத்த, திமுக தலைமை, அவருக்கு தெரியாமலே இந்த வேலையை செய்தது. இணைவு நிகழ்ச்சிக்கு மட்டுமே பொன்முடி அழைக்கப்பட்டார்.

முன்னதாக, முதல்வர் எடப்பாடி தரப்பு, லக்ஷ்மணனை தக்கவைத்துக் கொள்ள, எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. ஏனென்றால், அமைச்சர் சி.வி.சண்முகத்தை மீறி, விழுப்புரம் மாவட்டத்தில் எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே அதிமுக தலைமை உள்ளது.

இதேபோல், தமிழகம் முழுவதும் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் பன்னீர் ஆதரவாளர்களை, ஸ்கெட்ச் போட்டு தூக்குவதற்கான வேலைகள், திமுகவில் ஜரூராக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மறுபக்கம், ஓரளவு தொண்டர் பலத்துடன் இருக்கும், தேமுதிகவை கபளீகரம் செய்யும் முயற்சியில் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தாலும், தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அக்கட்சியால் கால் பதிக்க முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில், தன்னுடைய சட்டமன்ற பிரதிநிதித்துவ கணக்கை தொடங்க முடியாமல் கடுமையாக போராடுகிறது.

கலைஞர், ஜெயலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், தமிழகத்தில் கால் பதிக்க பாஜக எடுத்த முயற்சிகள் அனைத்தும் இதுவரை கைகொடுக்கவில்லை.

பாஜக தற்போது வரை, அதிமுக கூட்டணியில் இருந்தாலும், அது தனக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை பாதிக்கும் என்று அதிமுக நினைக்கிறது. அதனால், பாஜகவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதையும் அதிமுக தவிர்த்து வருகிறது.

அதனால், தமிழகத்தில் கணிசமான அளவாவது வாக்குகளை பெற்று தமது இருப்பை காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்காக, மற்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை நோக்கி வலை வீச ஆரம்பித்து விட்டது. அதில் திமுகவின் வி.பி.துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் போன்றவர்கள் ஏற்கனவே சிக்கிவிட்டனர். எனினும், இவர்களது வருகை பாஜகவின் வாக்கு வங்கியை எந்த வகையிலும் உயர்த்தப் போவதில்லை.

அதனால், ஓரளவு தொண்டர்களை கையில் வைத்துள்ள, தேமுதிகவை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக, அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரிடமும் பாஜக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தேமுதிக தொடங்கிய கால கட்டத்தில், பாஜகவில் இருந்த பல முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்கள் பலரும் தேமுதிகவில் ஐக்கியம் ஆயினர், அவர்களில் பெரும்பாலானோர் தற்போது, பாஜகவின் தொடர்பு எல்லைக்குள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிக  படு தோல்வியை சந்தித்தது. மேலும், உடல்நிலை காரணமாக, விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். கட்சியில் முழுக்க முழுக்க அவரது குடும்பத்தினரின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. இது, அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஒட்டுமொத்த தேமுதிகவையும் கபளீகரம் செய்யும் வேலையை தொடங்கி விட்டது என்றே சொல்லப்படுகிறது.