அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக எடப்பாடி: பன்னீரின் அடுத்த நடவடிக்கை என்ன?

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்த பின்னரே தேர்தலை சந்திக்க வேண்டும் என்று, அதிமுக உத்தி வகுப்பாளரான சுனில் யோசனை தெரிவித்துள்ளார். அதை அடுத்தே, அதிமுகவில், முதல்வர் வேட்பாளர் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது.

அடுத்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக, திமுகவுக்கு பிரசாந்த் கிஷோரும், அதிமுகவுக்கு சுனிலும், உத்தி வகுப்பாளராக செயல்பட்டு வருகின்றனர்.

திமுகவில் ஸ்டாலினே முதல்வர் வேட்பாளர் என்பதால், அவரை முன்னிறுத்தியே அக்கட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. அதேபோல், அதிமுகவிலும் முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் மட்டுமே, தேர்தலை எதிர்கொள்வதற்கு எதுவாக இருக்கும் என்று சுனில் தெரிவித்து இருக்கிறார்.

ஜெயலலிதா இல்லாத நிலையில், முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிப்பதே, எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தை சமாளிக்க சரியான ஒன்றாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டே, சுனில் அவ்வாறு கூறி இருக்கிறார்.

ஆனால், இது பன்னீர்செல்வம் தரப்பை கடுமையாக சூடாக்கி உள்ளது. முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுனும், உத்தி வகுப்பாளர் சுனிலும் தன்னிச்சையாக, தங்கள் கருத்தை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூலம் வெளிப்படுத்தி இருப்பதாக பன்னீர் நினைத்தார். அதன் விளைவே, தென் மாவட்டத்தில் பன்னீருக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டும் நிலை வரை வளர்ந்தது.

இது, கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று உணர்ந்த, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், சுதந்திர தினமான நேற்று, எடப்பாடியையும், பன்னீரையும் மாறி மாறி சந்தித்து, தற்காலிக அமைதிக்கு வழி வகுத்துள்ளனர்.

இருந்தாலும், இந்த தற்காலிக அமைதி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. எடப்பாடி அணியும், பன்னீர் அணியும் இணைந்த போதே, ஆட்சியின் கடைசி இரண்டு வருதத்திற்கு, பன்னீர் முதல்வராக இருப்பார் என்று பேசப்பட்டதாக ஒரு தகவல்.

ஆனால், அதன்படி பன்னீர் முதல்வர் ஆக்கப்படவில்லை. அத்துடன், இன்று வரை எடப்பாடியே முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார். அத்துடன், மாவட்டங்கள் பிரிப்பு, கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம்  போன்ற நடவடிக்கைகளால், கட்சி, ஆட்சி என இரண்டிலுமே எடப்பாடியின் செல்வாக்கு உச்சத்தில் இருக்கிறது.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக முதல்வர் பொறுப்பில் நீடித்து வரும் எடப்பாடி, கட்சியை கடந்து பொது மக்கள் மத்தியிலும், தமக்கென ஒரு செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட வலுவான நிலையில் இருக்கும், எடப்பாடியை முன்னிலைப் படுத்தி தேர்தலை சந்திப்பதே நல்லது என்ற பேச்சு அதிமுகவுக்குள்ளேயே இருக்கிறது. ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தல்களையும், எடப்பாடி தலைமையிலேயே அதிமுக சந்தித்துள்ளது.

இந்நிலையில், தலைமைப் பொறுப்புக்கு புதிதாக இன்னொருவரை முன்னிறுத்துவது அவ்வளவு நல்லதல்ல என்றும் சிலர் கூறுகின்றனர். இவை அனைத்தும் அதிமுகவில் எடப்பாடிக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன.

எடப்பாடியின் இத்தகைய செல்வாக்கை மீறி, பன்னீரால், தமது  செல்வாக்கை வளர்த்துக் கொள்ள முடியாமல் போனது உண்மையே. மேலும், கடந்த காலத்தில் முதல்வர் பதவியை கைப்பற்ற பன்னீர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் அவருக்கு பலன் அளிக்காமல் போய்விட்டன.

இதே நிலை நீடித்தால், கட்சியிலும், ஆட்சியிலும் தமது முக்கியத்துவம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டு விட்டது. அதை நிலைநாட்ட மீண்டும் தர்மயுத்தம் நடத்த முடியாது. அப்படி நடத்தினாலும், தற்போதுள்ள சூழலில் அது எடுபடாது. ஆகவே, அவர் தன்னுடைய செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட கடுமையாக போராடி வருகிறார்.

அதன் வெளிப்பாடே, நேற்று போஸ்டர் யுத்தமாக வெடித்தது. எடப்பாடியின் செல்வாக்கு கட்சியிலும் ஆட்சியிலும் பலமாக இருக்கும் நிலையில், பன்னீரின் போஸ்டர் யுத்தம் எந்த அளவுக்கு பயன் தரும் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் விவகார சர்ச்சை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது போல தெரிந்தாலும், அது நிஜமான தோற்றம் அல்ல என்றே அதிமுகவினர் சிலர் கூறுகின்றனர்.

அதனால், எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் என்று விரைவில்  அறிவிக்கப்படும் சூழல் உருவாகும். அப்போது, பன்னீர்செல்வம் எப்படிப்பட்ட முடிவை எடுப்பார்? அது, கட்சியில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.

மறுபக்கம், சசிகலா இல்லாத கட்சியாக அதிமுக தோற்றம் அளித்தாலும், இதுவரை, முதல்வர் எடப்பாடி நேரடியாக சசிகலாவை எந்த சந்தர்ப்பத்திலும் விமர்சிக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.