மதுரை – இரண்டாவது தலைநகர கோரிக்கை: புதிய மாநில உருவாக்கத்தின் தொடக்கமா?

தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம், ஆளும் அதிமுகவின் தரப்பில் இருந்தே நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், அமைச்சர் உதயகுமார் தலைமையில் இந்த தீர்மானம் நிறைவேறி உள்ளது.

திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை விரிந்திருக்கும் தமிழகத்திற்கு, மாநிலத்தின் வடக்கு எல்லை பகுதியை ஒட்டிய சென்னை தலை நகரமாக அமைந்துள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, மாநில தலைநகரை அடைவது தென் மாவட்ட மக்களுக்கு ஒரு நீண்ட தூர பிரயாணமாகவே உள்ளது.

மேலும், அளவுக்கு அதிகமான மக்கள் நெருக்கத்தினால், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், போக்குவரத்து நெரிசலை சரி செய்வதும் கூட, சென்னையின் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை ஏற்கனவே மதுரையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அத்துடன் மதுரை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டால், அது தென் மாவட்ட மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். இது தென்மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவும் உள்ளது.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, தலைநகரை சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றுவதற்கு 1983 ம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது, நிறைவேறாமல் போனது.

இந்நிலையில், மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இன்று, மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, 2022 ம் ஆண்டு, ஐந்து கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை, இரண்டாக பிரிக்க மத்திய அரசு உத்தேசித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், ஐந்து கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட, தமிழ்நாட்டையும், இரு மாநிலங்களாக பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதன்படி, மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள், மதுரையை மையமாகக் கொண்டு புதிய மாநிலம் அமைக்கப்படும். இதர மாவட்டங்கள் சென்னையை தலைநகராகக் கொண்டு செயல்படும் காவிரி டெல்டா மாவட்டங்கள் இவ்விரு மாநிலங்களுக்கும் எல்லையாக இருப்பதால், அங்கு மட்டும் சில மாறுதல்கள் இருக்கலாம்.

எனவே, தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரை அறிவிக்கப்பட்டால், விரைவில், தமிழகமும் இரு மாநிலங்களாக பிரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.