தற்காலிகமாக முடிவுக்கு வந்த அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் விவகாரம்: சர்ச்சையின் பின்னணியில் சசிகலா?

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் எழுந்த சலசலப்பு, எடப்பாடி – பன்னீர் கூட்டறிக்கையால் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இதற்கு பின்னணியில் சசிகலா இருக்கக்கூடும் என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.

அதிமுகவில் தினகரனின் ஆசிர்வாதத்தால், முதன் முதலில் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னீர் அமைச்சராகவும் ஆனார். அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவி விலக நேர்ந்தபோது, தற்காலிகமாக முதல்வர் பதவியும் அவருக்கு கிடைத்தது. அதற்கு பின்புலத்தில் இருந்தவரும் தினகரன்தான்.

அதன் பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போதும், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதும், ஜெயலலிதா மறைந்த போதும், தற்காலிகமாக முதல்வர் பதவியில் அமரும் வாய்ப்பும் பன்னீருகே கிடைத்தது.

எனினும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கட்சியின் பொது செயலாளர் பதவியை ஏற்ற சசிகலா, முதல்வராக முயற்சித்த போது, பாஜக ஆதரவுடன் அதற்கு முட்டுக்கட்டை போட்டார் பன்னீர்செல்வம். அப்போது, சசிகலா சிறை செல்ல நேர்ந்தாலும், அவரது ஆதரவு பெற்ற எடப்பாடியே முதல்வர் ஆனார்.

அதன் பின்னர், எடப்பாடிக்கு பின்னால் இருந்து அவரை இயக்கிய தினகரன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தர்மயுத்தம் நடத்தி தனி அணியாக செயல்பட்ட பன்னீர் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆகி, அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனாலும், தொடர்ந்து மூன்று வருடத்திற்கு மேல், முதல்வர் பதவியில் நீடிப்பதால், கட்சியிலும், ஆட்சியிலும் எடப்பாடியின் செல்வாக்கே ஓங்கி இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் சசிகலா இல்லாத கட்சியாக அதிமுக தோற்றம் அளித்தாலும், சசிகலாவின் ஆதரவு பெற்ற பலர் அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாவும் இருப்பதே உண்மை.

இது தவிர, அதிமுகவை கைப்பற்றுவதில் முதல்வர் எடப்பாடிக்கும், பன்னீர் செல்வத்திற்கும் இடையே, மிகப்பெரிய நிழல் யுத்தமே நடந்து கொண்டு இருந்தது. அது, அடுத்த சட்டமன்ற தேர்தல், நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அமைச்சர்களின் பேச்சு, போஸ்டர் என்று தற்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது.

தற்போது உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார்? என்ற சர்ச்சை பெரிய அளவில் வெடித்தால், அது தேர்தல் சமயத்தில் கடும் சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதால், எடப்பாடி-பன்னீர் ஆகிய இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டு தற்காலிகமாக, அந்த சர்ச்சைக்கு  முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

ஆனால், எடப்பாடி – பன்னீர் ஆகிய இருவரில் யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்? என்பதை வெளிப்படையாக முதன் முதலில் தொடங்கி வைத்தது எடப்பாடி தரப்பினர்தான்.

இருந்தாலும், தானும் வலுவாக களத்தில் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ளும் அவசியம் பன்னீருக்கும் ஏற்பட்டதன் விளைவே, போஸ்டராக வெளிப்பட்டது.

எடப்பாடி-பன்னீர் ஆகிய இருவரில் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர்? என்று சர்ச்சை வெடித்தால், கட்சிக்குள் ஒற்றுமை இல்லாத சூழல் ஏற்படும். அந்த சூழலில், கட்சியின் ஒற்றுமை மற்றும் வலிமையை காப்பாற்றும் வகையில் தலைமை வேண்டும் என்ற நிர்பந்தம் எழும். அதை காரணமாக வைத்து, சசிகலா கட்சிக்குள் கொண்டு வரப்படுவார் என்ற பேச்சும் அடிபட்டது.

முதல்வர் யார்? என்பதை கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என்று, அண்மையில் அமைச்சர் செல்லூர் ராஜு சொன்ன கருத்து, சசிகலாவின் குரலாகவே கருதப்பட்டது.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக, எடப்பாடியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். இதை இப்படியே விட்டால், நாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவோம் என்று நினைத்த பன்னீர், போஸ்டர் மூலமாக தனது நிலையை தெளிவு படுத்தி இருக்கிறார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் உற்று நோக்கினால், சசிகலாவின் விடுதலை விவகாரம், அதிமுகவில் மூன்று அணிகள் செயல்படுவதை  உறுதிப்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இந்நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி-பன்னீர் ஆகிய இருவரும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்ட போதும், முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் இது தற்காலிக முற்றுப்புள்ளியே. தேர்தல் நெருங்க, நெருங்க அது வேறு விதத்தில் எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.