தமிழகத்தின் அரசியல் முன்னோடிகள்: வள்ளலார் – அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயக்கர்!

தமிழக அரசியல் வரலாற்றை, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமாகவே பலர் கூறுகின்றனர். ஆனால், அதற்கு முந்தைய நூற்றாண்டிலேயே, வள்ளலார், அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயக்கர் போன்றவர்கள், அதற்கான அடித்தளத்தை அமைத்து விட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், வள்ளலார் பாடிய திருவருட்பாவின் ஆறாம் திருமுறை, அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயக்கர் எழுதிய “இந்துமத ஆசார ஆபாச தரிசினி” ஆகிய இரு நூல்களையும், இருபதாம்  நூற்றாண்டில் பெரியார் மறு பதிப்பு செய்து வெளியிட்டதே இதற்கு சான்றாகும்.

இந்திய அரசியலில் காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கம், தமிழக அரசியலில் நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றியவர் வள்ளலார். அவர்களுக்கு முன்னரே, பசிப்பிணி அற்ற சமதர்ம சமுதாயம், மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம் என அனைத்தையும் முன்னெடுத்தவர் இவரே.

1823 ம் ஆண்டு பிறந்து  1874 ம் ஆண்டு வரை வாழ்ந்த வள்ளலார், ஆரம்பகாலத்தில் பாடிய பாடல்கள் அனைத்தும், இறை நம்பிக்கையை பற்றியே இருந்தன. ஆனால், பிற்காலத்தில் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும், பொதுவுடைமை கொள்கைகளாகவும், சமூக ஏற்றத்தாழ்வையும், மூட நம்பிக்கைகளை சாடுவதாகவுமே இருந்தன.

சென்னையில் அதிக காலம் வசித்த வள்ளலார், பிற்காலத்தில் தமது சொந்த ஊரான, சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வடலூருக்கு சென்று, 1867 ம் ஆண்டில் சத்திய ஞான சபை ஒன்றை நிறுவினார். அதில்  இன்று வரை, அவரது கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஒரு ஆன்மீகவாதியாக அறியப்பட்ட வள்ளலார், எவ்வளவு முற்போக்கு சிந்தனை கொண்டவர், சமூக ஏற்றத்தாழ்வுகள் அகல போராடியவர், மதத்தின் பெயரால் கடைபிடிக்கப்படும் மூட நம்பிக்கைகளை தகர்த்தவர், சமதர்ம சமுதாயத்தை படைக்க பாடுபட்டவர் என்பதை அறிய, திருவருட்பாவும், சத்திய ஞான சபையுமே போதுமானது.

அதன் காரணமாகவே, திருவருட்பாவின் ஆறாம் திருமுறையில் இடம்பெற்ற 100 பாடல்களையும் மறுபதிப்பு செய்து, குடியரசு பதிப்பகத்தின் சார்பில்  1935 ம் ஆண்டு பெரியார் வெளியிட்டார். மேலும், வடலூர் சத்திய ஞான சபைக்கு சென்று, அதன் நடைமுறைகளை கண்டும் வியந்தார்.

வள்ளலாரை போலவே, பெரியார் கண்டு வியந்த மற்றொருவர் அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயக்கர். பெரியாருக்கு முன்னரே, பகுத்தறிவு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, சுயமரியாதை சிந்தனைகளை விதைத்தவர் அவர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிக்க சாதிகளின், சுரண்டல்களுக்கு எதிராக போராடி, அதில் ஓரளவு வெற்றியும் கண்டவர். குறிப்பாக, மதத்தின் பெயரால் நடத்தப்படும் சடங்கு சம்பிரதாயங்களையும், பிராமணர்களுக்கு தானம் அளிப்பதையும் கடுமையாக எதிர்த்தவர் அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயக்கர்.

செங்கல்பட்டை அடுத்த அத்திப்பாக்கம் என்ற ஊரில் 1801 ம் ஆண்டு பிறந்த வெங்கடாச்சலம் நாயக்கர், பின்னர் சென்னையில் குடியேறி தொழில் செய்து முன்னுக்கு வந்தவர். ஆறு மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்த இவர்  1897 ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், அரசுப்பணியில் இருந்து கொண்டு, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுரண்டிய பார்ப்பனர், வேளாளர் மற்றும் தெலுங்கர்களுக்கு எதிராக, பல்வேறு அச்சுறுத்தல்களையும் தைரியமாக எதிர்கொண்டு கடுமையாக போராடியவர்.

பிரிட்டிஷ் மகாராணிக்கு பெட்டிஷன் மேல் பெட்டிஷன் போட்டு, இந்தியாவில் உள்ள  அனைவருக்கும் கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வென்று எடுத்தவர். அதன் பிறகே நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன.

மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர் வீடு என்ற பெயரில் வன்னியர்களுக்கும், வெள்ளாளர் வீடு, நத்தம் என்ற பெயரில் வேளாளர்களுக்கும், அக்ரகாரம் என்ற பெயரில் பிராமணர்களுக்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது மன்னர் வீடு என்பது மன்னவேடு என்றும், வெள்ளாளர் வீடு என்பது வெள்ளவேடாகவும் மாறி விட்டது.

இதில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான மன்னவேடு  நிலப்பகுதிகள், பிராமணர்களாலும், வேளாளர்களாலும், அதற்கு பின்னர் நுழைந்த தெலுங்கர்களாலும் எவ்வாறு நயவஞ்சகமாக பிடுங்கப்பட்டன என்பதை, உரிய ஆதாரங்களுடன் பிரிட்டிஷ் அரசுக்கு தெரியப்படுத்தி, அதில் பலவற்றை உரியவர்களுக்கு மீட்டுக் கொடுத்தவர் வெங்கடாசல நாயக்கர்.

மதம், சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் மக்களால் பின்பற்றப்படும் மூட நம்பிக்கைகளை நேரடியாக எதிர்த்த வெங்கடாச்சல நாயக்கர், அது பிராமணர்களின் பிழைப்புக்கு வழி செய்யும் ஏற்பாடு என்று கடுமையாக சாடினார்.

திருமணம், கருமாதி, தலை திவசம் போன்றவற்றுக்கு பிராமணர்களை அழைத்து தானம் செய்வதற்கு பதில், உறவினர்கள் நண்பர்களை அழைத்து, அதை எளிமையாக நடத்த வேண்டும் என்றார்.

நமது திருமணத்திற்கு நாள் குறிக்கும் பிராமணன் வீட்டிலேயே இரண்டு மூன்று விதவைகள் இருக்கும்போது, அவர்கள் குறிக்கும் நேரமும், செய்யும் புரோகிதமும் எப்படி சரியாக இருக்கும்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார்.

விளைந்தால் வாரம், விளையாவிட்டால் வரி என்ற பெயரில் உழைக்கும் மக்களை, சுரண்டி கொழுத்த ஆதிக்க சமூகத்திக்கு எதிராக, இவர் எழுதிய “பாய காரிகளுக்கும் மிராசுதார்களுக்கும் உண்டாகி இருக்கிற விவாதம்” என்ற நூல் 1872 ம் ஆண்டு வெளியானது.

அதேபோல், மதம், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில், சாமானிய மக்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக இவர் எழுதிய “இந்துமத ஆசார ஆபாச தரிசினி” என்ற நூல் 1882 ம் ஆண்டு வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது

வெங்கடாச்சல நாயக்கரின், துணிவும், தெளிவும், நேர்மையான நடவடிக்கைகளும், ஆங்கிலேய அதிகாரிகளுக்கே பிடித்துப் போயின. அதனால், அவர் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றிக் கொடுத்தனர். மேலும், அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயக்கரை,  பாயக்காரிகளின் ஏஜென்ட் என்றே ஆங்கிலேயர்கள் அழைத்தனர்.

அத்திப்பாக்கம் வெங்கடாச்சலம் நாயக்கர் எழுதிய “இந்துமத ஆசார ஆபாச தரிசினி” என்ற நூல், பெரியாரின் குடியரசு பதிப்பகம் சார்பில் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது. இது குறித்து, 1946 ம் ஆண்டு  பெரியார் கூறும்போது, இன்றைக்கு அறுபது – எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே, பகுத்தறிவை ஆதாரமாகக் கொண்ட சுயமரியாதை கொள்கைகளை, தைரியமாக சிந்தித்து, தைரியமாக செயல்படுத்திய பேரறிஞர் என்கிறார்.

மேலும், “இந்துமத ஆபாச களஞ்சியங்கள் ஒழிவதற்கு இக்காலத்தில் யாராவது ஒருவர் தொண்டாற்றுவது என்றால், அப்படிப்பட்டவர் சர்வத்தையும் துறந்த துறவியாக இருந்து,, உயிருக்கு துணிந்த வீரராய்  இருந்தால் ஒழிய, முடியாத காரியமாக இருந்து வருகிறது” என்றும் அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயக்கரை போற்றுகிறார்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்கு முன்பு இந்திய அரசியல் வரலாற்றை பற்றியும் கொஞ்சம் அறிந்து கொள்வோம்.  காங்கிரஸ் கட்சி என்பது, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்றே அறியப்பட்டுள்ளது.

ஆனால், பிரிட்டிஷ் இந்தியாவின் அரசுப்பணிகளில், படித்த இந்தியர்களுக்கு உரிய பங்களிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே 1885 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது.

இந்தியாவில், தங்களுடைய ஆட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை சாந்தப்படுத்தும் முயற்சியாக, அரசு வேலை வாய்ப்புகள் சிலவற்றை இந்தியர்களுக்கு வழங்க ஆங்கிலேயர்கள் முன்வந்தனர். அதற்காகவே, ஆங்கிலேயர்களின் முழு ஒத்துழைப்புடன், உதவியுடன் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது என்றும் குற்றச்சாட்டு உண்டு.

ஆனாலும், பிற்காலத்தில் நாடு முழுவதும் சுதந்திர வேட்கையை விதைத்து, இந்திய விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்தது காங்கிரஸ் கட்சியே என்பதை மறுப்பதற்கில்லை.

அரசுப்பணிகளில் இந்தியர்களுக்கான பங்களிப்பை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டாலும், அவ்வாறு கிடைக்கும் பணிகளை பெரும்பாலும் பிராமணர்களே ஆக்கிரமித்துக் கொண்டனர்.

அதனால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களுக்கு, அரசுப்பணிகள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. இந்தப்பிரச்சினை, முதன் முதலில், பூதாகரமாக வெடித்தது சென்னை மாகாணத்தில்தான்.

அப்போது, சென்னை மாகாணம் என்பது, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரா, கேரளாவின் மலபார் பகுதி, கர்நாடகாவின் தெற்கு கனரா பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதனால், பிராமணர் அல்லாத தமிழர், தெலுங்கர், மலையாளிகள் என அனைவரும் இணைந்தே, அந்த பிரச்சினையை கையில் எடுத்தனர்.

அரசுப்பணியில் தங்களுக்கு உரிய விகிதாச்சாரத்தை, பிராமணர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சென்னை மாகாணத்தில் வலுவடையத் தொடங்கியது. அதன் விளைவாக 1912 -14 வாக்கில் “தென்னிந்திய நல உரிமை சங்கம்” என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவானது. இதுவே 1916 ம் ஆண்டு நீதிக்கட்சியாக மாறியது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பெரியார், 1925 ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். அதே ஆண்டில், தேசிய அளவில் மேலும் இரு இயக்கங்கள் உருவாகின. ஒன்று பொதுவுடைமை இயக்கம். மற்றொன்று ஆர்.எஸ்.எஸ்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம் போன்றவற்றின் சிந்தனைகளே இன்றும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று திகழ்கின்றன. இவை அனைத்துக்கும், அடித்தளம் அமைத்தவர்கள் வள்ளலாரும் அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயக்கருமே.

எனவே, வள்ளலாரையும், அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயக்கரையும் தமிழக அரசியல் வரலாற்றின் முன்னோடிகள் என்று சொல்வதில் தவறில்லை.