பலவீனத்தை பலமாக்கும் பாஜக வியூகம்: பதறும் தமிழக கட்சிகள்!

கொரோனா தொற்றில் இருந்து, ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்ள போராடி வரும் நேரம் இது. இந்த நேரத்தில், பாஜகவின் தொற்றில் இருந்து, தப்பிக்க தமிழகத்தின் ஒவ்வொரு கட்சியும்  கடுமையாக போராடி வருகின்றன.

தமிழகத்தில், திராவிட கட்சிகளை மீறி தம்மால் காலூன்ற முடியாது என்பதை தெளிவாக உணர்ந்துள்ள பாஜக, வலுவான திராவிட கட்சிகளையும், செல்வாக்கு பெற்றுள்ள இதர கட்சிகளையும் பலவீனப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளாக இருந்த கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்கு பின்னர், தாம் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கும் என்று பாஜக எதிர்பார்த்தது. அதற்காக ரஜினியை முடிந்த அளவுக்கு கொம்பு சீவியும்  பார்த்தது. ஆனால், அவர் எதற்கும் பிடி கொடுக்காமல் சாதுரியமாக நழுவி விட்டார்.

அதனால், தமிழகத்தில் வலுவாக இருக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது

முதல் கட்டமாக, திமுகவின் மாநில துணை பொது செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி பாஜகவில் இணைக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினரான, கு.க.செல்வம் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்தப்பட்டியல் இன்னும் நீளும் என்றே சொல்லப்படுகிறது.

இது தவிர, ஒவ்வொரு கட்சியிலும் தலைமையை பிடிக்காதவர்கள், தலைமைக்கு பிடிக்காதவர்கள், உள் கட்சி அரசியலால் ஓரம் கட்டப்பட்டவர்கள், குடும்ப அரசியலால் குழிதோண்டி புதைக்கப்பட்டவர்கள் என்ற பட்டியலை தயார் செய்துள்ள பாஜக, அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

அதிருப்தியாளர்கள் ஒவ்வொருவரையும் பாஜகவினர் தனித்தனியே சந்தித்துப் பேசி, அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கும் உத்திரவாதத்துடன், கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பல்வேறு கட்சியில் உள்ள அதிருதியாளர்கள், பாஜகவை நோக்கி அணிவகுக்க தயாராகி வருகின்றனர். எனினும், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கட்சி தலைமை, அவர்களை கண்காணிக்கும் வேலையையும் தீவிரப்படுத்தி உள்ளது.

அடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அமைக்க வேண்டிய  கூட்டணி, போட்டியிட வேண்டிய இடங்கள் பற்றி சிந்திக்க வேண்டிய கட்சிகள், தமது முக்கிய பிரமுகர்களையும், நிர்வாகிகளையும் எப்படி காப்பாற்றிக்கொள்வது? என்று யோசிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளன.

இதனால், பாஜகவிற்கு தமிழகத்தில் பெரிய அளவில் எந்த பலனும் கிடக்கப் போவதில்லை. ஆனாலும், மற்ற கட்சிகளை அச்சுறுத்தி, வயிற்றில் புளியை கரைத்து, அவர்களின் செயல்பாடுகளை திசை திருப்பலாம், பலவீனப்படுத்தலாம் என்பதே கணக்காக உள்ளது.