அதிமுகவில் அனைவருக்கும் பதவி: கட்சியை கைப்பற்ற முனையும்  எடப்பாடியின் வியூகம் ஜெயிக்குமா?

சசிகலாவின் ஆதரவோடு முதல்வர் ஆனாலும், அவர் இல்லாத அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்ட எடப்பாடி, அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக படுதோல்வியை சந்தித்தாலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில்  அதிமுகவுக்கு கிடைத்த அமோக வெற்றியை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார் அவர்.

பன்னீரை பொறுத்தவரை, என்னதான் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், கட்சியின் பெரும்பாலான பொறுப்புக்களில், தமது ஆதரவாளர்கள் இடம்பெறுவதை உறுதி செய்தார் எடப்பாடி.

டெல்லியின் ஆதிக்கத்தையும் மீறி, டெல்டா வேளாண் மண்டலம், புதிய மாவட்டங்கள், மாவட்டங்கள் தோறும் மருத்துவக்கல்லூரிகள், தெற்காசியாவின் மிகப்பெரிய கால்நடை-விலங்கின பூங்கா என, சில சாதனைகளை சொல்லும் அளவுக்கும் அவரது செயல்பாடு இருந்தது.

இந்நிலையில், சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தால், தன்னுடைய ஆதிக்கம் முற்றிலும் அகன்று விடாமல் இருக்கும் வகையில், புதிய மாவட்டங்களுக்கு தமது ஆதரவாளர்களையே பொறுப்பாளர்களாக நியமித்தார் எடப்பாடி.

அத்துடன், கட்சி ரீதியாக மாவட்டங்கள் பல இடங்களில் பிரிக்கப்பட்டு, அதில் தமது ஆதரவாளர்களே அதிக அளவில் இருக்குமாறும், அவர்  பார்த்துக் கொண்டார்.

தற்போது கட்சியில் உள்ள 69 மாவட்ட செயலாளர்களில்  6 பேர் மட்டுமே, பன்னீரின் ஆதரவாளர்கள். மற்றவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடியின் ஆதரவாளர்களே.

அதேபோல், மாவட்ட செயலாளர்கள் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் பலருக்கும், அமைப்பு செயலாளர்கள், எம்.ஜி.ஆர் மன்ற பொறுப்பாளர், கொள்கை பரப்பு துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வழங்கி சாந்தப்படுத்தி விட்டார்.

இதன்மூலம் கட்சியில் முக்கிய  பதவி எதிர்பார்த்த பலருக்கும், ஏதாவது ஒரு பதவி வழங்கி, அவர்களை தமது ஆதரவாளர்களாக மாற்றியும் இருக்கிறார் எடப்பாடி.

தற்போதுள்ள நிலையில், இரண்டு மற்றும் மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்கள், கட்சியில் அதிக அளவில் முளைத்துள்ளன.

இருந்தும், சென்னை, விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை பிரிக்க கடும் எதிர்ப்பு நிலவுவதால், அப்பகுதிகளில் இத்திட்டத்தை அவரால் செயல்படுத்த முடியவில்லை.

எனினும், அதிமுகவை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும், எடப்பாடியின் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்றே அக்கட்சியினர் கூறுகின்றனர்.

பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருப்பதால், வரும் சட்டமன்ற தேர்தலில், அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கே அதிக அளவில் சீட் வழங்க நேரும். அது ஒட்டுமொத்தமாக எடப்பாடியின் திட்டத்தை வெற்றி அடைய செய்யும் என்றும் அதிமுகவினர் கருதுகின்றனர்.

ஆயினும், எடப்பாடியின் இந்த திட்டத்தை தகர்க்க, தினகரன், சசிகலா, பன்னீர் ஆதரவாளர்கள் கடும் முயற்சியை மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, அடுத்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே, எடப்பாடியின் திட்டமும் வெற்றி பெறும். இல்லை என்றால், அவரது தலைமை கேள்விக்குறி ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.