கும்பகோணத்தை கோட்டையாக்குவதா? கோட்டை விடுவதா?: முதல்வரே முடிவு செய்யட்டும்!

தமிழக முதல்வர் எடப்பாடி மீது அரசியல் ரீதியாக எத்தனையோ விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவரது பல்வேறு நலத்திட்டங்கள் பாராட்டுக்கு உரியவை என்பதை மறுப்பதற்கில்லை.

டெல்டா வேளாண் மண்டலம், தலைவாசலில் தெற்காசியாவின் மிகப்பெரிய கால்நடை – விலங்கின ஆராய்ச்சி பூங்கா, புதிய மாவட்டங்கள், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் போன்ற அனைத்தும் அவரது சாதனை என்றே சொல்லலாம்.

கடந்த ஆண்டில் மட்டும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி என ஐந்து புதிய மாவட்டங்களை அவர் உருவாக்கி உள்ளார். இந்த ஆண்டு புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

எனினும், சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்ட பின்னரும்,  கும்பகோணம் மற்றும் பொள்ளாச்சி மாவட்டங்கள் இதுவரை பிரிக்கப்படவில்லை. தற்போதுள்ள நிலையில் புதிய மாவட்டங்கள் அறிவிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இது கும்பகோணம் மற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கும்பகோணம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால போராட்டம் ஆகும். ஒரு மாவட்ட தலை நகருக்கு உரிய அனைத்து தகுதிகளும் நிறைந்த கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு தயக்கம் காட்டுவது குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன.

அரசின் நிதி நெருக்கடி காரணமாக புதிய மாவட்ட அறிவிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், உண்மை அதுவல்ல என்கின்றனர் கும்பகோணம் பகுதி மக்கள்.

திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் முழு அரசியல் அதிகாரம் என்பது, பாபநாசத்திற்கு தென் பகுதியில் உள்ளவர்களின் கட்டுப்பாட்டிலேயே இதுவரை இருந்து வந்தது.

தற்போது மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக, அந்த பிடியில் பாதி தளர்ந்து விட்டது. கும்பகோணம் மாவட்டம் பிரிக்கப்பட்டால், முழுமையாக தளர்ந்து விடும். அதன் காரணமாகவே, கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு சில முக்கிய அரசியல் புள்ளிகள் இடையூறு செய்து வருவதாக கூறுகின்றனர்.

தஞ்சைக்கு தெற்கு பகுதி எப்போதுமே திமுகவின் கோட்டை. அங்கே அதிமுகவின் வெற்றி என்பது பெரிய அளவில் இருக்காது. கடந்த சட்டமன்ற தேர்தலில், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் தோல்வி அடைந்ததற்கும் இதுவே காரணம்.

ஆனால், கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற தஞ்சையின் வடக்கு பகுதிகள் அதிமுகவிற்கு சாதகமான பகுதிகளாகும். அதனால், மயிலாடுதுறையைப் போல  கும்பகோணம் பகுதியை இழந்து விட கூடாது என்று, சிலர் வலுவாக லாபி செய்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே, கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க முதல்வர் தயக்கம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், எத்தனை தடைகள் வந்தாலும், எங்கள் கும்பகோணம் மாவட்டத்தை வென்றெடுப்போம் என்றும் அவர்கள் உறுதி கூறுகின்றனர்.

பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில், பாபநாசம் தொகுதியில் கடந்த மூன்று முறையாக, அதிமுக சார்பில் தொடர்ந்து வெற்றி பெற்றவர் அமைச்சர் துரைக்கண்ணு. கும்பகோணம் மாவட்ட கோரிக்கையை பொறுத்தே, அவரது அடுத்த தேர்தல் வெற்றி அமையும் என்பதே இப்போதைய நிலை.

கும்பகோணம் தொகுதியை பொறுத்தவரை, பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மண்ணின் மைந்தர்களுக்கு சீட் வழங்குவதில், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் காட்டும் பாரபட்சமே, அங்கு திமுகவுக்கு நூலிழையில் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.

திருவிடைமருதூர் தொகுதி, தனித் தொகுதியாக அறிவிக்கப்பதால், அங்கும் சில நூறு வாக்குகள் வித்யாசத்திலேயே திமுக வெற்றி பெற்றிருக்கிறது.

எனவே கும்பகோணத்தின் மூன்று தொகுதிகளையும் அதிமுகவின் கோட்டைகளாக மாற்றுவது சிரமமான செயல் அல்ல. கும்பகோணம் மாவட்டம் அறிவிக்கப்பட்டாலே, அது சாத்தியம் ஆகிவிடும் என்பதே இப்போதைய நிலை.

எனவே, தனி நபர்களின் சுயநலத்தை விட கட்சியின் நலனே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு, முதல்வர் எடப்பாடி விரைவில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் கும்பகோணம் அதிமுகவின் கோட்டையாகும். இல்லை யென்றால் அதிமுக அதை கோட்டை விடும்.

கும்பகோணத்தை அதிமுகவின் கோட்டையாக்குவதா? இல்லை கோட்டை விடுவதா? என்பதை முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்.