வேதரத்தினம்: இழந்ததை மீட்ட திமுக – இருந்ததை தொலைத்த பாஜக!

எஸ்.கே.வேதரத்தினம், திமுகவிற்கு திரும்பி இருப்பதன் மூலம், அக்கட்சி இழந்ததை மீட்டுள்ளது என்றும், பாஜக இருந்ததை தொலைத்துள்ளது என்றும் டெல்டா மாவட்ட அரசியல் வட்டாரம் கூறுகிறது.

திமுகவுக்கு திரும்பிய எஸ்.கே.வேதரத்தினத்தால், டெல்டா மாவட்டத்தின் அனைத்து கட்சிகளிலும் முக்கிய மாற்றங்கள் உருவாகும் என்பதே இப்போதைய பேச்சாக உள்ளது.

1996 , 2001 2006 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தலிலும், வேதாரண்யத்தில் இருந்து திமுக சார்பில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பை பெற்றவர் எஸ்.கே.வேதரத்தினம்.

தொகுதி மக்களுடன் தாம் கடைபிடித்த எளிமையான அணுகுமுறை, இடைவிடாத செயல்பாடுகள் மூலம், கட்சிகளை கடந்து, தொகுதி முழுவதும் தமக்கென ஒரு நல்ல செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டார் வேதரத்தினம்.

அதனால்,, நாகை மாவட்டம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. வேதரத்தினத்தின் வளர்ச்சியும், செல்வாக்கும் தமக்கு போட்டியாக அமைந்து விடும் என்று, அப்போதைய நாகை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஏ.கே.எஸ்.விஜயன் அஞ்சியதாகவும் கூறப்பட்டது.

அந்த சமயத்தில், வேதாரண்யம் பகுதியில் சர்ச்சைக்குரிய அதிமுக பிரமுகர் ஒருவரை, திமுகவில் சேர்ப்பதற்கும் ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தன. அது தொடர்பாக, வேதரத்தினத்தை அழைத்து கருத்துக் கேட்டுள்ளார் ஸ்டாலின்.

அப்போது, அந்த பிரமுகரை சேர்த்தால், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று வேதரத்தினம் கூறியுள்ளார். ஆனால், அவரது வருகை, உங்களுக்கு போட்டியாக இருக்கும் என்று பயப்படுகிறீர்களா? என்று ஸ்டாலின் மீண்டும் கேட்டுள்ளார்.

என்னுடைய கருத்தை நான் சொல்லி விட்டேன். அதற்குப் பிறகு, உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டு, உடனடியாக வேதரத்தினம் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். அது ஸ்டாலினுக்கு சற்று வருத்தமாக இருந்துள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை, சரியாகப் பயன்படுத்திக் கொண்ட, மாவட்ட செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், 2011  சட்டமன்ற தேர்தலில், வேதாரண்யம் தொகுதியை, கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்து விட்டார்.

கூட்டணி பேச்சு வார்த்தையின்போது, சிட்டிங் எம்.எல்.ஏ அல்லது எம்.பி க்களை கொண்டிருக்கும் எந்த கட்சியும், கூடுமானவரை அந்த தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை என்பதே வரலாறு.

அதுவும், மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று வரும் வேதாரண்யம் தொகுதியை, கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்த திமுக, அத்துடன் தொகுதியையும், வேதரத்தினத்தையும் கை கழுவி விட்டது.

வெறுத்துப்போன வேதரத்தினம், 2011 தேர்தலில் தனித்து போட்டியிட்டு, சுமார் 25 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றார். அதனால், அத்தொகுதியில் பாமக தோல்வி அடைந்தது.

2016  தேர்தலில், வேதரத்தினம் பாஜக சார்பில் போட்டியிட்டு, திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு இணையான வாக்குகளை பெற்றார். அதனால், அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஒ.எஸ்.மணியன் வெற்றி பெற்று அமைச்சர் ஆகிவிட்டார்.

திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட, நாகை மாவட்டத்தின் பெரும்பாலான தொகுதிகள், அதிமுக வசம் ஆகிவிட்டன. தற்போது, நாகை மாவட்டம் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டு, பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்ட போதிலும், திமுகவின் செல்வாக்கு உயரவில்லை.

மேலும், எந்த கட்சியில் இருந்தாலும், சுய செல்வாக்கை இழக்காத வேதரத்தினத்தின் கடும் முயற்சியால், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், நாகை மாவட்டத்தில் மட்டும், பாஜக சார்பில் 8 பேர்  ஒன்றிய கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், பாஜகவில் உரிய பொறுப்புக்கள் வழங்காமல், தட்டிக் கழிக்கப்பட்ட வேதரத்தினம், மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார்.

இது, நாகை மாவட்ட திமுகவிற்கு பெரிய பலம் என்றாலும், ஏற்கனவே கட்சியில் பல்வேறு கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் பலருக்கு சற்று இழப்பே. இருந்தாலும், தன்னுடைய அணுகுமுறையால், அவர்களை வேதரத்தினம் சரி செய்து விடுவார் என்றே கூறப்படுகிறது.

வேதரத்தினம் மீண்டும் திமுகவிற்கு வந்துள்ளதால், ஏற்கனவே அந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருக்கும் ஒ.எஸ். மணியன், வேறு தொகுதிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், நாகை மாவட்டம் மட்டுமன்றி, மற்ற டெல்டா மாவட்டங்களிலும் இதர காட்சிகளில் உள்ள பொறுப்பாளர்கள் மாற்றப்படும் சூழலும் உருவாகி உள்ளது.

வேதரத்தினத்தின் வருகையால், திமுக இழந்ததை மீட்கும் என்றும், பாஜக இருந்ததையும் தொலைக்கும் என்றும் டெல்டா வட்டாரங்கள் கூறுகின்றன.