ஆதீனங்களை அலறவிட்ட மாவீரன்: திருப்பனந்தாள் கதிர்வேல் படையாட்சி!

(மேல்மருவத்தூரில் வசித்து வரும், திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், பேராசிரியர் வா.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தொடரில் இருந்து, இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இதை Copy & Paste செய்வது சட்டப்படி குற்றமாகும். ஷேர் செய்வதற்கு தடை இல்லை)

சமூக அவலங்களுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்காகவும் போராடிய கொள்ளையர்கள் அனைவரையும் ராபின்ஹுட் (Robinhood) என்றும், சமூகம் சார் கொள்ளையர்கள் (Social Bandits)  என்றும் வரலாறு கூறுகிறது.

அந்த வரிசையில், தமிழகத்தில்  ராபின்ஹுட் ராமலிங்க படையாட்சி, கொடுக்கூர் ஆறுமுக படையாட்சி, மலையூர் மம்பட்டியான், சந்தன வீரப்பனைப் போல, மாவீரன் திருப்பனந்தாள் கதிர்வேல் படையாட்சியின் வரலாறும் சாதாரணமானது அல்ல.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே, ஆதீனங்களில் நடக்கும் காம லீலைகளையும், சமூக, பொருளாதார சுரண்டல்களையும், எதிர்த்து  துப்பாக்கி ஏந்தி போராடியவர் மாவீரன் கதிர்வேல் படையாட்சி.

முப்பத்தோரு வயது வரை மட்டுமே உயிரோடு வாழ்ந்த மாவீரன் கதிர்வேல் படையாட்சி, ஆதீனங்களையும், காவல் துறையினரையும் அலறவிட்ட எண்ணற்ற நிகழ்வுகளை, அன்றைய ஆங்கிலேய அரசு ஆவணங்களில் பதிவு செய்துள்ளதே இதற்கு சாட்சி.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளில் 1901 ம் ஆண்டு, ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கதிர்வேல் படையாட்சி.

நல்ல வாட்டசாட்டமான கட்டு மஸ்தான தோற்றம் கொண்ட இவர், எழுதப்படிக்க தெரிந்தவராகவும் இருந்தார். அதனால், திருப்பனந்தாள் ஆதீன மடத்திற்கு சொந்தமான கட்டிடங்களின் வாடகை மற்றும் , நிலங்களின் குத்தகையை வசூலிப்பதற்காக, மடத்தின் மேலாளர் சோமு பிள்ளை என்பவர், இவரை மடத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டார்.

கதிர்வேல் படையாட்சியும் தனக்கு கிடைத்த வேலையை கண்ணும் கருத்துமாக செய்து வந்தார். அப்போது, அவருக்கு திருமணம் ஆனதால், மடத்திற்கு சொந்தமான ஒரு வீடு, அவருக்கு ஒதுக்கித் தரப்பட்டது. அதில் தமது மனைவி மற்றும் திருமணம் ஆகாத தங்கையுடன் அவர் வசித்து வந்தார்.

அந்த சமயத்தில், அந்த பக்கம் வந்து சென்ற மடத்தின் மேலாளர் சோமு பிள்ளை, நல்ல சிவப்பாக, அழகாக இருந்த கதிர்வேல் தங்கையின் மீது காதல் வயப்பட்டு விட்டார். அதனால், அவளை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்தார்.

வீட்டில் யாரும் இல்லாத சமயமாக பார்த்து, ஒருநாள் அந்த வீட்டிற்கு சென்று, கதிர்வேல் தங்கையிடம் ஆசை வார்த்தைகள் பேசி, மயக்கி தன் வசப்படுத்த முயற்சி செய்தார். தற்போது மட்டும் அல்ல, அந்த காலத்திலும் மடங்கள் இப்படித்தான் ஆன்மீகத்தை வளர்த்துள்ளன போலும்.

ஆனால், அவளிடம்  அது கொஞ்சம் கூட எடுபடவில்லை. இது போல் என்னிடம் நடந்து கொண்டால், பிறகு “நடப்பதே வேறு” என்று எச்சரித்து அனுப்பி விட்டாள்.

ஆனாலும், அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று துடியாய் துடித்த சோமு பிள்ளை, வெவ்வேறு வழிகளை எல்லாம்  கையாண்டு பார்த்தார். அதன் பலனாக, கதிர்வேலின் தங்கை ஒரு நாள், விளக்கமாற்றால், சோமு பிள்ளையை பின்னு பின்னு என்று பின்னி எடுத்து விட்டார்.

எனினும், கோபக்கார அண்ணனிடம் இது பற்றி சொன்னால், தேவை இல்லாமல் வெட்டு, குத்து என்று இறங்கி விடுவார். அதனால், கர்ப்பிணியாக இருக்கும், அண்ணியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அமைதியாக இருந்து விட்டார்.

இருந்தாலும், பொம்பள கையால விளக்கமாத்து அடிவாங்கிய சோமு பிள்ளைக்கு, அந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன்னை அவமானப்படுத்திய கதிர்வேலு தங்கையை எப்படியாவது, அவமானப்படுத்தி விடவேண்டும் என்று ஒரு திட்டம் போட்டார்.

கதிர்வேலை, வெளியூரில் வாடகை வசூலிக்க அனுப்பி விட்டால், அவர் திரும்பி வருவதற்கு, இரவு ஆகிவிடும். அதற்குள், அவர் தங்கையை களங்கப்படுத்திவிட வேண்டும் என்பதே அவரது திட்டம். அதற்காக கதிர்வேலையும் வெளியூர் அனுப்பி விட்டார்.

அதன் பிறகு, மாலை வரை காத்திருந்த சோமு பிள்ளை, கதிர்வேலு மனைவியும் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, வீட்டில் நுழைந்து, அவரது தங்கையிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார்.

கதிர்வேலுவின் தங்கையாச்சே, சும்மா விடுவாளா அவள். கையில் கிடைத்த கம்பு, கட்டைகள், அரிவாள் மனைகளை எல்லாம் எடுத்து, சோமு பிள்ளை மீது, பலம் கொண்டு தாக்குதல் நடத்தினாள். தாக்குதலில் காயம் அடைந்த சோமு பிள்ளை, உயிர் பிழைத்தால் போதும் என்று, அலறி அடித்து ஓடி விட்டார்.

அந்த அவமானத்தை தாங்க முடியாமல் தவித்த சோமு பிள்ளை, கதிர்வேலுக்கு இந்த விஷயம் தெரிந்தால், கொன்று போட்டு விடுவான் என்று பயந்தார்.

ஆனாலும், மடத்தில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, வாடகை பணத்தை வசூலித்த கதிர்வேல், அதை அப்படியே தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான் என்று போலீசில் பொய் புகார் ஒன்றை கொடுத்து விட்டார்.

மேலும், அன்று இரவே, போலீசார் பாதுகாப்புடன் சென்று, மடத்துக்கு சொந்தமான வீட்டில் இருந்து, கர்ப்பிணியான கதிர்வேல் மனைவியையும், அவளது தங்கையையும் வெளியேற்றி விட்டார்.

வெளியூரில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த கதிர்வேலுக்கு, இந்த தகவல் கிடைத்தது. போலீஸ், எப்படியும் தம்மை கைது செய்துவிடும் என்று அஞ்சிய அவர், அங்கிருந்து தப்பிவிட்டார்.

******

ஆட்சி அதிகாரம் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களை அடிமைப்படுத்த நினைக்கும்போது, ஆன்மீகமும் அதற்கு துணை புரிகிறது. அதை வெள்ளாளர்களும் தெளிவாக உணர்ந்துதான், மடங்களை உருவாக்கி பண்டார சந்நிதிகளையும் வளர்த்தனர்.

அவர்களின் உண்மையான ரூபத்தை ஊரறிய செய்பவர்கள் அனைவரும், கதிர்வேல் போன்று, காவல் துறையினரால் சமூக விரோதியாகவே சித்தரிக்கப்படுவார்கள்.

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க தலைமறைவான கதிர்வேல், கொள்ளிடம் அருகில் உள்ள மூலங்குடி என்ற ஊரில் உள்ள தமது உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

மனைவியையும், தங்கையையும் காப்பாற்ற வேண்டும். போலீஸ் தம்மை தேடும் நிலையில், பழைய மாதிரி எங்கும் வேலைக்கு செல்ல முடியாது. என்ன செய்வது? என்று யோசித்தார் கதிர்வேல்.

கடுமையாக உழைத்து, நேர்மையாக வாழ நினைக்கும் தம்மை, ஆதீனங்களும், காவல் துறையும் நிம்மதியாக வாழ விடாது என்பதை உணர்ந்தார்.

தம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிய மடத்தின் மேலாளர் சோமு பிள்ளை மீதும்,  அவரைப்போன்ற அருவருப்பானவர்களின் கூடாரமாக திகழும் மடங்கள் மீதும் அவருக்கு கோபம் கோபமாக வந்தது.

தம்மைப்போல, இன்னும் எத்தனை குடும்பங்கள் இது போன்ற நெருக்கடியை சந்தித்திருக்கும். செல்வாக்கு இல்லாத விவசாயக் குடிகளும், ஒடுக்கப்பட்ட சமூகமும், இது போன்ற அராஜகங்களை எல்லாம் யாரிடம் சொல்லி முறையிட முடியும் என்று எண்ணி மிகவும் வேதனை அடைந்தார்.

அப்போதுதான், ஆன்மீகத்தின் பெயரால் காம லீலைகளை அரங்கேற்றி, அப்பாவி மக்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுரண்டி வரும் மடங்களையும், சோமு பிள்ளைகளை போன்ற விஷமிகளையும் பழிவாங்க வேண்டும் என்ற வெறி அவருக்குள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

சமூக அவலங்களையும், மக்கள் விரோதிகளையும் எதிர்த்து போராட நேர்மையான வழி கைகொடுக்காது என்று உணர்ந்த கதிர்வேல், கொழுத்த பணக்காரர்களிடம் மாடு திருடும் வேலையில் இறங்கி விட்டார். அவரோடு மாரிமுத்து, ராமையா என்ற இரு கூட்டாளிகளும் சேர்ந்து கொண்டனர்.

ஒருவர் இரவு நேரத்தில் மாட்டுக்கு அருகில் சென்று, அது சத்தம் போடாத அளவுக்கு கையிற்றை இறுக்கி பிடித்து தடவிக்கொடுப்பார். மற்றொருவர் அதன் கழுத்தில் இருக்கும் மணியை கழட்டி, ஒட்டிக்கொண்டு வந்து விடுவர்.

கால்நடையாக பல மைல் தூரங்கள் நடந்து சேர்ந்து, வெளியூர் சந்தைகளில் மாடுகளை விற்று, போதுமான அளவு பணத்தை சேர்த்துக் கொண்டார் கதிர்வேல். தன்னுடைய தங்கையையும் திருமணம் செய்து கொடுத்து விட்டார்.

மாடு திருடுவதன் மூலமும், கொழுத்த பணக்காரர்களின் வீட்டில் கொள்ளை அடித்ததன் மூலம் கிடைக்கும் பணம், பொருள் ஆகியவற்றை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் அள்ளி, அள்ளிக் கொடுத்தார்.

இதனால், கொள்ளிடம் ஆற்றின் இரு கரையிலும் உள்ள எண்ணற்ற கிராம மக்கள் அவர் மீது அதிக மரியாதை கொண்டிருந்தனர்.

அடுத்து செய்ய வேண்டிய வேலை இரண்டுதான். ஒன்று அப்பாவி மக்களை சுரண்டிக் கொழுத்து, காம களியாட்டம் போடும் மடங்களை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. இரண்டாவதாக , சோமு பிள்ளை போன்றவர்களை தீர்த்துக் கட்டுவதுதான்.

சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்தில், தன்னுடைய பணிகளை விரைவாக நிறைவேற்ற, விண்டேஜ் கார் ஒன்றை வாங்கினார் கதிர்வேல். அடுத்து பாண்டிச்சேரி சென்று ஒரு கைத்துப்பாக்கியும், அதற்கான வெடி மருந்துகளையும் வாங்கிக் கொண்டார்.

இரவு நேரங்களில் மக்களின் பாதுகாப்புடன் பல கிராமங்களுக்கும் சென்று, ராந்தர் விளக்கு வெளிச்சத்தில், மடங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை  ஏற்படுத்தினர்.

மடங்களில் நடக்கும் காமக் களியாட்டங்கள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், மர்மமான முறையில் இறந்து போகும் இளம் பெண்கள், வாடகை மற்றும் குத்தகை என்ற பெயரில் சுரண்டப்படும் ஏழைகள் போன்ற அவலங்களை மக்களிடம் புட்டுப் புட்டு வைத்தார்.

இதனால், மடங்களுக்கு எதிராக மக்கள் திரும்ப ஆரம்பித்தனர். அங்கு நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக போராட்டங்களும் வெடிக்க ஆரம்பித்தன.

அடுத்து திருப்பனந்தாளில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்ட, மடத்தின் மேலாளர் வில்லன் சோமு பிள்ளையை, தமது துப்பாக்கியால் சுட்டார் கதிர்வேல். ஆனால், அவர் அதிர்ஷ்ட வசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பி விட்டார். எனினும், அதன் பிறகு அவர் வெளியில் நடமாடுவதே இல்லை.

அதேபோல, கூடவே இருந்து போலீசிடம் தன்னைக் காட்டிக் கொடுக்க முயற்சித்த துரோகி ஒருவனையும் அவர் துப்பாக்கியால் சுட்டார்.

அதன் பின்னர், தன்னை சுற்றி வளைத்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீசை துப்பாக்கியால் சுட்டு தப்பித்து விட்டார்.

அதனால், கதிர்வேலை பிடிப்பதற்காகவே தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு அவர் தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.

அந்த சமயத்தில், ஒரு நாள், மன்னியாற்றங்கரை அருகே அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கே காக்கி சீருடையில் நின்றிருந்த, நீர்ப்பாசனத் துறையை சேர்ந்த இரண்டு லஸ்கர்கள், அந்த அவரது காரை வழி மறித்தனர்.

காக்கி சீருடையில் இருந்த அவர்களை போலீசார் என்று நினைத்த கதிர்வேல், அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

********

கதிர்வேல், தன்னுடைய எதிரிகளையும், துரோகிகளையும், சுற்றி வளைக்கும் போலீசாரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார். அதில் சிலர் தப்பித்தனர். சிலர் இறந்து போயினர். அதனால், போலீசார் அவரை உயிருடனோ, சுட்டோ பிடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

பல கிராமத்தை சேர்ந்த மக்கள் அவருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியதால், அவரை பிடிப்பது போலீசாருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. போலீஸ் எவ்வளவோ முயற்சி செய்தும், கதிர்வேல் தப்பித்துக் கொண்டே இருந்தார்.

அந்த சமயத்தில் ஒருநாள், மூலங்குடியில் அவரது உறவினர் வீட்டில் தலை மறைவாக தங்கி இருந்த கதிர்வேலை, போலீஸ் எப்படியோ மோப்பம் பிடித்து சுற்றி வளைத்து விட்டது.

ஆனால், அங்கிருந்து சாதுரியமாக தப்பித்த கதிர்வேல், கொள்ளிடம் ஆற்றில் குதித்து நீந்தியே, மணல்மேடு வந்து அங்குள்ள தமது உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கி விட்டார்.

அதுவும் போலீசாருக்கு தெரிந்து விட்டது. உடனே, துப்பாக்கி ஏந்திய 15 போலீசார், மணல்மேட்டில் கதிர்வேல் தங்கி இருந்த அவரது உறவினர்  வீட்டை சுற்றி வளைத்தனர்.

அதனால், போலீசாருக்கும் கதிர்வேலுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. தனி ஒருவனாக நின்று, துப்பாக்கியுடன் இருந்த 15 போலீசாரையும் சமாளித்தார் கதிர்வேல். அந்த துப்பாக்கி சண்டையில் அவர் ஆறு முறை துப்பாக்கியால் சுட்டார் என்று போலீஸ் ஆவண குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி சண்டையின் இறுதியில், கதிர்வேல் அங்கிருந்து தப்பித்து, அருகில் உள்ள ஆதி திராவிடர் காலனியில் பதுங்கி விட்டார். அவர் மீது பற்று கொண்ட அம்மக்கள், அவரை பாதுகாக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், அந்த முயற்சியால், அம்மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைத்த கதிர்வேல், அங்கிருந்து தப்பி வேறு இடத்திற்கு செல்வதற்காக மீண்டும் போலீசாருடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தார்.

அதிகாலை 4.30 மணி முதல்    5.00 மணி வரை அந்த சண்டை நீடித்தது. இறுதியில், போலீசாரால் கதிர்வேல் சுட்டுக்கொல்லப்பட்டார். இறக்கும் தருவாயிலும் போலீசாரை தெறிக்கவிட்ட கதிர்வேலின் உடலை  போலீசின் 17 துப்பாக்கி குண்டுகள் துளைத்து எடுத்தன.

கதிர்வேலை சுட்டுக்கொன்ற அந்த போலீஸ் படைக்கு தலைமை ஏற்றவர் புலிக்குட்டி துரைசாமி நாயுடு என்ற போலீஸ் அதிகாரி. இந்த சம்பவம் 26-11-1931 அன்று நடந்தது. அப்போது கதிர்வேல் படையாட்சிக்கு வயது 31.

கௌரவமாக வாழ வேண்டும் என்று உழைத்து வாழ்ந்த கதிர்வேல் படையாட்சியின் வாழ்க்கை பாதையை மாற்றியது, காமக்களியாட்ட மடங்களும், சோமு பிள்ளை போன்ற விஷமிகளும், அவர்களுக்கு துணைபோன காவல்துறையும்தான்.

முப்பத்தோரு வருடங்கள் மட்டுமே வாழ்ந்த மாவீரன் திருப்பனந்தாள்  கதிர்வேல் படையாட்சி, ஆங்கிலேயர் காலத்திலேயே ஆதீனங்களையும், காவல் துறையையும் கதற விட்டவர் என்பது வரலாறாக இருக்கலாம்.

ஆனால், அதற்காக அவரும், அவர் குடும்பமும் அனுபவித்த இன்னல்களும், கொடுமைகளும் கொஞ்ச நஞ்சம் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

கதிர்வேல் படையாட்சியின் கதையை கேட்டு மிகவும் மனம் வருந்திய  எம்.ஜி.ஆரின் குரு, காளி.என்.ரத்தினம், 1936 ம் ஆண்டு வெளியான சந்திரகாந்தா என்ற படத்தில் பண்டார சன்னிதியாக நடித்து, மடங்களின் அவலங்களை தோலுரித்து இருப்பார். போலி சாமியாராக அவரது நடிப்பும், பேசும் வசனங்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அதனால், சந்திரகாந்தா திரைப்படத்தை, தஞ்சை மாவட்டத்தில் திரையிடாமல் தடுக்க மடங்கள் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதையும் மீறி, கும்பகோணத்தில் ஒரே சமயத்தில் இரண்டு திரையரங்கில் வெளியாகி, இப்படம் வசூலை வாரிக்குவித்தது.