தடம் மாறும் அரசியல் கட்சிகள்: அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகலா?

2021  சட்டமன்ற தேர்தல் என்பது அதிமுக – திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே ஒரு அக்கினி பரீட்சை. இந்த தேர்தல் முடிவைப் பொறுத்தே இவ்விரு கட்சிகளின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும்.

கலைஞர், ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல், ஸ்டாலின் தலைமையில் திமுகவும், எடப்பாடி-பன்னீர் கூட்டு தலைமையில் அதிமுகவும் சந்திக்கப்போகும் முதல் சட்டமன்ற தேர்தல்.

இதில் திமுக வெற்றி பெற்றால், இரண்டு தொடர் தோல்விகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த பெருமையுடன், ஸ்டாலின் தலைமையும் வலுவான தலைமை என்பது உறுதி செய்யப்படும். தோல்வி அடைந்தால், கட்சியின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டி இருக்கும்.

அதிமுகவும் அதே நிலையில்தான் இருக்கிறது. எனவே, வரும் சட்டமன்ற  தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றால், ஹாட்ரிக் வெற்றி என்ற சிறப்புடன், எடப்பாடி – பன்னீரின் கூட்டு தலைமை உறுதியாகும். தோல்வி அடைந்தால், கட்சியின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியே என்பதில் சந்தேகம் இல்லை.

இதன் காரணமாகவே, என்ன விலை கொடுத்தாவது, அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று இரு கட்சிகளுமே தீவிரமாக களத்தில் குதித்துள்ளன.

திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர், அதிமுகவுக்கு சுனில் என உத்தி வகுப்பாளர்கள், வியூகங்களை வகுத்துக் கொண்டு இருந்தாலும், கூட்டணி கட்சிகளை வளைப்பதில், இரு தரப்புமே கடுமையாக போராடி வருகிறது.

இதன் காரணமாக, திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுக பக்கம் போவதற்கும், அதிமுகவில் உள்ள சில கட்சிகள் திமுகவிற்கு மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

அதிமுகவை பொறுத்தவரை, பாஜக அல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றே விரும்புகிறது. அதை, மென்மையாகவே பிரதமர் மோடியிடம், முதல்வர் எடப்பாடி எடுத்துக் கூறிவிட்டார் என்றும் கூறுகின்றனர்.

அதேபோல், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான பாமகவும், அதிமுகவை விட்டு விலகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

அளவுக்கு அதிகமான நிர்பந்தம் கொடுப்பது, மாற்றி மாற்றி பேசுவது போன்ற பாமக தலைமையின் செயல்பாடுகளால், முதல்வர் எடப்பாடி கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதனால், பாஜக, பாமக அல்லாத ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் தற்போது அதிமுக தீவிரமாக களமிறங்கி உள்ளது.

ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக விலகினால், இடது சாரி கட்சிகள் இரண்டுமே அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், பாமக விலகினால், விசிக வும் அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு ஆயத்தமாகவே இருக்கிறது. மேலும் பாஜக இல்லாத அதிமுக கூட்டணிக்கு சிறுபான்மை சமூகத்தின் ஆதரவும் கிடைக்கும். அதன்  மூலம் தமது கூட்டணியை வலுவாக்கிக் கொள்ளலாம் என்பது அதிமுகவின் கணக்காக உள்ளது.

அதேசமயம், சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தால், அவர் அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்த மாட்டார் என்றும். அவருக்கு உரிய மரியாதையை தந்து, தேவையானதை செய்து கொடுக்கவும் அதிமுக கூட்டு தலைமை தயாராக இருப்பதால், அவரது ஆதரவு தினகரனுக்கு கிடைக்காது என்பதும் அதிமுக கூட்டு தலைமையின்  எதிர்பார்ப்பு.

மறுபக்கம், தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல், தமக்கு சாதகமாக இருப்பதாகவே கருதும் திமுக, கூடுமானவரை தனித்து நின்றே ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறது. எனினும், பாமக – திமுக இடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த, அதிகார பூர்வமான தகவல்கள், இரு தரப்பில் இருந்தும் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும், அரசியலில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை தற்போதைய சூழல்கள் வெளிப்படுத்துகின்றன.