காங்கிரஸ் கட்சியின் ராஜதந்திரமும்: கவிழ்ந்து போகும் மாநில அரசுகளும்!

சுதந்திர இந்தியாவை  நீண்ட காலம் ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்ற ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். 135 வருட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சி, கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜகவை சமாளிக்க  முடியாமல் தவிக்கிறது என்பதை, ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

கர்நாடகா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, இன்று ராஜஸ்தானிலும் ஆட்சியை பறிகொடுக்கும் நிலையை எதிர் கொண்டு வருகிறது காங்கிரஸ் கட்சி.

பெருவாரியான மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒரு மாநில அரசுக்கு இடையூறு செய்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதே சமயம், ஜனநாயக மாண்புகளை சிதைத்ததில், சிதைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதற்கு கடந்த கால அரசியல் நிகழ்வுகளே சான்றுகள்.

கடந்த காலங்களில், பல்வேறு மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, எத்தனையோ எதிர் கட்சிகளின் அரசுகளை, 356 வது சட்டப்பிரிவு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி கலைத்தது காங்கிரஸ் ஆட்சி.

நெருக்கடி நிலையை அமல்படுத்தி, மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்ததும் காங்கிரஸ் கட்சிதான். மிசாவுக்காக  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பகிரங்கமாக வருத்தம் தெரிவித்ததும் உண்டு.

தற்போது, 356 வது சட்டப்பிரிவை பயன்படுத்த முடியாத நிலை. மறுபக்கம் கட்சி தாவல் தடை சட்டம் போன்றவை நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், “குதிரை பேரம்” என்ற ஒற்றை ஆயுதத்தை பயன்படுத்தி, பல மாநிலங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் ஆட்சிகளை மாற்றி அமைத்து வருகிறது பாஜக.

ஒரு எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சியை பலவீனப் படுத்துவதில் பாஜகவின் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கத்தான் செய்யும். ஆனால், காங்கிரஸின் உள்கட்சி அரசியலே, பாஜகவுக்கு பாதை அமைத்து கொடுத்து, அதன் வேலையை எளிதாக்குவதுதான் வேதனையிலும் வேதனை.

மிகப்பெரிய ராஜதந்திரிகள் அனைவரும் தமக்குத் தாமே குழி பறித்துக் கொள்வார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. ஒன்றேகால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு தற்போது அந்த பழமொழி மிகவும் பொருந்திப் போகிறது.

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் பங்கு இன்றியமையாதது என்று அனைவரும் அறிந்ததே. ஆனாலும், கட்சி மேலிடத்தில் தமக்கு இருந்த  செல்வாக்கை பயன்படுத்தி முதல்வர் பதவியில் அமர்ந்தார் கமல்நாத். ஜோதிராதித்ய சிந்தியா, முடிந்த வரை பொறுமை காத்தபோதும், அவரை அரசியலை விட்டு அப்புறப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்தார் கமல்நாத். அதன் காரணமாகவே அங்கு ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ் கட்சி.

ராஜஸ்தானில், சச்சின் பைலட் என்ற இளம் தலைவரின் கடுமையான உழைப்பே, காங்கிரஸ் கட்சியை மீண்டும் அரியணை ஏற்றியது. ஆயினும், காங்கிரஸ் மேலிடத்தின் செல்வாக்கு, அசோக் கெலாட்டை முதல்வர் ஆக்கியது. அவரும் வழக்கம் போல, சச்சின் பைலட்டை அரசியல் ரீதியாக அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இறங்கினார். அதன் மூலம் ஆட்சிக்கான நெருக்கடியை அவரே உருவாக்கி விட்டு தவிக்கிறார்.

இவை எல்லாம் வட மாநிலங்களில் மட்டும் நடைபெறுவதாக நினைத்துவிட வேண்டாம். நமது அண்டை மாநிலமான புதுச்சேரியிலும், கடந்த தேர்தலில் இந்த கூத்துதான் அரங்கேறியது.

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை எதிர்த்து அரசியல் செய்யும் அளவுக்கு வலுவான தலைவராக அறியப்பட்டவர் நமசிவாயம். அவரை முன்னிலைப்படுத்தியே புதுச்சேரி மாநில காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றது.

ஆனால், அதுவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த நாராயணசாமி, திடீரென மேலிட செல்வாக்கை பயன்படுத்தி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட்டார். ஜோதிர் ஆதித்யா, சச்சின் பைலட் போன்று, நமசிவாயமும் தீவிரம் காட்டி இருந்தால், நாராயணசாமியும் இருக்கும் இடம் தெரியாமல் போய் இருப்பார்.

இதுபோன்று பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் நடக்கும் கூத்துக்கள்தான், அந்த கட்சியின் ஆட்சி பறிபோவதற்கும், செல்வாக்கு இழப்பதற்கும் காரணமாக அமைகிறது.

மாப்பிள்ளை என்று ஒருவரை அடையாளம் காட்டி, மணவறையில் மற்றொருவரை அமரவைக்கும், மறைமுக கொள்கை என்னும் ராஜதந்திரமே, காங்கிரஸ் கட்சிக்கு குழி பறித்துக்கொண்டு இருக்கிறது.