கூட்டணியில் இருந்து காங்கிரசை விலக்க வேண்டும்: திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக!

தமிழகத்தை பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது இதுவரை வெற்றிக் கூட்டணியாகவே இருந்துள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில், இதுவரை தோல்வியை சந்திக்காத கூட்டணி என்றே சொல்லலாம்.

காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே அவ்வப்போது சிற்சில உரசல்கள் வந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இதுவரை வெற்றிக் கூட்டணியாகவே இருந்துள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சியை பிடிக்கும் நிலையில் இல்லை என்றாலும், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கென்று கணிசமான வாக்குகள் உள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில், வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. இதுவும், திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இதன் காரணமாகவே, கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், இடது சாரிகள் போன்ற கட்சிகளுக்கும் ஓரளவு பிரதிநிதித்துவம் கிடைத்தது. அது தேசிய அளவில், காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளுக்கு வலு சேர்ப்பதாகவும் இருந்தது.

ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு, திமுகவே காரணம் என்பதை அறிந்து, காங்கிரஸ் கட்சியை அந்த கூட்டணியை விட்டு விலக்க, பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி க்கள், பிரதமர் மோடியை சந்தித்து, தமிழக பிரச்சனைகளை குறித்த கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அப்போது, பிரதமர் மோடி,  காங்கிரசை ஏன் இன்னும் தூக்கி சுமக்கிறீர்கள்? அது நாட்டுக்கும் நல்லதல்ல, உங்களுக்கும் நல்லதல்ல என்று பட்டதும் படாததுமாக கூறியதாக சொல்லப்பட்டது.

மேலும், 2ஜி அலைக்கற்றை, ஏர்செல் மேக்சிஸ் உள்ளிட்ட திமுக மீதுள்ள வழக்குகள் அனைத்தும், பாஜக தொடுத்த வழக்குகள் அல்ல. அனைத்தும் காங்கிரஸ் தொடுத்த வழக்கே. ஆகவே, காங்கிரஸ் கட்சியை விலக்கி வையுங்கள் என்று பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த 10 ம் தேதி, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய அரசுக்கு  டி.ஆர்.பாலு மீண்டும் ஒரு கடிதத்தை எழுதி உள்ளார். இந்த நிகழ்வு, திமுக-பாஜக இடையே உள்ள அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றமாகவே கருதப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில், திமுக – பாஜக கூட்டணி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று உறுதியாக சொல்லலாம். ஆனாலும், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து, திமுக விலக்க வேண்டும் என்று பாஜக நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசையும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை அகற்றுவதே, பாஜகவுக்கு நல்லது என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு, திமுக தரப்பில் இருந்து நேரடியாக எந்த பதிலும் இதுவரை இல்லை. ஆனாலும், வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க வேண்டும் என்று, தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஆலோசனை, இதை உறுதிப்படுத்தவதாகவே இருப்பதாக மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கொரோனா ஊரடங்கு, அரசியல் கள நிகழ்வுகளை தடுத்தாலும், பின்னணியில் அரங்கேறும் ராஜ தந்திர நடவடிக்கைகளை தடுக்கவில்லை.

அதனால், வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.