“ஒத்தக்காளை” …. பாகம்  – 7 (நிறைவு பகுதி) :  குறு நாவல்!

-ராஜேந்திரன்

பத்து நிமிட வாசிப்பு….

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று தவிக்கும் வேலாயுதம், தரகர் ரங்கசாமி என்ன சொல்கிறார்? என்று ஆர்வமாக கேட்க ஆரம்பித்தார்.

நம்ம வீட்டுல உள்ளவங்களுக்கோ, சொந்தக் காரங்களுக்கோ, உயிருக்கு ஆபத்தான நெலம வந்தா? நாம என்ன செய்வோம். ஆடு மாடுங்கள கோயிலுக்கு நேர்ந்து விட்டு, அத பலி குடுப்போம். ஆனா, அதுக்கு முன்னாடி ஆடு மாடுங்கள, நாம குடும்பத்துல ஒருத்தவங்க மாதிரி தானே பாத்துக்குவோம்.

அப்படித்தான், இப்போ அக்காவ காப்பாத்துறதுக்கு, ஒங்க தொழுவத்துல கட்டி இருக்குற அந்த காள மாட்ட வித்தா என்ன? என்று கேட்டார்.

அதைக்கேட்டு, வேலாயுதத்தின் சுவாசமே நின்று விடும் போல இருந்தது. என்ன சொல்ற ரங்கசாமி, என்னோட புள்ள மாதிரி வளர்த்த அந்த மாட்ட விக்கணுமா? அதுக்கு முன்னாடி நான் செத்துப் போறதே மேல என்று கோபத்தில் கத்தினார் வேலாயுதம்.

எனக்கு மட்டும் தெரியாதா மாமா? நான் என்ன தரகுக்காரன் மாதிரி கமிஷன் கெடைக்கும்ன்னா பேசுறேன். அக்காவ காப்பாத்துறதுக்கு இத விட எனக்கு வேற வழி தெரியல? என்று மீண்டும் கண் கலங்க சொன்னான் ரங்கசாமி.

இந்த ஒத்த மாட்ட, அதுவும் வயசான மாட்ட வாங்கிட்டு போறவன், நிச்சயமா அத அடிமாட்டுக்குதானே அனுப்புவான். அப்புறம் அந்த மாட்ட கொன்னு திங்கிறதுக்காகவா.. இவ்வளவு நாளா, புள்ளைங்க மாதிரி வளர்த்தேன் என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் வேலாயுதம்.

நான் இத மனசு வந்து சொல்லல மாமா. அந்த மாட்ட எப்படி எல்லாம் நீங்க வச்சி காப்பாத்துறீங்கன்னு எனக்கு தெரியாதா? இப்போ அக்காவ காப்பாத்துறதுக்கு.. எனக்கு தெரிஞ்ச வழி அது ஒண்ணுதான் என்று முடித்துக் கொண்டான் ரங்கசாமி.

மேலும், நான் ஒங்கள கட்டாயப்படுத்துல மாமா.. நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க. இப்போதைக்கு என்னதான் சொன்னாலும், அது இருநூத்து அம்பது ரூவைக்கும் மேல விக்காது. இருந்தாலும், எப்படியாவது கெஞ்சி கூத்தாடி ஒரு முன்னூறு ரூவா வாங்கி கொடுத்துடுறேன். நீங்க நல்லா யோசிச்சி, முடிவு பண்ணி நாளைக்கு காலையில சொல்லுங்க என்றான் ரங்கசாமி.

அதைக்கேட்டு, அங்கு உட்கார கூட மனமில்லாமல், விறுக்குன்னு கிளம்பி வீட்டுக்கு வந்தார் வேலாயுதம்.

வரும்போதே, நீயும் ஒன்னோட சோடி மாதிரி, பாம்பு கடிச்சி செத்து போயிருக்க கூடாதா?. இன்னிக்கி நீ உயிரோட இருக்குறதால தானே, ஒன்ன கொன்னு, வள்ளிய காப்பாத்தணும்’ங்குற எண்ணம் வருது என்று மனதுக்குள்ளேயே குமைந்தார்.

வள்ளிய காப்பாத்த, ஒத்தக்காளைய பலி கொடுத்து ஆகணுமா? அதை நெனைக்கும் போதே.. உயிர் போன மாதிரி இருந்தது அவருக்கு.

இப்படி ஒரு ஜென்மம் இனி உசுரோட இருக்கிறதுக்கு பதில் செத்து போயிடலாம்னு அவர் மனசாட்சி உறுத்தியது.

நேரா ஐயா படம் இருக்குற அறைக்கு வந்தார். நீங்க உசுரோட இருக்குற வரைக்கும் எனக்கு எந்த கவலையுமே தெரியாம வளர்த்தீங்க. செத்த பிறகும், நான் கஷ்டப்படக் கூடாதுன்னு, நெலமும் என்னோட பேருல எழுதிக் குடுக்க சொன்னீங்க. ஒங்க புள்ளைங்களும், மாட்டையும் குடுத்து வண்டியையும் குடுத்தாங்க. இப்படி நான் கேக்காமலே எல்லாத்தையும் குடுத்த நீங்க, ஏன் இப்படி என்ன இவ்வளவு துன்பத்துக்கு ஆளாக்கிட்டீங்க?’ன்னு சொல்லி, அவர் படத்துக்கு எதிரே உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தார்.

இருட்டும் வரை, அவர் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ராந்தரை எடுத்துக் கொண்டு, மாட்டுத் தொழுவத்துக்கு போனார்.

வேலாயுதம் வருவது தெரிந்து, அங்கு படுத்திருந்த அந்த ஒத்தக்காளை தட்டுத் தடுமாறி ரொம்பவே முயற்சி செய்து ஒரு வழியாக எழுந்து நின்றது.

அதன் அருகே போய். அதோட தலையில ஆரம்பிச்சி வால் வரைக்கும் அப்படியே உத்து பார்த்தார். பிறகு, அதோட முதுகுல கைய வச்சி  செல்லமா வருடி குடுத்தார். அப்பறமா, அது கழுத்துல கைய வச்சி கட்டிப்புடிச்சி ரெண்டு கன்னத்துலேயும் முத்தம் கொடுத்தார். அவரோட ஸ்பரிசம் அதுக்கு ரொம்ப ஆறுதலா இருந்திருக்கும்.

****************

ஐயா பண்ணையில் இருக்குற தொழுவத்துல, இந்த காள கண்ணு பொறந்த நாள்ல இருந்து, இன்னிக்கு வரைக்கும், அத முழுசா தெரிஞ்ச ஒரே ஆளு வேலாயுதம்தான்.

தாய்ப்பசு, கண்ணு போட்ட உடனே, இந்த கன்னுக்குட்டி  தடுமாறி எழுந்து நின்னது, தாய்ப் பாலோட, பருத்திக்கொட்டை பால புட்டியில போட்டு அதுக்கு குடுத்தது எல்லாமே வேலாயுதம்தான். அது கன்னுக்குட்டியா இருக்குறப்போ, மண்ணை திங்காம இருக்குறதுக்காக, அது வாயில, மூங்கில் புட்டிய கட்டி விட்டதெல்லாம் இப்போ அவருக்கு ஞாபகம் வந்தது.

அது, வளர்ந்த பிறகு அதுக்கான சோடிய தேடிப் புடிச்சி வாங்குனது, மொதன் மொதல்ல மூக்கணாங்கயிறு போட்டது, லாடம் கட்டுனது, அதுக்கும் செத்துப்போன அதோட சோடிக்கும் சேர்த்து சலங்கை வாங்குனது, பந்தயத்துக்கு பழக்கியது, பந்தயத்துல ஜெயிச்சது. சந்தைக்கி போனபோது தடுமாறி விழுந்த தன்மேல சக்கரம் ஏறி  செத்து போகாம காப்பாத்துனதுன்னு அந்த காளையோட பழைய ஞாபகம் எல்லாம் காட்சிகளா அவரு மனசுல ஓட ஆரம்பிச்சது.

ஒன்னோட வாழ்நாள் முழுக்க, ஐயா மாதிரியே, எனக்கு நல்லத தவற வேற எதையும் நீ செஞ்சதே இல்ல. ஆனா, இன்னைக்கி பாழா போன பணத்துக்காக, ஒன்ன அடிமாட்டுக்கு போடணும்’னு ஒருத்தன் சொல்ற அளவுக்கு என்னோட நிலைமை ஆயிடுச்சேன்னு மீண்டும் ஒரு சிறு குழந்தையை போல அழுதார்.

வேலாயுதத்தின் துக்கம் அதற்கு தெரிந்ததோ என்னவோ.. கண்கள் பழுதாகி, உடல் தளர்ந்து நின்ற ஒத்தக்காளை, தன்னுடைய நாக்கால், அவர் கைகளை நக்கியது. அது, பங்காளி வண்டிய ஜெயிச்சபோது, ஐயா முதுகுல வருடிக் கொடுத்தது போல இருந்தது வேலாயுதத்துக்கு.

அப்படியே கையில் வைத்திருந்த லாந்தரை சற்று தள்ளி வைத்தார். மாட்டு தொழுவத்தின் அருகே ஒரு சாக்கை விரித்தார். அதன் மீது துண்டை விரித்து படுத்தார்.

அந்த இரவின் அமைதியில் மாடு விடும் மூச்சு மட்டுமே அவருக்கு கேட்டது. மல்லாந்து படுத்துக் கொண்டே கண் மூடினார்.

எவ்வளவு நேரம் தூங்கினார் என்று தெரியவில்லை. திடீரென அடித்து பிடித்து எழுந்து திருதிருவென முழித்தார். விடியற்காலை கூட இல்லை நள்ளிரவு நேரம்தான்.

ஐயா கூப்பிட்ட மாதிரி இருந்ததே என்று யோசித்து.. அடப்பாவமே இவ்வளவு நேரம் கனவு கண்டோமா? என்று சுதாரித்துக் கொண்டார்.

ஐயாவின் கடைசி நாள். அவர் கண்ட கனவை வேலாயுதத்திடம் சொன்னார். மறுநாள், ஐயாவின் உயிர் தூக்கத்திலேயே போய் விட்டது.

அதே போல, வேலாயுதம் கனவுல இன்னிக்கி ஐயா வந்துட்டாரு… எண்டா வேலாயுதம் இவ்வளவு கஷ்டப்படுற? நீ படுற கஷ்டத்த என்னால சகிக்க முடியலடா.. சீக்கிரம் எங்கிட்ட வாடா… நீ இல்லாம என்னால இருக்க முடியலேடா?ன்னு சொன்னாரு.

இதை யாரிடம் சொல்வது… என்று தவித்த அவர், இனி.. நான் இங்கே படுக்க மாட்டேன்.. என்று சொல்லிக் கொண்டே ஐயா படம் இருக்கும் அறைக்கு ஓடினார். ஐயாவின் படத்தை எடுத்து, நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொண்டு அப்படியே கண் மூடினார்.  (முற்றும்).